அமெரிக்க மண்ணில் ஈரான் அதிபர்.. விசா கிளியர்! ஹோர்மூஸ் நீரிணை விவாதிக்கப்படுமா? 
உலகம்

அமெரிக்க மண்ணில் ஈரான் அதிபர்.. விசா கிளியர்! ஹோர்மூஸ் நீரிணை விவாதிக்கப்படுமா?

கத்தார் மூலம் 7 நிபந்தனைகளை அமெரிக்காவுக்கு அனுப்பியுள்ள ஈரான் இவை நிறைவேற்றப்பட்டால் மட்டுமே பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் தெரிவித்துள்ளது.

மாலை முரசு செய்தி குழு

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஈரான் - அமெரிக்கா இடையே பல மாதங்களாக போர் நடந்து வருகிறது. பல்வேறு நாடுகளின் தலையீடுகள் மூலம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும், இருதரப்புக்கும் இடையே உடன்படிக்கை ஏற்படவில்லை.

இந்த நிலையில், ஈரான் அதிபர், வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் தூதுக்குழுவினருக்கு விசா வழங்கியிருக்கிறது அமெரிக்க அரசு. அமெரிக்கா வரும் ஈரான் குழுவுக்கு பயணம் செய்யவும், பொருட்கள் வாங்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத் துறை கூறியுள்ளது.

இந்த நடவடிக்கை அமெரிக்க - ஈரான் உறவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக தோன்றினாலும், போர் நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் இல்லை. தங்களது நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டு, அமெரிக்கா அளித்த வாக்குறுதிகள் செயல்படுத்தப்படும் வரை ஹோர்மூஸ் நீரிணை மூடியே இருக்கும் என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஈரான் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் முகமது பாக்கர் கலிபாப், ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதை உறுதிபடத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவை ஈரானின் நிபந்தனைகளுக்கு நிர்பந்திக்க, இராணுவம் மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகள் இரண்டையும் பயன்படுத்துவதாக அவர் பேசியிருந்தார்.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்யும் நாடாக கத்தார் விளங்குகிறது. அந்த நாட்டின் மூலம் ஈரான் 7 நிபந்தனைகளை அமெரிக்காவுக்கு அனுப்பியுள்ளது. இவை நிறைவேற்றப்பட்டால் மட்டுமே பேச்சுவார்த்தை நடைபெறும் என ஈரான் தெரிவித்துள்ளது.

இந்த 7 நிபந்தனைகளில், அனைத்து முனைகளிலும் போரை முடிவுக்குக் கொண்டுவருதல், ஈரானிய சொத்துக்களை விடுவித்தல் மற்றும் ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகையை விலக்குதல் ஆகியவை அடங்கும்.

ஹோர்மூஸ் நீரிணை விவாதிக்கப்படுமா?

உலகளாவிய எரிபொருள் வர்த்தகத்துக்கு முக்கியமான இடமாகத் திகழும் ஹோர்மூஸ் நீரிணை, அமெரிக்க - ஈரான் மோதலின் மையமாக உருவெடுத்துள்ளது.

உலகத் தலைவர்கள் பலரும் ஐநா பொதுச் சபை அமர்வுக்காக நியூயார்க்கில் கூடும் நிலையில், ஹோர்மூஸ் குறித்து முக்கிய விவாதங்கள் நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்