உடல்நிலை சரி இல்லை என்று விடுப்பு கேட்ட ஊழியருக்கு விடுப்பு வழங்காத நிலையில் உடல்நிலை சரியில்லாமல் போக அலுவலகத்திலேயே உயிரிழந்தது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அலுவலகத்திற்குள் 29 வயதான பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தென்னாப்பிரிக்கா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணின் குடும்பத்தினர் இதற்கான பதில்களைக் கோரி வருகின்றனர். வாகனங்களைக் கண்காணிக்கும் நிறுவனமான கார்ட்ராக்கின் ரோஸ்பேங்க் அலுவலகத்தில் ஜூன் 6 அன்று ஜினா த்லாத்லா உயிரிழந்துள்ளார். அவர் பலமுறை உடல்நல விடுப்பு கோரியதாகவும், ஆனால் அவரது மேற்பார்வையாளர்கள் அதை மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
பின்னர், ஜூன் 6 சனிக்கிழமையன்று, ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள தனது நிறுவனத்தின் அலுவலகக் கட்டிடத்தில் இருந்த கழிவறைக்குள் த்லாத்லா சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார். சோவெட்டன் என்ற உள்ளூர் செய்தி இணையதளத்தின்படி, த்லாத்லா சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கார்ட்ராக்கில் ஒரு அழைப்பு மைய முகவராகச் பணியமர்த்தப்பட்டிருக்கிறார். சமீபத்தில், அவர் அதிகப்படியான வேலைப்பளு மற்றும் சோர்வு குறித்து அலுவலகத்தில் புகாரும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
த்லாத்லா தனது மரணத்திற்கு முந்தைய நாட்களில், தனக்கு உடல்நிலை சரியில்லை என்று தனது மேற்பார்வையாளர்களிடம் பலமுறை கூறியதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். அப்படியிருந்தும், கார்ட்ராக் நிறுவனம் அவர் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியதுடன், வலி நிவாரணி மருந்துகளை வாங்க அவருடன் வருவதாக கூறியுள்ளது.
மேலும், அவரது அத்தை நோமுசா த்லாத்லா, சோவெட்டன் பத்திரிகையிடம், அவர் இறப்பதற்கு முந்தைய இரண்டு வாரங்களில் இரண்டு மருத்துவ விடுப்புச் சீட்டுகளைச் சமர்ப்பித்ததாகக் கூறினார். த்லாத்லா உடல்நலக்குறைவு மற்றும் கடுமையான சோர்வு குறித்துப் புகார் அளித்தபோதிலும், அவர் தொடர்ந்து பணிக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும், அவரது மருத்துவ விடுப்புக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் அவரது குடும்பத்தினர் மிகுந்த வருத்தத்துடன் கூறப்பட்டுள்ளது.
"த்லாத்லா மிகவும் சோர்வடைந்து, மனதளவில் முற்றிலும் தளர்ந்து போயிருந்தார். அவரிடம் எந்த ஊக்கமும் இல்லை. போதுமான ஓய்வின்றி, வார இறுதி நாட்கள் உட்பட, அவர் நீண்ட நேரம் வேலை செய்து வந்தார். தலைவலி இருந்தாலும் அவர் வேலைக்குச் செல்வார்," என்று நோமுசா தெரிவித்துள்ளார்.
அவருடைய உடல்நல விடுப்பு கோரிக்கைகளை நிராகரித்த பின்னர், நிறுவனம் அவருக்கு எச்சரிக்கை விடுத்ததாக த்லாத்லாவின் அத்தை மேலும் கூறினார். இதை அவருடைய தாயார் உறுதிப்படுத்தினார். உடல்நல விடுப்புக் கொள்கையை 'துஷ்பிரயோகம் செய்ததற்காக' த்லாத்லாவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
"திங்கட்கிழமை, உடல்நிலை சரியில்லை என்று தெரிவித்து, மருத்துவரின் சான்றிதழையும் வழங்கியிருந்தபோதிலும், பணிக்குத் திரும்பும்போது தனக்கு எச்சரிக்கை விடுக்கப்படும் என்று அவர் என்னிடம் கூறினார். உண்மையில், அவர்கள் அவருக்கு எச்சரிக்கை விடுத்தனர்," என்று நோமுசா கூறினார். வலி நிவாரணிப் பொடிகளை உட்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே, ஜினா த்லாத்லா அலுவலகத்தில் உள்ள கழிவறை அறையில் சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
அவர் சரிந்து விழுந்தது குறித்து கார்ட்ராக் தங்களுக்குத் தெரிவிக்கவில்லை என்றும், அவசர மருத்துவப் பணியாளர்களைத் தொடர்புகொள்வதில் தாமதம் செய்ததாகவும் த்லாத்லாவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
உடல்நலக்குறைவால் உயிரிழந்த ஊழியர் வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளை கார்ட்ராக் நிறுவனம் மறுத்துள்ளது. கார்ட்ராக் நிறுவனத்தின் பெருநிறுவன விவகாரங்கள் இயக்குநரான லாரன் ஹியூமன், த்லாத்லா நோய்வாய்ப்பட்டபோது, பயிற்சி பெற்ற முதலுதவிப் பணியாளர்கள் அவருக்கு உடனடி உதவியை வழங்கினர் என்றும் கூறினார். தற்போது இந்த நிகழ்வு உலகெண்டிலும் உள்ள பணிச்சுமை குறித்தும், மேலாளர்கள் அழுத்தம் குறித்தும் மிகப்பெரிய விவாதத்தை எழுப்பியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.