உலகம்

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு.. 27 கால சாதனையின் முடிவு! அவருக்குக் கிடைக்கப்போகும் ஓய்வூதியம் இத்தனை கோடிகளா?

சுமார் 36 லட்சம் ரூபாய் (43,200 டாலர்) ஓய்வூதியமாக வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது....

மாலை முரசு செய்தி குழு

நாசாவின் (NASA) மூத்த மற்றும் புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், தனது 27 ஆண்டு கால வியக்கத்தக்க விண்வெளிப் பயணத்தை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்துள்ளார். கடந்த டிசம்பர் 27, 2025 அன்று அவர் விண்வெளிப் பணியிலிருந்து ஓய்வு பெற்றதாக நாசா உறுதிப்படுத்தியுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸின் இந்த ஓய்வு, விண்வெளி ஆய்வு வரலாற்றில் ஒரு சகாப்தத்தின் முடிவாகப் பார்க்கப்படுகிறது.

தனது பணிக்காலத்தில் மூன்று முறை சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றுள்ள அவர், ஒட்டுமொத்தமாக 608 நாட்களை விண்வெளியில் கழித்துள்ளார். இது நாசா விண்வெளி வீரர்களின் வரலாற்றில் இரண்டாவது அதிகப்படியான கால அளவாகும். அதுமட்டுமின்றி, ஒன்பது முறை விண்வெளியில் நடைப்பயணம் (Spacewalk) மேற்கொண்டு, மொத்தம் 62 மணிநேரம் 6 நிமிடங்கள் விண்கலத்திற்கு வெளியே செலவிட்டுள்ளார். ஒரு பெண் விண்வெளி வீராங்கனையால் மேற்கொள்ளப்பட்ட அதிகப்படியான விண்வெளி நடைப்பயணம் இதுவே ஆகும். இவ்வளவு சாதனைகளைச் செய்த சுனிதா வில்லியம்ஸிற்கு ஓய்வுக்குப் பிறகு என்னென்ன சலுகைகள் கிடைக்கும் என்பதுதான் இப்போது பலரின் கேள்வியாக உள்ளது.

சுனிதா வில்லியம்ஸிற்கு நாசா நேரடியாக ஓய்வூதியம் வழங்காது. மாறாக, அமெரிக்காவின் 'கூட்டாட்சி ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின்' (FERS) கீழ் அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். அவரது 27 ஆண்டு காலப் பணி மற்றும் அவர் பெற்ற அதிகப்படியான ஊதியத்தின் அடிப்படையில் இது கணக்கிடப்படுகிறது. சுனிதா வில்லியம்ஸ் வகித்த உயரிய பதவி மற்றும் அவரது ஆண்டு வருமானம் (சுமார் 1.20 கோடி முதல் 1.30 கோடி ரூபாய் வரை) ஆகியவற்றைக் கணக்கில் கொண்டால், அவருக்கு ஆண்டுதோறும் சுமார் 36 லட்சம் ரூபாய் (43,200 டாலர்) ஓய்வூதியமாக வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க கடற்படையில் அவர் பணியாற்றிய காலமும் இதனுடன் சேர்த்துக் கொள்ளப்படும்.

ஓய்வூதியம் தவிர, அமெரிக்காவின் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் (Social Security Scheme) கீழ் அவருக்குத் தனியாக மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும். மேலும், அவர் தனது பணிக்காலத்தில் சேமித்த 'திரிஃப்ட் சேவிங்ஸ் பிளான்' (TSP) முதலீடுகளிலிருந்தும் வருமானத்தைப் பெறுவார். இது தவிர, வாழ்நாள் முழுவதும் மத்திய அரசின் மருத்துவக் காப்பீடு, ஆயுள் காப்பீடு மற்றும் விண்வெளிப் பயணத்திற்குப் பிந்தைய உடல் நலம் மற்றும் உளவியல் ரீதியான மருத்துவ உதவிகளையும் அவர் தொடர்ந்து பெறுவார். விண்வெளித் துறையில் ஒரு முன்னோடியாகத் திகழும் சுனிதா வில்லியம்ஸின் ஓய்வுக்காலமும் அவரது சாதனைகளைப் போலவே கௌரவமானதாக அமையவுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.