அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அறிமுகப்படுத்திய 'கோல்ட் கார்டு' (Gold Card) விசா திட்டத்தில் இதுவரை ஒரே ஒரு நபருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் ஹோவர்ட் லட்னிக் தெரிவித்துள்ளார். வெளிநாட்டினர் சுமார் 1 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 8.3 கோடி ரூபாய்) முதலீடு செய்தால் அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக வசிக்கவும், வேலை செய்யவும் இந்தத் திட்டம் வழிவகை செய்கிறது. கடந்த டிசம்பர் மாதம் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டபோது, சில நாட்களிலேயே பல கோடி டாலர் மதிப்பிலான விற்பனை நடந்துள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது ஒரே ஒருவருக்கு மட்டுமே விசா கிடைத்துள்ளது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
அதிபர் ட்ரம்ப் இந்தத் திட்டத்தை 'கிரீன் கார்டின் பவர்ஃபுல் வெர்ஷன்' என்று வர்ணித்திருந்தார். கடந்த ஆண்டு இந்த யோசனையை முன்வைத்தபோது, ஒரு விசாவுக்கு 5 மில்லியன் டாலர் வரை கட்டணம் வசூலிக்கலாம் என்று அவர் முதலில் பரிந்துரைத்தார். இதன் மூலம் வெளிநாடுகளில் உள்ள பெரும் முதலீட்டாளர்களையும், திறமைசாலிகளையும் அமெரிக்காவிற்கு ஈர்க்க முடியும் என்றும், அதன் மூலம் நாட்டின் கஜானாவை நிரப்பலாம் என்றும் ட்ரம்ப் திட்டமிட்டார். பல தசாப்தங்களாக நடைமுறையில் இருந்த EB-5 விசா திட்டத்திற்கு மாற்றாகவே இந்த நவீன 'கோல்ட் கார்டு' கொண்டு வரப்பட்டது.
தற்போது ஒருவருக்கு மட்டுமே அனுமதி கிடைத்துள்ள போதிலும், நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாக அமைச்சர் லட்னிக் நாடாளுமன்றக் கூட்டத்தில் விளக்கம் அளித்துள்ளார். இந்தத் திட்டத்தை மிகச் சரியாகச் செயல்படுத்த வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருப்பதாகவும், அதனால்தான் ஒவ்வொரு விண்ணப்பத்தையும் தீவிரமாக ஆய்வு செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் அமெரிக்காவின் பட்ஜெட் பற்றாக்குறையைச் சரிசெய்ய உதவும் என்று அரசாங்கம் நம்புகிறது. குறிப்பாக அமெரிக்காவின் கடன் சுமை அதிகரித்து வரும் சூழலில், இத்தகைய முதலீட்டுத் திட்டங்கள் கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் ஒவ்வொரு நபரும் 1 மில்லியன் டாலர் முதலீடு செய்வதுடன், கூடுதலாக 15 ஆயிரம் டாலர் கட்டணமாகச் செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்களின் பின்னணியைத் தீவிரமாகச் சோதனை செய்த பின்னரே அவர்களுக்கு அமெரிக்கக் குடியுரிமை பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். அதேபோல், நிறுவனங்கள் தங்கள் வெளிநாட்டு ஊழியர்களுக்காக 2 மில்லியன் டாலர் செலுத்தி இந்த விசாவைப் பெற்றுத் தரவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காகத் தொடங்கப்பட்டுள்ள பிரத்யேக இணையதளத்தில் 'அமெரிக்க வாழ்க்கையைத் திறங்கள்' (Unlock life in America) என்ற வாசகத்துடன் தங்க நிறத்திலான கார்டு விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தில் அடுத்த கட்டமாக 'ட்ரம்ப் பிளாட்டினம் கார்டு' (Trump Platinum Card) குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன. இதன் விலை 5 மில்லியன் டாலராக நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. இதன் மூலம் அமெரிக்காவிற்கு வெளியே ஈட்டும் வருமானத்திற்கு வரி செலுத்தாமல், சுமார் 270 நாட்கள் அமெரிக்காவில் தங்கியிருக்க முடியும். சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களை வெளியேற்றுவதில் தீவிரமாக இருக்கும் ட்ரம்ப், அதே சமயம் வசதி படைத்த மற்றும் திறமை வாய்ந்த வெளிநாட்டினரை அமெரிக்காவிற்குள் கொண்டு வருவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
உலகம் முழுவதும் இங்கிலாந்து, ஸ்பெயின், கிரீஸ், ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற பல நாடுகள் இது போன்ற 'கோல்டன் விசா' திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. ஈரானிலிருந்து இந்தியா வரை பல நாட்டுப் பணக்காரர்கள் அமெரிக்காவில் செட்டில் ஆக இந்தத் திட்டத்தைப் பயன்படுத்த வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் சேகரிக்கப்படும் பணம் அமெரிக்காவின் நலத்திட்டங்களுக்காகவும், நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் பயன்படுத்தப்படும் என்று அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இவ்வளவு அதிக கட்டணம் வசூலிக்கும் இந்தத் திட்டம் சாதாரண மக்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.