

தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச நட்சத்திரமாகவே தொடருவது ரஜினியும் கமலும் தான். தமிழ் சினிமாவின் இரு துருவங்கள் என அறியப்படும் இருவரும் தங்களின் திரைப்பயணத்தின் ஆரம்ப காலங்களில் ஒன்றாக சேர்ந்து நடித்தனர். 16 வயதினிலே, ஆடு - புலி ஆட்டம், அவள் அப்படித்தான், தில்லு முல்லு, நினைத்தாலே இனிக்கும், அபூர்வ ராகங்கள், தப்பு தாளம், இளமை ஊஞ்சலாடுகிறது என பல படங்களில் இணைந்தும், சில படங்களில் கௌரவ வேடத்திலும் தோன்றியிருப்பார்கள்.
இவர்கள் இருவரையும் சினிமாவில் வார்த்தெடுத்தது, இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் தான், ஆகையால் ஒரு ஆசானின் கீழ் வளர்ந்த இரு ஆளுமைகளை தமிழ் சினிமா கொண்டாடத் தவறவில்லை. ஆனால் அதற்கு பிறகு மீண்டும் ரஜினியும் கமலும் எப்போது இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரிக்க துவங்கியது. பலமுறை ரஜினியும் கமலும் ஒன்றாக சேர்ந்து நடிக்கவிருக்கின்றனர் என கிசுகிசுக்கள் வந்த வண்ணமே இருந்தன.
மீண்டும் இணைந்த கமல் ரஜினி
இந்நிலையில் 44 ஆண்டுகள் கழித்து ரஜினியும் கமலும் இணைந்து பணியாற்ற உள்ளனர். அவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவிருக்கும் படம் குறித்த அப்டேட் சில காலத்திற்கு பிறகு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் கமலின் ‘ராஜ் கமல்’ புரொடக்ஷன் தயாரிப்பில் தலைவர் 173 -ல் ரஜினி நடிக்க இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியாகியிருந்தது. அந்த படத்தை சுந்தர் c இயக்குவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். கடந்த 1997 -ஆம் ஆண்டு வெளியான ‘அருணாச்சலம்’ படத்திற்கு பிறகு, ரஜினியும் சுந்தர் c -யும் இணையும் படமாக இது கருதப்பட்டது.
சுந்தர் C விலகல்..!
இந்நிலையில் ரஜினி நடிப்பில் கமல் தயாரிப்பில் உருவாக உள்ள இப்படத்திலிருந்து வெளியேறுவதாக சுந்தர் C அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில், “என் அன்பான ரசிகர்கள் மற்றும் நல்விரும்பிகளுக்கு, மிகுந்த சோகத்துடன் சில முக்கியமான செய்திகளை உங்களுடன் பகிர்கிறேன்.
எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத சில சூழ்நிலைகளின் காரணமாக, பெருமைக்குரிய திட்டமான #தலைவர் 173 திரைப்படத்திலிருந்து விலகுவதற்கான கடினமான முடிவை எடுத்துள்ளேன்.
மிகுந்த மதிப்பிற்குரிய சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள் நடித்தும், உலகநாயகன் திரு. கமல் ஹாசன் அவர்கள் தயாரித்தும் உருவாகவிருந்த இந்தப் படம் எனக்கு ஒரு கனவு வாய்ப்பாக இருந்தது.
வாழ்க்கையில் சில நேரங்களில் நாம் விரும்பாத வழிகளில் செல்ல வேண்டிய தருணங்கள் வருகின்றன. இந்த இரு சிறந்த நாயகர்களுடன் எனது உறவு நீண்டகாலமானது; அவர்களை நான் எப்போதும் உயர்ந்த மரியாதையுடன் நினைக்கிறேன். கடந்த சில நாட்களில் அவர்களுடன் பகிர்ந்த அந்த அருமையான தருணங்களை என்றும் நினைவில் வைத்திருப்பேன். அவர்களிடமிருந்து நான் கற்றுக் கொண்ட பாடங்கள் எனது பயணத்தை தொடர்ந்து வழிநடத்தும்.
இந்த வாய்ப்பிலிருந்து விலகினாலும், அவர்களின் வழிகாட்டுதலும் ஆசீர்வாதமும் என்றும் எனக்கு துணையாக இருக்கும். இந்த அபூர்வ வாய்ப்பை எனக்கு அளித்ததற்காக இருவருக்கும் என் இதயபூர்வமான நன்றியை தெரிவிக்கிறேன்.
இந்த செய்தி இந்த முயற்சியை ஆவலுடன் எதிர்பார்த்த உங்களில் சிலருக்கு மனக்கவலையை ஏற்படுத்தியிருக்கும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். தயவுசெய்து என் மனமார்ந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். நான் விரைவில் உங்களை மகிழ்விக்கும் புதிய முயற்சிகளுடன் திரும்பி வருவேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன். உங்களின் நிலையான அன்புக்கும் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றி. உங்களுடன் இன்னும் பல இனிய நினைவுகளை உருவாக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
தலைவர் 173 படத்தின் மீது அதிகளவு எதிர்பார்ப்பு கிளம்பியிருந்த நிலையில், இந்த அறிவிப்பு ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.