உலகம்

முன்னாள் பிரதமருக்கே இந்த நிலையா? சிறையில் இம்ரான் கான் அனுபவிக்கும் கொடுமைகள் என்ன?

இந்த நீண்டகாலத் தனிமை தனது மனநிலையையும் உடல்நிலையையும் கடுமையாகப் பாதித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மாலை முரசு செய்தி குழு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக வெளியாகியுள்ள தகவல்கள் அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சிறையில் நாள்தோறும் 22 மணி நேரம் தனிமையில் வைக்கப்படுவதாகவும், உரிய மருத்துவச் சிகிச்சை கிடைக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ள அவர், தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என எச்சரித்துள்ளார். தனக்கு மட்டுமின்றி சிறையில் இருக்கும் தனது மனைவி புஷ்ரா பீபிக்கும் உடனடியாக மருத்துவ உதவி வழங்க வேண்டும் என்று பாகிஸ்தானின் உயர் நீதிமன்ற நீதிபதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான், கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சிறையில் இருந்து வருகிறார். ஊழல் வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை அவர் எதிர்கொண்டு வருகிறார். இந்த வழக்குகள் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகள் என்று அவரது கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், அந்தக் குற்றச்சாட்டுகளை அந்நாட்டு அரசு மறுத்து வருகிறது.

தனது உடல்நிலை குறித்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், பெடரல் அரசியலமைப்பு நீதிமன்றம் மற்றும் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகளுக்கு இம்ரான் கான் திறந்த கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அவரது வழக்கறிஞர் சல்மான் சஃப்தர், நவம்பர் 11ஆம் தேதி சிறையில் அவரைச் சந்தித்தபோது வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்தக் கடிதம் தயாரிக்கப்பட்டு, நவம்பர் 16ஆம் தேதி பொதுவெளியில் வெளியிடப்பட்டது. அந்தக் கடிதத்தில், கடந்த பல மாதங்களாகத் தன்னைச் சிறையில் தனிமைப்படுத்தி வைத்துள்ளதாக இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

தினமும் 22 மணி நேரம் வரை தனி அறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், குடும்பத்தினரைச் சந்திக்கவோ, வழக்கறிஞர்களிடம் பேசவோ, தனது மகன்களுடன் தொலைபேசியில் தொடர்புகொள்ளவோ அனுமதி மறுக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். புத்தகங்கள் படிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது போன்ற அடிப்படை வசதிகளும் மறுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நீண்டகாலத் தனிமை தனது மனநிலையையும் உடல்நிலையையும் கடுமையாகப் பாதித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சிறை மருத்துவக் குழுவே தனக்கு மன அழுத்தம் இருப்பதாகக் குறிப்பிட்டு, குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடவும், புத்தகங்கள் படிக்கவும், தொலைக்காட்சி பார்க்கவும் பரிந்துரைத்ததாகக் கூறியுள்ளார். ஆனால், அந்தப் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது அவரது குற்றச்சாட்டு. தனது வலது கண்ணில் 85 சதவீத பார்வையை இழந்துவிட்டதாகவும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் வழக்கறிஞர் தன்னைச் சந்தித்தபோதுதான் இந்தப் பாதிப்பைக் கவனித்ததாகவும், தனது குடும்பத்தினருக்குக்கூட இதுபற்றி முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறையில் தனிமைப்படுத்தப்பட்டதால் தனது ரத்த அழுத்தம் கட்டுப்பாடின்றி அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார். நவம்பர் 10ஆம் தேதி தனது ரத்த அழுத்தம் 192 மற்றும் 193 என்ற அளவை எட்டியதாகவும், இதனால் மூளையில் ரத்தக்கசிவு அல்லது மாரடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே, 74 வயதான தான் உயிருடன் சிறையிலிருந்து திரும்புவேனா என்பது தெரியவில்லை என்று வேதனையுடன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபியின் உடல்நிலையும் கவலைக்குரியதாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் புஷ்ரா பீபிக்கு கண்ணில் விழித்திரை விலகல் பாதிப்பு ஏற்பட்டு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது அவரால் வெளிச்சத்தைக் கூடச் சரியாகப் பார்க்க முடியவில்லை என்றும், மீண்டும் அறுவைச் சிகிச்சை செய்யாவிட்டால் நிரந்தரமாகப் பார்வையை இழக்கும் அபாயம் இருப்பதாகவும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். அவருக்குத் தேவையான மருத்துவப் பதிவுகள் மற்றும் விருப்பமான மருத்துவர்களின் உதவி மறுக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், இம்ரான் கானை இரண்டு நாட்களுக்குள் இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிஃபா சர்வதேச மருத்துவமனைக்கு மாற்றி மருத்துவப் பரிசோதனை செய்ய உத்தரவிட்டதாக அவரது கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக இதய நோய் நிபுணர் மற்றும் கண் மருத்துவ நிபுணர் அடங்கிய மருத்துவக் குழுவையும் அமைக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆனால், அந்த உத்தரவு முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை என்பது இம்ரான் கானின் குற்றச்சாட்டு.பாதுகாப்புக் காரணங்களால் மருத்துவமனைக்கு மாற்றுவதில் மாற்றம் செய்யப்பட்டதாக பாகிஸ்தான் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அட்டாவுல்லா தரார் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் இம்ரான் கான் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கண் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனக்கும் தனது மனைவிக்கும் உரிய மருத்துவச் சிகிச்சை வழங்க வேண்டும் என்றும், ஏற்கெனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும் என்றும் இம்ரான் கான் வலியுறுத்தியுள்ளார். அவரது இந்தக் கடிதம் பாகிஸ்தானில் சிறைக் கைதிகளின் மருத்துவ உரிமைகள் மற்றும் சிறை நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்த விவாதத்தை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.