ஒரு காலத்தில் உலகம் முழுவதும் பிரபலமாக இருந்த சில தொழில்நுட்ப நிறுவனங்களின் பெயர்களை இன்றும் பலரால் மறக்க முடியாது. கையில் நோக்கியா போன், அலுவலகத்தில் பிளாக்பெர்ரி, வீட்டில் ஐபிஎம் கணினி என ஒரு காலத்தில் தொழில்நுட்ப உலகின் முக்கிய அடையாளங்களாக இருந்த நிறுவனங்கள் இவை. ஆனால் இன்று அந்த நிறுவனங்கள் முன்பு விற்ற அதே பொருட்களை தயாரிப்பதில்லை. மாறாக, காலத்துக்கு ஏற்ப தங்கள் தொழிலை முற்றிலும் மாற்றி அமைத்து, புதிய துறைகளில் தங்களை நிலைநிறுத்தி வருகின்றன.
தொழில்நுட்ப உலகில் மாற்றம் என்பது மிக வேகமாக நடைபெறும் ஒன்று. நேற்று அதிகம் விற்பனையான ஒரு பொருள், இன்று யாரும் பயன்படுத்தாததாக மாறிவிடலாம். இதை சரியாக புரிந்துகொள்ளாமல் பழைய வெற்றியையே நம்பிய நிறுவனங்கள் பல பின்னடைவை சந்தித்துள்ளன. அதே நேரத்தில், தங்களுடைய பழைய தொழிலை விட்டுவிட்டு புதிய வாய்ப்புகளை தேடிய சில நிறுவனங்கள் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியுள்ளன. அந்த வகையில் குறிப்பிடத்தக்க நிறுவனங்களில் ஒன்று பிளாக்பெர்ரி. ஒரு காலத்தில் அலுவலக பணியாளர்கள், தொழில் அதிபர்கள் என பலரின் விருப்பமான செல்போனாக இருந்தது Blackberry. அதன் தனித்துவமான கீபோர்டும் பாதுகாப்பான தகவல் பரிமாற்ற வசதிகளும் அதற்கு தனி அடையாளத்தை கொடுத்திருந்தன. ஆனால் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்கள் வேகமாக வளர்ந்தபோது பிளாக்பெர்ரியின் செல்போன் வணிகம் பின்னடைவை சந்தித்தது. 2016ஆம் ஆண்டில் நிறுவனம் தனது சொந்த செல்போன் தயாரிப்பை நிறுத்தியது.
அதன் பிறகு பிளாக்பெர்ரி முற்றிலும் வேறு பாதைக்கு மாறியது. தற்போது கார்களில் பயன்படுத்தப்படும் QNX மென்பொருள் தளம், நிறுவனங்கள் மற்றும் அரசுகளுக்கான பாதுகாப்பான தகவல் தொடர்பு மென்பொருள் உள்ளிட்ட துறைகளில் கவனம் செலுத்துகிறது. அதாவது, ஒருகாலத்தில் கையில் இருந்த Blackberry போன் இன்று கையில் இல்லாவிட்டாலும், அதன் தொழில்நுட்பம் பல்வேறு சாதனங்கள் மற்றும் நிறுவனங்களுக்குப் பின்னால் செயல்பட்டு வருகிறது. Nokia-வின் மாற்றம் இன்னும் பெரியது. 2000களில் உலகின் மிகப்பெரிய செல்போன் தயாரிப்பாளராக இருந்த நோக்கியா, ஸ்மார்ட்போன் காலத்தின் வேகமான மாற்றத்தை எதிர்கொள்ள முடியாமல் தனது மொபைல் போன் வணிகத்தை மைக்ரோசாஃப்டிடம் விற்றது. ஆனால் அதன்பிறகு நிறுவனம் காணாமல் போய்விடவில்லை. தொலைத்தொடர்பு கட்டமைப்பை மையமாகக் கொண்ட புதிய தொழிலாக தன்னை மாற்றிக்கொண்டது.
இன்று Nokia தயாரிக்கும் தொழில்நுட்பங்கள் செல்போன் கோபுரங்கள், இணைய இணைப்புகள், தரவு மையங்கள் உள்ளிட்ட தொலைத்தொடர்பு கட்டமைப்புகளுக்கு பின்னால் உள்ளன. செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் உலகம் முழுவதும் மிகப்பெரிய தரவு மையங்கள் உருவாகி வரும் நிலையில், அவற்றை இணைக்கும் அதிவேக வலைப்பின்னல் தொழில்நுட்பத்திலும் Nokia கவனம் செலுத்தி வருகிறது. 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், செயற்கை நுண்ணறிவு மற்றும் மேகக் கணினி தொடர்பான வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைத்த நோக்கியாவின் விற்பனை முந்தைய ஆண்டை விட 49 சதவீதம் உயர்ந்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிக்சனும் இதேபோன்ற மாற்றத்தை சந்தித்த நிறுவனம். 1990களில் செல்போன் சந்தையில் முக்கியமான பெயராக இருந்த Ericsson, மொபைல் போன் தயாரிப்பில் ஏற்பட்ட நஷ்டத்துக்குப் பிறகு தனது கவனத்தை தொலைத்தொடர்பு கட்டமைப்புக்கு மாற்றியது. 2001ஆம் ஆண்டு சோனியுடன் இணைந்து சோனி எரிக்சன் நிறுவனத்தை உருவாக்கியதும், பின்னர் அந்த கூட்டுத் தொழிலிலிருந்து வெளியேறியதும் அதன் மாற்றப் பயணத்தின் முக்கிய கட்டங்களாக அமைந்தன. இன்று எரிக்சன் 5ஜி மற்றும் எதிர்கால 6ஜி தொழில்நுட்பங்களுடன் தொலைத்தொடர்பு வலைப்பின்னல்களுக்கான கருவிகள் மற்றும் மென்பொருட்களில் கவனம் செலுத்துகிறது.
IBM-மின் பயணம் சற்று வேறுபட்டது. 1981ஆம் ஆண்டு தனிநபர் கணினியை அறிமுகப்படுத்திய நிறுவனங்களில் முக்கியமானதாக இருந்த ஐபிஎம், பின்னர் கணினி தயாரிப்பு துறையிலிருந்து படிப்படியாக வெளியேறியது. கணினிகள் பொதுவான பொருளாக மாறியதால் லாப விகிதம் குறைந்த நிலையில், நிறுவனம் சேவைகள், மென்பொருள் மற்றும் பெரிய நிறுவனங்களுக்கான கணினி தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியது. 2005ஆம் ஆண்டு தனது கணினி பிரிவை லெனோவாவுக்கு 1.75 பில்லியன் டாலருக்கு விற்றது. அதன்பிறகு ஐபிஎம்மின் முக்கிய கவனம் மென்பொருள், கலப்பு மேகக் கணினி, செயற்கை நுண்ணறிவு மற்றும் உயர் திறன் கொண்ட கணினி தொழில்நுட்பங்களாக மாறியது. 2019ஆம் ஆண்டு ரெட் ஹாட் நிறுவனத்தை 34 பில்லியன் டாலருக்கு வாங்கியதன் மூலம் மேகக் கணினி துறையில் தனது நிலையை மேலும் வலுப்படுத்தியது. தற்போது செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியையும் தனது பல்வேறு தொழில்களுடன் இணைத்து வருகிறது.
தைவானைச் சேர்ந்த HTC-யும் செல்போன் சந்தையில் ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகு வேறு பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு போன்களின் ஆரம்ப காலத்தில் முக்கிய நிறுவனமாக இருந்த எச்டிசி, பின்னர் மெய்நிகர் உலகம் மற்றும் விரிவாக்கப்பட்ட மெய்நிகர் தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியது. அதன் ‘விவ்’ பிரிவு மூலம் மெய்நிகர் உலக சாதனங்கள், உள்ளடக்க தளங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த சாதனங்களில் தற்போது செயல்பட்டு வருகிறது. ஜப்பானின் தோஷிபாவும் இதேபோன்ற மாற்றத்தை சந்தித்துள்ளது. ஒரு காலத்தில் மடிக்கணினி மற்றும் வீட்டு மின்னணு பொருட்களுக்காக அறியப்பட்ட அந்த நிறுவனம், 2020ஆம் ஆண்டில் கணினி துறையிலிருந்து முழுமையாக வெளியேறியது. தற்போது மின்சக்தி தீர்வுகள், டிஜிட்டல் கட்டமைப்பு, குறைக்கடத்தி உற்பத்தி கருவிகள், தரவு மையங்களுக்கான சேமிப்பு சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் கவனம் செலுத்துகிறது.
இந்த நிறுவனங்களின் கதைகள் ஒரு முக்கியமான விஷயத்தை எடுத்துக்காட்டுகின்றன. ஒரு நிறுவனம் பல ஆண்டுகள் வெற்றிகரமாக செயல்பட்டதால் அதே தொழிலை தொடர்ந்து செய்வதே பாதுகாப்பான வழி என்று அர்த்தமில்லை. வாடிக்கையாளர்களின் தேவையும் தொழில்நுட்பமும் மாறும்போது, நிறுவனங்களும் அதற்கேற்ப மாற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. நோக்கியா, எரிக்சன், பிளாக்பெர்ரி, ஐபிஎம் போன்ற நிறுவனங்கள் சந்தித்த அனுபவத்தில் இருந்து தெரியும் மிகப்பெரிய பாடம் இதுதான். ஒரு பொருளின் புகழை விட, மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் திறன்தான் ஒரு நிறுவனத்தின் நீண்ட கால பயணத்தை தீர்மானிக்கிறது. ஒருகாலத்தில் மக்கள் கையில் இருந்த பெயர்கள் இன்று அவர்களின் கைகளில் இல்லாவிட்டாலும், தொழில்நுட்ப உலகின் பின்னணியில் வேறு வடிவத்தில் தொடர்ந்து இயங்கி வருகின்றன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.