`நெதன்யாகுவை' வீட்டுக்கு அனுப்பும் ஐசன்கோட்? 'அரபு கட்சிகளுடன்' இணைந்து ஆட்சி அமைக்க முடியுமா? யார் அவர், இஸ்ரேலில் அடுத்தது என்ன? 
உலகம்

`நெதன்யாகுவை' வீட்டுக்கு அனுப்பும் ஐசன்கோட்? 'அரபு கட்சிகளுடன்' இணைந்து ஆட்சி அமைக்க முடியுமா? யார் அவர், இஸ்ரேலில் அடுத்தது என்ன?

2023ம் ஆண்டு காஸாவில் நடந்த போரில் ஐசன்கோட்டின் 25 வயது மகன் கொல்லப்பட்டார். சொந்த மகனையே பறிகொடுத்தவர் என்பதால் இவருக்கு அனுதாபம் எழுந்ததுடன், இவர் பாலஸ்தீன ஆதரவாளராக இருப்பார் என்ற சந்தேகம் எழுவதையும் அது தடுத்தது.

மாலை முரசு செய்தி குழு

பிரேசில், செர்பியாவைத் தொடர்ந்து இஸ்ரேலிலும் டொனால்ட் ட்ரம்ப்பின் கூட்டாளி பின்னடைவைச் சந்தித்துள்ளார். கடந்த 2022ம் தேர்தலில் 64 இடங்களில் வெற்றி பெற்ற நெதன்யாகு கூட்டணி இந்தமுறை 53 இடங்களை மட்டுமே பெற்று பெரும்பான்மையைத் தவரவிட்டுள்ளது.

120 இடங்கள் உள்ள இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற 61 இடங்களில் வெற்றி பெற வேண்டியது அவசியம். இப்போது முடிவுகள் வந்துவிட்டாலும் யார் அடுத்த பிரதமர் என்பதில் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது பிரதான போட்டியாளரான முன்னாள் இராணுவத் தளபதி காடி ஐசன்கோட் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

காடி ஐசன்கோட்டின் யஷார் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 48 இடங்களில் வென்றுள்ளன. அரபு காட்சிகள் 19 இடங்களை வைத்துள்ளனர். இதில் எந்தெந்த கட்சிகள் கூட்டணி அமைக்கலாம், கூட்டணி அமைப்பதால் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் கூட்டணி அமையாவிட்டால் என்ன நடக்கும் என்பதையெல்லாம் காணும் முன்னர், நெதன்யாகுவுக்கு செக் வைத்த காடி ஐசன்கோட்வை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

யார் இந்த ஐசன்கோட்?

எளிமையான பதில், முன்னாள் ராணுவ வீரர் - இன்றைய அரசியல்வாதி. அவரது வாழ்வில் 40 ஆண்டுகள் இஸ்ரேல் ராணுவத்தில் பணியாற்றியவர். 2015 முதல் 2019 வரை ராணுவத்தின் தலைவராக பதவி வகித்தார்.

கடந்த 2022ம் ஆண்டு யஷார் என்ற கட்சியைத் தொடங்கினார். யஷார் என்றால் ஹீப்ரு மொழியில் நேர்மை என்று பொருள். நம்ம ஊரில் சினிமா நட்சத்திரங்கள் கட்சி தொடங்குவது போல, இஸ்ரேலில் ராணுவ வீரர்கள் அரசியலுக்கு வருவது வழக்கம். ராணுவப் பின்னணியில் இருந்து வந்தவர் என்பதனால் இவருக்கும் மக்களிடம் தொடக்கம் முதலே ஆதரவு கிடைத்தது. விரைவிலேயே பிரபலமானார்.

இஸ்ரேல் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதலே உலக நாடுகளின் பிரஜைகள் இது காஸாவில் அந்த நாட்டின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படுத்துமா என்பதுதான். ஆனால் ஐசன்கோட் வெற்றி பெற்றாலும் அப்படி எந்த மாற்றமும் நடக்காது என்பதுதான் நிதர்சனம்.

காஸா, லெபனான் மற்றும் ஈரானில் இஸ்ரேல் ராணுவத்தின் நடவடிக்கைகளை கேள்வியே இல்லாமல் ஆதரிக்கிறார் ஐசன்கோட். தனி பாலஸ்தீன நாடு கோரிக்கையை அர்த்தமற்றது என்கிறார்.

ஆனால் நெதன்யாகு தலைமையிலான அரசு தெளிவான போர் யுத்திகளும், போருக்கு பிறகான திட்டமிடலும் இல்லாமல் இருக்கிறது என்பது ஐசன்கோட் முன்வைக்கும் குற்றச்சாட்டு.

அக்டோபர் 7, 2023ல் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதல் நெதன்யாகு அரசின் பாதுகாப்பு தோல்வி எனப் பிரசாரம் செய்தார். அத்துடன் நெதன்யாகு மீதான சமீபத்திய ஊழல் குற்றச்சாட்டுகளையும் கடுமையாக விமர்சித்தார்.

நெதன்யாகுவுக்கு நேர் எதிராக தன்னை நிறுத்தும் ஐசன்கோட் நேர்மையான, அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்கும் மாற்றாக தன்னை முன்நிறுத்துகிறார்.

2023ம் ஆண்டு காஸாவில் நடந்த போரில் ஐசன்கோட்டின் 25 வயது மகன் கொல்லப்பட்டார். சொந்த மகனையே பறிகொடுத்தவர் என்பதால் இவருக்கு அனுதாபம் எழுந்ததுடன், இவர் பாலஸ்தீன ஆதரவாளராக இருப்பார் என்ற சந்தேகம் எழுவதையும் அது தடுத்தது.

ராணுவ வீரராக 40 ஆண்டுகள் செயல்பட்டதுடன், மகனையும் இழந்தவர் என்பதால் தியாகம் மற்றும் தலைமைத்துவத்துக்கு சரியான ஆளாக பார்க்கப்பட்டார். தேர்தலில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றுள்ளார். இவர் அரபு கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால் 67 இடங்களுடன் ஆட்சியைப் பிடிக்க முடியும். ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது.

அரபு கட்சிகளுடன் கூட்டணி சாத்தியமா?

இஸ்ரேலில் உள்ள அரபு கட்சிகளின் வாக்காளர்கள் 1948 பிரிவினையின் போது இஸ்ரேல் நிலத்திலேயே தங்கிய இஸ்லாமியர்களே ஆவர். இவர்கள் இஸ்ரேலின் மக்கள் தொகையில் சுமார் 20%. அரபு கட்சிகள் இஸ்ரேல் காஸாவில் நடத்தும் தாக்குதல்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர். தனி பாலஸ்தீன நாடு கோரிக்கைக்கு ஆதரவு அளிப்பவர்கள்.

அரபு கட்சிகளின் ஆதரவைப் பெறுவது ஐசன்கோட்டுக்கு வாக்களித்த மக்களே எதிர்க்கும் முடிவாக அமையலாம். கூட்டணி கட்சிகளின் கடுமையான எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருக்கும். இதற்கு முன்னர் 2021ல் அரபு கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைந்தது. அது 18 மாதங்கள் கூட நிலைக்கவில்லை.

இப்போது போர் நடந்துவரும் சூழலில் அரபு கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைப்பது, அவர்கள் ஹமாஸ் போன்ற அமைப்புகளுக்கு உதவ வழிவகுத்து நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக முடியும் அபாயம் உள்ளது என்பதால் இந்த முடிவு மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்குமே தவிர, ஐசன்கோட்டை நிலையான பிரதமராக மாற்றாது.

ஐசன்கோட் ஆதரவு கட்சிகளை வளைக்கும் நெதன்யாகு?

இப்போது இருக்கும் ஒரே வழி நெதன்யாகு எதிர்க்கட்சியின் கூட்டணியில் இருக்கும் பலவீனமான கட்சிகளின் ஆதரவை பெறுவது. 53 இடங்களை வைத்திருக்கும் நெதன்யாகுவுக்கு இன்னும் 8 இடங்கள் தேவை.

யஷார் உடன் இருக்கும் தி டெமோகிரேட்ஸ், டுகேதர் போன்றவை புதிய கட்சிகளாக இருந்தாலும் அவற்றின் தாய் கட்சிகள் நெதன்யாகு உடன் முற்காலத்தில் கூட்டணியில் இருந்திருக்கின்றன. மூத்த கட்சியான யிஸ்ரேல் பெய்டேய்னு கட்சிக்கும் அந்த வரலாறு இருக்கிறது.

இவற்றில் தி டெமோகிரேட்ஸ் அல்லது டுகேதர் கட்சியின் ஆதரவைப் பெற்றுவிட்டால் நெதன்யாகு பிரதமராக தொடர முடியும்.

இதேப் போல நெதன்யாகு கூட்டணியில் உள்ள ஏதேனும் 2 கட்சிகளின் ஆதரவைப் பெற்றுவிட்டால் ஐசன்கோட் பிரதமராக முடியும்.

ஆனால் இந்த சிறிய காட்சிகள் கூட்டணி மாறுவது அதன் ஆதவராளர்கள் இடையே கடுமையான எதிர்ப்பை கிளப்பி, அந்தக் கட்சிகளின் அரசியல் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்கிவிடும்.

உதாரணமாக தி டெமோகிரேட்ஸ் தீவிர இடதுசாரி கட்சி. நெதன்யாகுவின் வலதுசாரி கட்சிகளுக்கு நேர் எதிரானது. இதேப்போல நெதன்யாகு முகாமில் உள்ள கட்சிகளும் ஐசன்கோட்டுக்கு ஆதரவு கொடுப்பது மிகப் பெரிய ரிஸ்க். எந்த கட்சியும் இந்த ரிஸ்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் மறுதேர்தல் நடக்கும்.

மறுதேர்தல் யாருக்கு சாத்தியமாக அமையும்?

இந்த தேர்தலில் ஐசன்கோட்டுக்கு ஆதரவாக இருந்த அலை அடுத்த தேர்தல் வரை நிலைக்குமா என்பது பெரும் கேள்விக்குறி தான். ஒரு மாற்றத்தை விரும்பி அவருக்கு மக்கள் ஆதரவு அளித்தனர். பல நாடுகளில் இருந்து வந்து வாக்கு செலுத்தினர்.

இதற்கிடையில், நெதன்யாகுவுக்கு தனது கூட்டணியை வலுப்படுத்திக்கொள்ள அவகாசம் கிடைக்கும். நாடாளுமன்றத்தில் நுழைவதற்கான தகுதியைப் பெறத் தவறிய சிறிய வலதுசாரிக் கட்சிகள், அடிப்படையில் நெதன்யாகு ஆதரவு வாக்குகளை வீணடித்தன. எனவே அடுத்த தேர்தலில் அவை போட்டியிடாமல் நெதன்யாகுவுக்கு ஆதரவை மட்டுமே அளிக்கலாம்.

ஹரேடி பப்ளிக் கட்சி, அம்ச ஹா யிஸ்ரேல் காட்சிகள் இணைந்து 1.88% வாக்குகளைப் பெற்றன. இது நெதன்யாகுவின் கணக்கில் சேர்க்கப்படலாம். இதேப்போல ஐசன்கோட்டுக்கு ஆதரவான ரிசர்விஸ்ட்ஸ் மற்றும் எகனாமிக் கட்சி கூட்டணியும் 2.6% வாக்குகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்