அமெரிக்காவைச் சேர்ந்த தரவு பகுப்பாய்வு நிறுவனமான 'மார்னிங் கன்சல்ட்' சமீபத்தில் நடத்திய உலகளாவிய கணக்கெடுப்பின்படி, பிரதமர் நரேந்திர மோடி 68 சதவீத வலுவான ஏற்பு மதிப்பீட்டுடன் முதலிடத்தைப் பிடித்து, உலகளவில் மிகவும் பிரபலமான ஜனநாயகத் தலைவராக மீண்டும் உருவெடுத்துள்ளார்.
"உலகளாவிய தலைவர் ஏற்பு மதிப்பீட்டு கண்காணிப்பான்" (Global Leader Approval Rating Tracker) என்பதன் ஒரு பகுதியான இந்தத் தரவு, பிரதமர் மோடியின் நீடித்த "உள்நாட்டுப் பிரபலம்" மற்றும் "வளர்ந்து வரும் சர்வதேச அங்கீகாரம்" ஆகியவற்றை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது அவரை மற்ற முக்கிய உலகப் பொருளாதார நாடுகளின் தலைவர்களை விட கணிசமாக முன்னிலைக்கு எடுத்து செல்கிறது. மேலும், இந்த வாக்கெடுப்பில், 26 சதவீத மக்கள் மோடியை விரும்பாத நிலையிலும், சுமார் 6 சதவீத மக்கள் தங்கள் கருத்தைப் பகிரவில்லை அல்லது தங்களுக்குத் தெரியாது என்றும் கூறியிருக்கின்றனர். 'மார்னிங் கன்சல்ட்' நிறுவனத்தின்படி, இந்த மாத தொடக்கத்தில் மார்ச் 9 அன்று தரவுகள் புதுப்பிக்கப்பட்டன என்றும், சமீபத்திய ஏற்பு மதிப்பீடுகள் மார்ச் 2 முதல் 8, 2026 வரை சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அமைத்துள்ளவை என்றும் குறிப்பிடுகிறது. கணக்கெடுப்பு நடத்தப்பட்ட ஒவ்வொரு நாட்டிலும், ஏழு நாட்களாக, அங்குள்ள பெரியவர்களிடையே நடத்திய வாக்கெடுப்பின் மதிப்பீடுகளை பிரதிபலிக்கின்றன என்று அந்நிறுவனம் கூறியது.
மேலும், இந்தப் பட்டியலின் கீழே, பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன், 17 சதவீத ஏற்பு மதிப்பீடு மற்றும் 75 சதவீத அதிருப்தி மதிப்பீட்டுடன், இந்தக் கணக்கெடுப்பில் மிகக் குறைந்த தரவரிசை பெற்ற தலைவர்களில் தொடர்கிறார். சுவிட்சர்லாந்தின் கை பார்மெலின் 62% ஏற்பு விகிதத்துடன் இரண்டாம் இடத்திலும், தென் கொரிய அதிபர் லீ ஜே-மியோங் ஏறக்குறைய அதே அளவிலான ஏற்பு விகிதத்துடனும் ஆனால் அதிக அதிருப்தியுடனும் மூன்றாம் இடத்திலும் வகிக்கிறார். மேலும், கனடா பிரதமர் மார்க் கார்னி 55% ஆதரவுடன் ஏழாவது இடத்தில் இருக்கிறார். அமெரிக்க அதிபர் டிரம்ப் 39% ஏற்பு மதிப்பீடு மற்றும் 55% அதிருப்தி மதிப்பீட்டுடன் 14வது இடத்தில் இருக்கிறார். மேலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பவர்களைக் கடந்த முதல் உலகத் தலைவர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார். இதன்மூலம், இவர் டிஜிட்டல் உலகத்திலும், தலைவர்கள் வரிசையிலும் முதல் வரிசையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.