அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சிரியாவின் தலைவர் அஹமது அல்-ஷாராவை வெள்ளை மாளிகைக்கு அழைத்தது, உலக நாடுகளைப் புரட்டிப் போட்ட ஒரு சம்பவம். ஏனென்றால், சிரியாவுக்குச் சுதந்திரம் கிடைத்த 1946ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு சிரியத் தலைவர் அமெரிக்காவுக்கு அதிகாரபூர்வமாக வந்திருப்பது இதுதான் முதல் முறை. இந்த அல்-ஷாரா யார் என்று பார்த்தால், ஒரு காலத்தில் அமெரிக்காவால் தீவிரவாதி என்று முத்திரைகுத்தப்பட்டு, அவர் தலையைக் கொண்டு வருபவர்களுக்கு ஒரு கோடி டாலர் சன்மானமும் அறிவிக்கப்பட்டிருந்த அல்-கொய்தா அமைப்பின் முன்னால் தளபதியாவார்.
சிரியா மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா தற்காலிகமாக நீட்டித்திருக்கும் இந்த நேரத்தில் இந்தச் சந்திப்பு நடந்தது. அப்போது, இணையத்தில் இப்போது வேகமாகப் பரவி வரும் ஒரு காணொளியில், டிரம்ப்பும் அல்-ஷாராவும் மிகவும் கலகலப்பாகப் பேசிக்கொண்டிருப்பது தெரிகிறது. டிரம்ப், அல்-ஷாராவுக்கு ஒரு விலையுயர்ந்த வாசனைத் திரவியத்தைப் பரிசாக அளித்தார். அதை அல்-ஷாரா மீதே தெளித்த டிரம்ப், "இதுதான் மிகச் சிறந்த வாசம். இன்னொரு பாட்டில் உங்கள் மனைவிக்காக!" என்று சிரித்துக் கொண்டே சொன்னார். அதோடு நிற்காமல், கேலியாக, "உங்களுக்கு எத்தனை மனைவிகள்?" என்றும் கேட்டுவிட்டார்.
அதற்குச் சிரியத் தலைவரான அல்-ஷாரா, "எனக்கு ஒரே ஒரு மனைவிதான்," என்று பதிலளித்தார். இதைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் பலமாகச் சிரித்தனர். உடனே டிரம்ப், "ஓ... உங்களுக்குத் தெரியாதா!" என்று பதிலுக்குக் கிண்டலடித்து எல்லோரையும் சிரிக்க வைத்தார்.
இந்தச் சந்திப்பில், அல்-ஷாரா சிரியாவின் பழங்கால வரலாற்றுச் சின்னங்களின் மாதிரிகளை டிரம்ப்புக்குப் பரிசளித்தார். "வரலாற்றின் முதல் எழுத்து, அஞ்சல் முத்திரை, முதல் இசைக்குறிப்பு, முதல் சுங்க வரி விதிப்புக் கட்டணச் சீட்டு போன்றவற்றின் மாதிரிகள் இவை," என்று அவர் விளக்கினார். அல்-ஷாராவின் கடுமையான கடந்த காலத்தைப் பற்றிப் பேசிய டிரம்ப், "நமக்கெல்லாம் கடினமான காலங்கள் இருந்திருக்கும். ஆனால், இவருக்குக் கொஞ்சம் மோசமான கடந்த காலமே இருந்திருக்கிறது. ஆனால், அந்தக் கடுமையான கடந்த காலம் இல்லை என்றால், இவருக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்திருக்காது என்றுதான் நான் நினைக்கிறேன்," என்று வெளிப்படையாகவே தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.