உலகம்

“இந்திய கப்பலுக்கு அனுமதி அளித்த ஈரான்” - அமெரிக்காவுக்கு போட்ட அந்த மூன்று கண்டிஷன்..குறையுமா போர் பதற்றம்?

ஹார்முஸ் ஜலசந்தியின் வழியாக இந்திய கப்பல்களுக்கு அனுமதி அளிப்பதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது...

மாலை முரசு செய்தி குழு

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர்ச்சியான கூட்டு தாக்குதலால் உலக நாடுகள் பெரும் பாதிப்புள்ளக்கிறது. இந்நிலையில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஈரான் மூன்று முக்கிய நிபந்தனைகளை வகுத்துள்ளது, அதன் உரிமைகளையும் எதிர்கால பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் நிபந்தனைகள் வகுத்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவை ஈரானின் அணுசக்தி மற்றும் உள்கட்டமைப்பு மீது கூட்டுத் தாக்குதல்களை திட்டமிட்டு செயல்படுத்துகிறது. அதனைத் தொடர்ந்து ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன், வாஷிங்டனும் டெல் அவிவும் ஈரானின் கோரிக்கைகளை ஒப்புக் கொண்டால் மட்டுமே இந்த போர் முடிவுக்கு வரும் என்று வலியுறுத்தினார். ஈரான் ஒருபோதும் நிபந்தனையின்றி சரணடையாது என்று அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். அண்டை நாடுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்காக அவர் சமீபத்தில் வருத்தம் தெரிவித்ததோடு, அண்டை நாடுகளுடன் பதற்றத்தை அதிகரிக்க ஈரான் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் கோரிக்கையாக ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் போரை நிறுத்த மூன்று முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளார். ஒன்று ஈரானின் இறையாண்மை மற்றும் சட்டபூர்வ உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும். தனது "சட்டபூர்வமான உரிமைகள்" என்று அழைப்பதற்கு சர்வதேச அங்கீகாரத்தை விரும்புவாதாக்க தெரிவித்துள்ளது. இரண்டாவது கோரிக்கையாக போரினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரியுள்ளது. போரினால் உயிர் மற்றும் பொருளாதார பாதிப்புக்கு ஈரான் உள்ளாகி உள்ளது. அதற்கான இழப்பீடு வேண்டும் எனவும் கோரியுள்ளது. மூன்றாவது கோரிக்கையாக “எதிர்காலத்தில் மீண்டும் இது போன்ற போர் தாக்குதல் நடத்தப்படாது என்பதற்கான சர்வதேச உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்” எனவும் பெஷேஷ்கியன் குறிப்பிட்டுள்ளார் .

இதே போல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான் "நிபந்தனையற்ற சரணடைவு அடைய வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார். "நாங்கள் சீக்கிரம் கிளம்ப விரும்பவில்லை, இல்லையா? நாங்கள் எடுத்த வேலையை முடிக்க வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார். மேலும், ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் பதித்துள்ளதாக கூறப்படும் கண்ணிவெடிகளை அகற்ற அமெரிக்கப் படைகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

உலக நாடுகள் பெரும் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இந்த மோதலால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் எரிபொருள் இறக்குமதி மற்றும் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த வார தொடக்கத்தில், கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு கிட்டத்தட்ட 120 அமெரிக்க டாலர்களாக உயர்ந்து, பின்னர் 90 அமெரிக்க டாலர்களாகக் குறைந்தது. இருப்பினும், கப்பல் வழித்தடங்கள் குறித்த நிச்சயமற்ற தன்மை நீடித்ததால், தொடர் பதட்டங்கள் விலைகளை மீண்டும் உயர்த்த கூடும் நிலை நிலவியது. குறிப்பாக இந்தியாவில் இதன் தாக்கம் பாதிக்க தொடங்கியது. இதனிடையே ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து குஜராத் வந்த சரக்கு கப்பல் மீது நேற்று ஹார்முஸ் ஜலசந்தி அருகே தாக்குதல் நடந்தது.

இதனையடுத்து ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சி மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஆகியோர் தொலைபேசியில் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பிறகு இந்தியாவிற்கு ஹார்முஸ் ஜலசந்தியின் வழியாக இந்திய கப்பல்களுக்கு அனுமதி அளிப்பதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு இந்திய எரிபொருள் தட்டுப்பாட்டை சரி செய்ய வழிவகுக்கும். மேலும் வளைகுடா நாடுகளில் இருந்து வரும் இறக்குமதி கப்பல்கள் பெரும்பாலும் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தே இந்தியா வருகிறது. இந்த அறிவிப்பு இந்தியாவின் பெரும் பொருளாதார சரிவை சரி செய்ய உதவும் என தெரிகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்