சமீபத்திய அரசியல் மாற்றங்களால், இந்திய பயணிகளின் பயண விருப்பங்களில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக, துருக்கி மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகளுக்கு இந்தியர்களின் பயணம் கணிசமாகக் குறைந்து, புறக்கணிப்பு இயக்கம் வலுப்பெற்று வருகிறது. இதற்கு முக்கிய காரணம், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்ட பதற்றமும், அதில் துருக்கி மற்றும் அஜர்பைஜான் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்ததும்தான்.
2025 ஏப்ரல் 22-ஆம் தேதி, காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பயணிகள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் பாகிஸ்தானால் ஆதரிக்கப்பட்ட பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டதாக இந்தியா குற்றம் சாட்டியது. இதற்கு பதிலடியாக, இந்தியப் படைகள் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தின. இந்த இராணுவ நடவடிக்கையை உலகின் பல நாடுகள் ஆதரித்தாலும், துருக்கி மற்றும் அஜர்பைஜான் ஆகியவை பாகிஸ்தானுக்கு ஆதரவாக அறிக்கைகள் வெளியிட்டன.
துருக்கியின் வெளியுறவு அமைச்சகம் இந்தியாவின் தாக்குதலை “ஆத்திரமூட்டும் செயல்” என்று விமர்சித்து, இது “முழு அளவிலான போருக்கு” வழிவகுக்கலாம் என்று எச்சரித்தது. அதேபோல், அஜர்பைஜானின் வெளியுறவு அமைச்சகம், இந்தியாவின் நடவடிக்கை பாகிஸ்தானின் இறையாண்மையை மீறுவதாகவும், பொதுமக்கள் உயிரிழப்புக்கு வழிவகுத்ததாகவும் கண்டனம் தெரிவித்தது. மேலும், பாகிஸ்தான் பயன்படுத்திய துருக்கியின் ‘ஆசிஸ்கார்டு சோங்கர்’ ட்ரோன்கள் இந்திய இராணுவ இலக்குகளைத் தாக்கியதாக இந்திய அரசு உறுதிப்படுத்தியது. இந்த நிகழ்வுகள் இந்தியாவில் கடும் கோபத்தை ஏற்படுத்தின.
இந்திய பயணிகளுக்கு துருக்கி மற்றும் அஜர்பைஜான் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களாக இருந்து வந்தன. 2024-ஆம் ஆண்டு, 3.3 லட்சம் இந்தியர்கள் துருக்கியையும், 2.43 லட்சம் பேர் அஜர்பைஜானையும் பயணித்தனர். நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் கூட அஜர்பைஜானில் தான் நடந்தது. துருக்கியின் சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, 2024-ல் துருக்கியின் சுற்றுலா வருவாய் 61.1 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது, இதில் இந்திய பயணிகளின் பங்களிப்பு 20.7% அதிகரித்தது. அஜர்பைஜானில் இந்திய பயணிகளின் எண்ணிக்கை 2023-ஐ விட 108% அதிகரித்தது. ஆனால், இந்த ஆண்டு மே மாதத்தில், இந்த எண்ணிக்கைகள் கடுமையாகக் குறைந்துள்ளன.
இந்நிலையில், மேக்மைட்ரிப் அறிக்கையின்படி, துருக்கி மற்றும் அஜர்பைஜானுக்கு பயண முன்பதிவுகள் 60% குறைந்துள்ளன, மேலும் ரத்து செய்யப்பட்டவை 250% உயர்ந்துள்ளன. ஈஸ்மைட்ரிப் நிறுவனம், கடந்த ஒரு வாரத்தில் துருக்கிக்கு 22% மற்றும் அஜர்பைஜானுக்கு 30% முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவித்தது. இக்ஸிகோ மற்றும் காக்ஸ் அண்ட் கிங்ஸ் போன்ற பயண நிறுவனங்கள் துருக்கி மற்றும் அஜர்பைஜானுக்கு புதிய முன்பதிவுகளை முற்றிலுமாக நிறுத்தியுள்ளன. ட்ராவோமின்ட் நிறுவனம் துருக்கியின் டர்கிஷ் ஏர்லைன்ஸ், பெகாசஸ் ஏர்லைன்ஸ், கோரெண்டன் ஏர்லைன்ஸ் மற்றும் அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் ஆகியவற்றுக்கு டிக்கெட் விற்பனையை நிறுத்தியது.
தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா, “கடந்த ஆண்டு இந்தியர்கள் துருக்கி மற்றும் அஜர்பைஜானுக்கு 4,000 கோடி ரூபாய்க்கு மேல் சுற்றுலாவாக செலவு செய்தனர். இன்று இந்த நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கின்றன. உலகில் வேறு பல அழகான இடங்கள் இருக்கின்றன, இவற்றைத் தவிர்ப்போம்,” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். இதேபோல், நடிகை ரூபாலி கங்குலி மற்றும் இசையமைப்பாளர் விஷால் மிஸ்ரா ஆகியோரும் இந்த புறக்கணிப்பை ஆதரித்தனர். விஷால் மிஸ்ரா தனது துருக்கி மற்றும் அஜர்பைஜானில் நடக்கவிருந்த இசை நிகழ்ச்சிகளை ரத்து செய்தார்.
துருக்கி மற்றும் அஜர்பைஜானின் பொருளாதாரத்தில் சுற்றுலா முக்கிய பங்கு வகிக்கிறது. துருக்கியில் சுற்றுலா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 12% பங்களிக்கிறது மற்றும் 10% வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. அஜர்பைஜானில் இது 7.6% GDP மற்றும் 10% வேலைவாய்ப்புகளுக்கு பங்களிக்கிறது. இந்திய பயணிகள் இந்த நாடுகளுக்கு செலவிடும் ஒவ்வொரு ரூபாயும் அவர்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்துகிறது. ஆனால், இந்த புறக்கணிப்பால் இந்த நாடுகள் கணிசமான வருவாயை இழக்க நேரிடும்.
கடந்த ஆண்டு மாலத்தீவுக்கு எதிராக இந்தியர்கள் புறக்கணிப்பு இயக்கத்தை மேற்கொண்டபோது, மாலத்தீவின் சுற்றுலாத் துறை 1.8 முதல் 2 பில்லியன் டாலர் வரை இழப்பை சந்தித்தது. இந்தியர்கள் மாலத்தீவுக்கு பயணிப்பது 2023-ல் முதலிடத்தில் இருந்து 2024-ல் ஆறாவது இடத்திற்கு குறைந்தது. துருக்கி மற்றும் அஜர்பைஜானுக்கு இதேபோன்ற இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக பயணத் துறை வல்லுநர்கள் கருதுகின்றனர். “மாலத்தீவை விட இந்த முறை தாக்கம் பெரியதாக இருக்கும். ஏனெனில், இந்தியர்கள் துருக்கி மற்றும் அஜர்பைஜானுக்கு அதிக அளவில் பயணித்து வந்தனர்,” என்று வாண்டர்ஆன் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கோவிந்த் கவுர் கூறினார்.
இந்த புறக்கணிப்பு இயக்கத்தால், இந்திய பயணிகள் ஆர்மேனியா மற்றும் கிரீஸ் போன்ற நாடுகளை நோக்கி தங்கள் பயண விருப்பங்களை மாற்றியுள்ளனர். இந்தியாவுடன் நட்புறவு கொண்ட இந்த நாடுகள், தற்போது இந்திய பயணிகளுக்கு புதிய மற்றும் கவர்ச்சிகரமான சுற்றுலா தலங்களாக உருவெடுத்து வருகின்றன.
ஆர்மேனியா: இந்தியாவும் ஆர்மேனியாவும் கடந்த சில ஆண்டுகளாக பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்தி வருகின்றன. 2024-ல் இந்தியா ஆர்மேனியாவின் மிகப்பெரிய ஆயுத வழங்குநராக உருவெடுத்தது. அஜர்பைஜானுடனான நாகோர்னோ-கராபாக் மோதலில் ஆர்மேனியாவை இந்தியா ஆதரிக்கிறது, இது அஜர்பைஜானுக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை பலப்படுத்துகிறது.
கிரீஸ்: கிரீஸ், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடாக, இந்தியாவுடன் வலுவான உறவுகளைக் கொண்டுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவை ஆதரிக்கும் கிரீஸ், துருக்கியால் அங்கீகரிக்கப்படாத சைப்ரஸ் குடியரசை ஆதரிக்கிறது. இந்திய பயணிகளுக்கு கிரீஸின் வரலாற்று மற்றும் கலாச்சார பாரம்பரியம் ஒரு நல்ல ஆப்ஷனாக உள்ளது.
துருக்கி மற்றும் அஜர்பைஜான் ஆகியவை பாகிஸ்தானுடன் நீண்டகால அரசியல் மற்றும் இராணுவ உறவுகளைக் கொண்டுள்ளன. பாகிஸ்தானுக்கு அதிக அளவில் ஆயுதங்களை வழங்குவதில் துருக்கி இரண்டாவது இடத்தில் உள்ளது. 1988-ல் உருவாக்கப்பட்ட இராணுவ ஆலோசனைக் குழு மூலம் இரு நாடுகளும் நெருக்கமான ஒத்துழைப்பை பராமரிக்கின்றன.
பாகிஸ்தான், துருக்கியின் பயரக்டர் ட்ரோன்கள் மற்றும் கெமான்கேஸ் குரூஸ் ஏவுகணைகளை வாங்கியுள்ளது. அஜர்பைஜானுடன் பாகிஸ்தான் 2024-ல் 1.6 பில்லியன் டாலர் மதிப்பிலான JF-17 தண்டர் போர் விமான ஒப்பந்தத்தை மேற்கொண்டது. மேலும், 2024 ஜூலையில் பாகிஸ்தான், துருக்கி மற்றும் அஜர்பைஜான் முதல் முத்தரப்பு உச்சி மாநாட்டை நடத்தின.
இந்திய பயணிகள் இப்போது ஆர்மேனியா, கிரீஸ், தாய்லாந்து, மலேசியா போன்ற மாற்று இடங்களை நோக்கி செல்கின்றனர். இது, இந்தியாவின் புவிசார் அரசியல் நிலைப்பாட்டை பிரதிபலிப்பது மட்டுமல்லாமல், சுற்றுலாத் துறையில் புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது. இந்த மாற்றம், பயண முடிவுகளில் தேசிய உணர்வு மற்றும் அரசியல் புரிதலின் பங்கு அதிகரித்து வருவதை காட்டுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்