உலகம்

AI தான் காரணமா? இல்லை திட்டமிட்ட சதியா? பள்ளி குழந்தைகள் உட்பட 155 உயிரிழப்பு – ஈரான் கோர சம்பவத்தின் அதிர்ச்சி தகவல்கள்!

குழந்தைகள் பெரும்பாலும் 7 முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதும் இந்தச் சம்பவத்தின் கொடூரத்தை மேலும் அதிகரிக்கிறது

Muthu Lakshmi

ஈரானில் நடைபெற்று வரும் போரின் மிகக் கொடூரமான சம்பவமாக மினாப் நகரில் உள்ள ஒரு பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதல் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு ஈரானின் மினாப் பகுதியில் அமைந்துள்ள ஷஜாரே தய்யேபே தொடக்கப் பள்ளி மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், சமீபத்திய அதிகாரப்பூர்வ தகவலின்படி 155 பேர் உயிரிழந்துள்ளனர். பிப்ரவரி 28 அன்று காலை சுமார் 10:45 மணியளவில் (ஈரான் நேரப்படி), பள்ளியில் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தபோது அமெரிக்காவின் டோமாஹாக் ஏவுகணை இந்தப் பள்ளியை தாக்கியது.

ஈரானின் ஒளிபரப்பு நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, உயிரிழந்தவர்களில் 73 சிறுவர்கள், 47 சிறுமிகள், 26 ஆசிரியர்கள், 7 பெற்றோர்கள், ஒரு பேருந்து ஓட்டுநர் மற்றும் ஒரு மருந்தக உதவியாளர் அடங்குவர். இந்த எண்ணிக்கை, முன்பு வெளியான 175-க்கும் மேற்பட்ட உயிரிழப்பு தகவல்களை விட குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த எண்ணிக்கையில் ஏற்பட்ட மாற்றத்திற்கு அதிகாரப்பூர்வ விளக்கம் இன்னும் வெளியாகவில்லை. இந்த தாக்குதல், பள்ளி இயங்கிக் கொண்டிருந்த நேரத்தில் நடைபெற்றதாகவும், சில நிமிட இடைவெளியில் இரண்டு முறை தாக்குதல் நடத்தப்பட்டதால் இது “டபுள் டப் ஸ்டிரைக் ” எனக் கருதப்படுகிறது. உயிரிழந்த குழந்தைகள் பெரும்பாலும் 7 முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதும் இந்தச் சம்பவத்தின் கொடூரத்தை மேலும் அதிகரிக்கிறது.

அமெரிக்க ஊடகமான நியூ யார்க் டைம்ஸ் வெளியிட்ட தகவலின்படி, ஆரம்பக்கட்ட விசாரணையில் இந்த தாக்குதல் தவறான இலக்குத் தேர்வின் விளைவாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டோமாஹாக் குரூஸ் ஏவுகணை, காலாவதியான உளவுத் துறையின் தகவலின் அடிப்படையில் அந்த இடத்தை ராணுவ இலக்காக தவறாக அடையாளம் கண்டு தாக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) பயன்படுத்திய தரவுத்தளத்தில், அந்தப் பகுதி 2016-ஆம் ஆண்டுக்குப் பிறகு பள்ளியாக மாற்றப்பட்ட தகவல் புதுப்பிக்கப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் தவறான தகவலை அடிப்படையாகக் கொண்டு இலக்கை அடையாளம் கண்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மாறாக, ஈரான் இந்த விளக்கத்தை முழுமையாக மறுத்துள்ளது. வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ஐ.நா. மனித உரிமைகள் சபையில் உரையாற்றுகையில், இது “திட்டமிட்டு செய்யப்பட்ட தாக்குதல்” எனக் கடுமையாக குற்றம் சாட்டினார். மிகத் துல்லியமான தொழில்நுட்பங்கள் இருக்கும் நிலையில், இது தவறாக நடந்திருக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்நிலையில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த தாக்குதலில் அமெரிக்கா நேரடியாகச் சம்பந்தப்படவில்லை என மறுத்ததுடன், வேறு நாடுகளும் டோமாஹாக் ஏவுகணைகளைப் பயன்படுத்தியிருக்கலாம் என்ற சாத்தியத்தையும் முன்வைத்தார். ஆனால் ஈரானிடம் இத்தகைய ஏவுகணைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. புலனாய்வாளர்களின் தகவலின்படி, இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் டோமாஹாக் ஏவுகணை ஆகும். தற்போது இந்த ஏவுகணைகள் அமெரிக்கா, ஐக்கிய மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிடம் மட்டுமே உள்ளன.

இந்த சம்பவம், போரில் இடம்பெற்ற மிகப்பெரிய மனிதாபிமான பேரழிவாகக் கருதப்படுகிறது. இது உண்மையில் தவறான தாக்குதலா அல்லது திட்டமிட்ட நடவடிக்கையா என்ற கேள்வி இன்னும் விடையின்றி உள்ளது. விசாரணை தொடரும் நிலையில், உலகம் முழுவதும் இந்தச் சம்பவம் கடும் கண்டனத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.