இங்கிலாந்து - பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி; இம்ரான் கான் மகன்களின் பேட்டியால்.. பாகிஸ்தான் வீரர்கள் வெளிநடப்பு?

நேர்காணல் ஒளிபரப்பாக இருந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது
Imran Khan's Son
Published on
Updated on
2 min read

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் கேப்டனுமான இம்ரான் கானின் மகன்கள் அளித்த நேர்காணல் ஸ்கை ஸ்போர்ட்ஸில்  ஒளிபரப்பிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

லார்ட்ஸில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் போது, மதிய உணவு இடைவேளையில் இம்ரான் கானின் மகன்களான சுலைமான் கான் மற்றும் காசிம் கான் ஆகியோரிடம் இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பிரபல கிரிக்கெட் வர்ணனையாளருமான மைக்கேல் அதர்டன் நேர்காணல் நடத்தினார். சுமார் 18 நிமிடங்கள் நடைபெற்ற இந்த நேர்காணலில், சிறையில் உள்ள அவர்களின் தந்தை இம்ரான் கானின் உடல்நிலை மற்றும் பாதுகாப்பு குறித்து இருவரும் கவலை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

குறிப்பாக, சிறையில் இம்ரான் கானின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காசிம் கான் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நேர்காணல் ஒளிபரப்பாக இருந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக, இம்ரான் கானின் மகன்கள் அளித்த பேட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுவதை தவிர்க்குமாறு, அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு நிறுவனமான ஸ்கை ஸ்போர்ட்ஸிடம் பிசிபி கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும், அந்த நேர்காணல் ஒளிபரப்பப்பட்டால், மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு பாகிஸ்தான் அணி வீரர்கள் மீண்டும் மைதானத்திற்கு திரும்பமாட்டார்கள் என்றும் பிசிபி தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் போட்டி பாதியில் நிறுத்தப்படும் சூழல் உருவாகும் என்ற பரபரப்பு நிலையும் ஏற்பட்டது. ஆனால், பிசிபியின் எதிர்ப்பையும் மீறி ஸ்கை ஸ்போர்ட்ஸ் அந்த நேர்காணலை திட்டமிட்டபடி ஒளிபரப்பியதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், வீரர்களை களத்திற்கு திரும்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த விவகாரத்தில் தலையிட்டு இரு தரப்பினருக்கும் இடையே நிலைமையை சமரசம் செய்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர், மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு பாகிஸ்தான் வீரர்கள் மீண்டும் களத்திற்கு திரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, பாகிஸ்தானில் ஒளிபரப்பான PTV சேனலும் அந்த நேர்காணலின் ஒரு பகுதியை ஒளிபரப்பிவிட்டு, பின்னர் விளம்பரத்திற்கு மாறியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

2018 முதல் 2022 வரை பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான், பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் பல்வேறு வழக்குகளில் சிக்கி சிறையில் உள்ளார். ஆகஸ்ட் 2023 முதல் அவர் சிறையில் இருப்பதாக கூறப்படும் நிலையில், அவரது உடல்நிலை மற்றும் பாதுகாப்பு குறித்து அவரது மகன்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் தற்போது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. மேலும், இம்ரான் கானின் உடல்நிலை குறித்து பாகிஸ்தான் பிரதமருக்கு கடிதம் எழுதிய 21 முன்னாள் கிரிக்கெட் கேப்டன்களில் மைக்கேல் அதர்டனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com