உலகம்

கருத்துரிமையும் பறிக்கப்பட்டதா சவுதி அரேபியாவில்?? 45 வருடங்கள் தண்டனை அளிக்கப்பட்ட பெண்!!!!

Malaimurasu Seithigal TV

சவுதி அரேபியாவின் மன்னர் சல்மானுக்கும், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கும் எதிராக சர்ச்சைக்குரிய கருத்தை,  நூரா அல்-கஹ்தானி என்ற பெண் அவரது சமூக வலைதளப் பக்கமான ட்விட்டரில் பதிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து அவர் சைபர் கிரைம் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஜூலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு மீதான விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில், தற்போது நீதிமன்றம் வழக்கின் தீர்ப்பை வழங்கியுள்ளது. மன்னருக்கும் இளவரசருக்கும் எதிராக கருத்து தெரிவித்த நூராவுக்கு 45 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது உயர்நீதிமன்றம்.

சர்ச்சைக்குரிய ட்விட்டர் பதிவு பொது ஒழுங்கைச் சீர்குலைக்கிறது எனவும் நாட்டின் நிலைத்தன்மையை சீர்குலைக்க விரும்புவோரின் செயல்பாடுகளைத் தூண்டுவதாக உள்ளது எனவும் இப்பதிவின் மூலம் சவுதி அரேபியாவின் சமூகக் கட்டமைப்பை நூரா தரந்தாழ்த்தியுள்ளார் எனவும் நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது.

ஐந்து குழந்தைகளுக்குத் தாயான நூரா அல்-கஹ்தானிக்கு அளிக்கப்பட்ட இத்தீர்ப்புக்கு எதிராக மேற்கத்திய நாடுகள்  எதிர்ப்புகளைத் தெரிவித்துவருகின்றன. மேலும், இந்த தண்டனை சவுதி அரேபியாவில் மனித உரிமை நிலைமை எப்படி இருக்கிறது என்பதை எடுத்துரைக்கிறது எனவும் பலர் சமூக வலைதளங்களில் அவர்களது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.