அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப், பல ஆண்டுகளாக தன்னைப்பற்றி தவறான செய்திகளைப் பரப்பி வருவதாகக் கூறி, பிரபல அமெரிக்கப் பத்திரிகையான 'தி நியூயார்க் டைம்ஸ்' மீது அவர் 15 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.12,500 கோடி) மதிப்புள்ள மானநஷ்ட வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
"இந்த நாளிதழ், தீவிர இடதுசாரி ஜனநாயகக் கட்சியின் வெறும் ஒரு குரலாக மட்டுமே செயல்படுகிறது," என்று டிரம்ப் குற்றம் சாட்டினார். மேலும், பல ஆண்டுகளாக தனக்கு எதிராக பொய்களைக் கொண்ட ஒரு திட்டமிட்ட பிரச்சாரத்தை 'தி நியூயார்க் டைம்ஸ்' நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து சமூக ஊடக தளமான X-ல் ஒரு பதிவில், "நமது நாட்டின் வரலாற்றிலேயே மிக மோசமான பத்திரிகைகளில் ஒன்றான 'தி நியூயார்க் டைம்ஸ்' மீது இந்த வழக்கை தாக்கல் செய்வதில் நான் பெருமைப்படுகிறேன்," என்று டிரம்ப் குறிப்பிட்டார்.
டிரம்ப், அவரது குடும்பம், அவரது தொழில்கள், மற்றும் "அமெரிக்கா முதலில்" (America First) மற்றும் "அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குவோம்" (MAGA) போன்ற இயக்கங்களைப் பற்றி அந்தப் பத்திரிகை தொடர்ந்து பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். ஏபிசி மற்றும் சிபிஎஸ் போன்ற மற்ற ஊடகங்களும் இதே பாணியைப் பின்பற்றுவதாகவும், இது ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் சட்டவிரோதமானது என்றும் அவர் தெரிவித்தார்.
"ஒரு காலத்தில் மதிக்கப்பட்ட இந்த 'பத்திரிகைக்கும்' பொறுப்பு உள்ளது என்பதை நிரூபிப்பதில் நான் பெருமை கொள்கிறேன்," என்று கூறிய டிரம்ப், இதேபோல ஏபிசி மற்றும் சிபிஎஸ் மீது வழக்குத் தொடுத்து வெற்றி கண்டதையும் பற்றி நினைவுகூர்ந்தார். மேலும், "தி நியூயார்க் டைம்ஸ் என்னை அவதூறு செய்வதற்கும், பொய் சொல்வதற்கும் அதிக காலம் அனுமதிக்கப்பட்டது. அது இப்போது முடிவுக்கு வருகிறது!" என்று அவர் ஆவேசமாக கூறினார்.
இந்த வழக்கு புளோரிடா மாநிலத்தில் தொடரப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.