சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, சீனா தனது அபாரமான வளர்ச்சியால் அமெரிக்காவை முந்தி உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறிவிடும் என்று கணிக்கப்பட்டது. கொரோனா பெருந்தொற்றை சீனா மிகச் சாமர்த்தியமாக கையாண்டது என்று பலரும் பாராட்டினர். ஆனால், ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், சீனா அந்த இலக்கை எட்டுவது இப்போது கேள்விக்குறியாகியுள்ளது. சீனாவின் தற்போதைய பொருளாதாரத் தரவுகள், அந்த நாட்டின் வளர்ச்சிப் பாதை மந்தமடைந்துள்ளதை உறுதி செய்கின்றன. தொழிற்சாலை உற்பத்தி மற்றும் சில்லறை விற்பனை என அனைத்துத் துறைகளிலும் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, 2021-ல் உச்சத்தில் இருந்த சீன ரியல் எஸ்டேட் துறை, இப்போது பாதிக்கும் மேலாகச் சரிந்துவிட்டது.
ரியல் எஸ்டேட் துறை சரிந்ததால், லட்சக்கணக்கான சாதாரண சீன மக்களின் சேமிப்பு கரைந்து போனது. இதனால், வீடுகளுக்காக வாங்கிய கடன் சுமையால் மக்கள் புதிய பொருட்களை வாங்குவதைத் தவிர்த்து வருகின்றனர். ஒரு காலத்தில் சீனர்களின் கனவாக இருந்த கார் வாங்கும் ஆர்வம் கூட இப்போது குறைந்துவிட்டது. எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் பிஒய்டி (BYD) நிறுவனத்தின் லாபம் கூட சமீபத்தில் 55 சதவீதம் குறைந்து, கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. சீனர்கள் பொருட்களை வாங்குவதில்லை, ஆனால் அந்நாட்டு தொழிற்சாலைகள் தொடர்ந்து உற்பத்தி செய்து பொருட்களை வெளிநாடுகளுக்குக் குவித்து வருகின்றன.
சீனாவின் வளர்ச்சி என்பது முழுக்க முழுக்க ஏற்றுமதியை மட்டுமே நம்பி இருக்கிறது. அமெரிக்கா அல்லது இந்தியா போன்ற நாடுகளில் பொருளாதாரத்தின் பெரும்பகுதி உள்நாட்டு நுகர்வை (Internal consumption) நம்பி இருக்கிறது. ஆனால், சீனாவில் மக்கள் வாங்கும் திறன் குறைவாக இருப்பதால், அவர்களால் உள்நாட்டில் பொருட்களை விற்க முடிவதில்லை. இது ஒரு உடைந்த பொருளாதார மாதிரி (Broken Model) என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். தேவையை விட அதிகப் பொருட்களைத் தயாரிப்பதால், விலையைக் குறைத்து விற்க வேண்டிய கட்டாயத்தில் சீனா உள்ளது. இது அந்நாட்டின் லாபத்தைச் சிதைத்து வருகிறது.
சீனாவின் பொருளாதாரத்தை மிக மோசமாகப் பாதிக்கும் உண்மையான 'டைம் பாம்' (Time Bomb) எது தெரியுமா? அதுதான் அந்நாட்டின் கடன் சுமை. சீனா வெளியிடும் அதிகாரப்பூர்வ கணக்குப்படி கடன் குறைவாகத் தெரிந்தாலும், மறைமுகமாகச் செயல்படும் அரசு நிதி ஆதாரங்களையும் சேர்த்துப் பார்த்தால், சீனாவின் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 9 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. சீனாவின் ஒட்டுமொத்த கடன் சுமை 300 சதவீதத்தைத் தாண்டிவிட்டது. வட்டி கட்டுவதற்கே சீனா பெரும் தொகையைச் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இவற்றுடன் மக்கள் தொகை நெருக்கடியும் சீனாவை வாட்டுகிறது. மாசேதுங் காலத்திற்குப் பிறகு இல்லாத அளவிற்குப் பிறப்பு விகிதம் இப்போதுதான் மிகக் குறைவாக உள்ளது. அடுத்த பத்தாண்டுகளில், குஜராத் மாநிலத்தின் மக்கள் தொகைக்கு இணையாக சுமார் 6 கோடி மக்களை சீனா இழக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இளைஞர்கள் குறைந்து வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது சீனாவின் எதிர்காலத்திற்குப் பெரிய தடையாக இருக்கும்.
ஈரான் போர் போன்ற உலகளாவிய அரசியல் சூழல்களால் சீனா சில லாபங்களை அடைந்தாலும், மறுபுறம் பிளாஸ்டிக் மற்றும் எரிபொருள் விலை உயர்வால் அந்நாட்டுத் தொழிற்சாலைகள் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் வேலை இழந்து தெருவில் போராடும் சூழல் உருவாகியுள்ளது. ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் சீனா முதலீடு செய்திருந்தாலும், அங்கே சீனா ஒரு 'காலனித்துவ' நாடாகவே பார்க்கப்படுகிறது. மலிவான சீனப் பொருட்களால் உள்ளூர் தொழில்கள் நசுக்கப்படுவதால், அந்த நாடுகளில் சீனாவுக்கு எதிரான வெறுப்புணர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒட்டுமொத்தத்தில், சீனப் பொருளாதாரத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே மாறியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.