ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய மிகக்கடுமையான வான்வழித் தாக்குதலில், போதைப்பொருள் மறுவாழ்வு மருத்துவமனை ஒன்று முழுமையாகத் தகர்க்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்ற இந்தத் தாக்குதலில், குறைந்தது 400 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 250-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சுமார் 2,000 படுக்கை வசதிகள் கொண்ட அந்த மருத்துவமனையின் பெரும்பகுதி தரைமட்டமானதால், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்தக் கொடூரச் சம்பவத்திற்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, நட்சத்திர வீரர் ரஷீத் கான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் விடுத்துள்ள செய்தியில், "காபூலில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவக் கட்டமைப்புகளை இலக்கு வைப்பது ஒரு போர் குற்றமாகும். புனிதமான ரமலான் மாதத்தில் மனித உயிர்களுக்கு மதிப்பளிக்காமல் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமை அமைப்புகள் இது குறித்து விரிவான விசாரணை நடத்தி, குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் முகமது நபியும் இந்தச் சம்பவத்திற்குத் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர்கள் பாகிஸ்தான் ராணுவத்தின் குண்டுவீச்சில் கொல்லப்பட்டிருப்பது ஏற்க முடியாத ஒன்று என அவர் குறிப்பிட்டுள்ளார். ரமலான் மாதத்தின் 28-வது இரவில் இத்தகைய துயரம் நிகழ்ந்திருப்பது அந்நாட்டு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கான் அரசு செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறுகையில், பாகிஸ்தான் ராணுவம் சர்வதேச விதிமுறைகளை மீறி பொதுமக்களுக்கான இடங்களைத் தாக்கி வருவதாகக் குற்றம் சாட்டினார்.
இருப்பினும், பாகிஸ்தான் அரசு இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. பாகிஸ்தான் தகவல் துறை அமைச்சர் அத்தாவுல்லா தரார் கூறுகையில், "காபூல் மற்றும் நங்கர்ஹார் மாகாணங்களில் உள்ள ராணுவ நிலைகளை இலக்காகக் கொண்டே துல்லியமான வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாகச் செயல்படும் உள்கட்டமைப்புகள் மற்றும் வெடிபொருட்கள் சேமிப்பு வசதிகள் மட்டுமே அழிக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை" என்று விளக்கம் அளித்துள்ளார்.
தற்போது ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே எல்லைப் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வான்வழித் தாக்குதல் மற்றும் அதில் ஏற்பட்டுள்ள பெருமளவிலான உயிரிழப்புகள் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரமலான் மாதத்தில் மருத்துவமனை மீதான இத்தாக்குதல் மனித நேயத்திற்கு எதிரானது என பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்