சவூதி அரேபியாவின் புனித நகரமான மெக்காவில் உள்ள மசூதியின் புனிதத்தன்மையை மீறியதாக தொடர்ந்த குற்றச்சாட்டில், வங்கதேசத்தைச் சேர்ந்த கணவன் மனைவிக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது அந்நாடு. அக்டோபர் 14ஆம் தேதி இந்தத் தண்டனைகள் நிறைவேற்றப்பட்டதாக சவுதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்பு தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று வங்கதேச அரசு விளக்கம் கோரியுள்ளது.
சவூதி அரேபியாயில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட தம்பதியினர் நஸ்ருல் இஸ்லாம் அப்துல் பசீர் மற்றும் சித்தி அக்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மெக்காவில் உள்ள ஒரு மசூதிக்குள் தகாத செயல்களில் ஈடுபட்டதாகவும், மசூதியின் புனிதத்தன்மையை மீறியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவர்கள் ஈடுபட்டதாகக் கூறப்படும் செயல்கள் குறித்து சவூதி அதிகாரிகள் விரிவான தகவல்களை வெளியிடவில்லை.
விசாரணைக்குப் பிறகு இருவரும் கைது செய்யப்பட்டு, அவர்களின் வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டதாக சவூதி உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டத்தை அடுத்து, மரண தண்டனை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பை அந்நாட்டின் உச்சநீதிமன்றம் உறுதி செய்ததுடன், அரசு ஆணையின் மூலமாகவும் அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இஸ்லாமியச் சட்டத்தின் கீழ், நீதிபதி குற்றத்தின் தன்மை மற்றும் தீவிரத்தைப் பொறுத்துத் தண்டனையைத் தீர்மானிக்கும் முறையான ‘தாஸீர்’ விதிகளின் கீழ் இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக சவூதி அரசு விளக்கம் அளித்துள்ளது. குற்றத்தின் தீவிரம் மட்டுமின்றி, சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் இடத்தின் புனிதத்தன்மையை கருத்தில் கொண்டும் மரண தண்டனை வழக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் வங்கதேச அரசு எழுப்பியுள்ள முக்கியக் கேள்வி, தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்பு ஏன் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்பதுதான். மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்ட பிறகே இந்த வழக்கு குறித்து தங்களுக்குத் தெரியவந்ததாக வங்கதேசம் தெரிவித்துள்ளது. தகவலின்படி, சவூதி அரேபியாவில் சிறையில் உள்ள வங்கதேசக் குடிமக்களின் பட்டியலை அந்நாட்டில் உள்ள வங்கதேசத் தூதரகம் கோரியுள்ளது. சவூதி அரசு அனுப்பிய பட்டியலில் இந்தத் தம்பதியின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன. ஆனால், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த விவரம் அதில் குறிப்பிடப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, வங்கதேச வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஷமா ஒபைத் இஸ்லாம், இந்த வழக்கு தொடர்பான கூடுதல் விவரங்களைப் பெற சவூதி அரசைத் தொடர்புகொண்டதாகத் தெரிவித்தார். அக்டோபர் 18ஆம் தேதி, வங்கதேச வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் டாக்காவில் உள்ள சவூதி அரேபியத் தூதரைச் சந்தித்து, விளக்கம் கோரும் முறையான தூதரகக் குறிப்பையும் வழங்கியுள்ளார். நீதிமன்றத் தீர்ப்பு, வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படாததற்கான காரணங்கள் குறித்து வங்கதேசம் விளக்கம் எதிர்பார்க்கிறது. சவூதி அரசின் பதில் கிடைத்த பிறகே அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவில் 30 லட்சத்துக்கும் அதிகமான வங்கதேசக் குடிமக்கள் வசித்து வேலை செய்து வருகின்றனர். அவர்களில் பலர் குறைந்த ஊதியம் பெறும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையே மதம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த உறவுகள் வலுவாக உள்ள நிலையில், இந்தச் சம்பவம் வெளிநாடுகளில் உள்ள வங்கதேசக் குடிமக்களின் உரிமைகள் மற்றும் தூதரகத் தகவல் தொடர்பு குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், விருந்தளிக்கும் நாட்டின் சட்டங்களை மதிப்பதன் முக்கியத்துவத்தையும் வங்கதேசம் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்தச் சம்பவம் இருதரப்பு உறவுகளைப் பாதிக்காது என நம்புவதாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, இந்த மாதத் தொடக்கத்தில் முகநூலில் வெளியிட்ட கருத்தின் மூலம் மதத்தை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இலங்கை நாட்டவர் ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையைச் சவூதி அரேபியா ரத்து செய்தது. அந்த வழக்கு இலங்கையில் போராட்டங்களை ஏற்படுத்தியதுடன், அவருக்கு நிவாரணம் கிடைக்க இராஜதந்திர முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.
வங்கதேசத் தம்பதியின் மரண தண்டனை விவகாரத்தில், சவூதி அரசிடமிருந்து முழுமையான விளக்கத்தைப் பெறுவதில் டாக்கா கவனம் செலுத்தி வருகிறது. வெளிநாடுகளில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் குடிமக்களுக்கு உரிய நேரத்தில் தகவல் தெரிவிப்பது, தூதரக உதவி வழங்குவது மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான தகவல் பகிர்வு ஆகியவை இந்தச் சம்பவத்தின் மூலம் மீண்டும் கவனத்திற்கு வந்துள்ளன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.