ரஷ்யா, சீனா, ஈரான் அதிபர்களுடன் மோடி சந்திப்பு.. BRICS என்பது என்ன? இந்த மாநாடு ஏன் முக்கியமானது? AI Generated
உலகம்

புதின் முதல் சீன அதிபர் வரை.. டெல்லியில் கூடும் ‘மெகா’ கூட்டம்! BRICS மாநாட்டின் பின்னணி என்ன?

பிரிக்ஸ் அமைப்பில் இணைய 44 நாடுகள் அதிகாரப்பூர்வமாக விருப்பம் தெரிவித்துள்ளன. சில நாடுகள் அமைப்பில் சேருவதற்கு முன்னோட்டமாக பிரிக்ஸ்+ என்ற அமைப்பில் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மாலை முரசு செய்தி குழு

இந்த வார இறுதியில் தலைநகர் டெல்லியில் 18வது BRICS உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இதில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகள், கூட்டணி நாடுகள் மற்றும் வெளியில் இருந்து அழைக்கப்பட்ட தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

ரஷ்யா அதிபர் புதின், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா உள்ளிட்ட தலைவர்கள் இன்று டெல்லி வந்தடைந்துள்னர். 7 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சீன அதிபர் இந்தியா வருகிறார்.

இந்த இரண்டு நாள் மாநாட்டில் தலைவர்கள் பிரிக்ஸ் உறுப்பினார்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலிமைப்படுத்துவது, பொதுவான முக்கிய விஷயங்கள், உலகளாவிய மற்றும் பிராந்திய சிக்கல்கள் பற்றிய கண்ணோட்டத்தைப் பகிர்ந்துகொள்வர்.

மாநாடு மட்டுமல்லாமல் முக்கிய தலைவர்களுடன் இந்திய பிரதமர் இருதரப்பு பேச்சுவார்த்தையும் மேற்கொள்ள உள்ளார். அமெரிக்கா - ஈரான் போர், உக்ரைன் போர், அமெரிக்காவின் வரிவிதிப்புகள் போன்றவைக் குறித்து உரையாடல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா மற்றும் இந்தியா இடையிலான நட்புறவை புதுப்பிக்க சமீபகாலமாக நடைபெற்றுவரும் முயற்சிகளில் இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

பிரிக்ஸ் மாநாட்டுக்கான தயாரிப்பாக ஏறக்கனே 25 இந்திய நகரங்களில் 350-க்கும் மேற்பட்ட கூட்டங்களும் உயர்மட்டக் கலந்தாய்வுகளும் நடத்தப்பட்டுள்ளன. பிரிக்ஸ் நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் இறுதி மாநாடு செப்டம்பர் 9-10 தேதிகளில் மும்பையில் நடைப்பெற்றது.

பிரிக்ஸ் (BRICS) என்றால் என்ன?

 ஜிம் ஓ'நீல் என்ற பொருளாதார அறிஞர் 2001ம் அவரது ஒரு அறிக்கையில் 2050ம் ஆண்டு உலகின் முக்கிய பொருளாதார மையமாக உருவாகும் நாடுகள் என பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகியவற்றைக் குறிப்பிட்டார். இந்த நாடுகளைக் குறிப்பதற்காக அவரே முதன்முதலில் பிரிக் (BRIC) என்ற சொல்லை பயன்படுத்தினார்.

இந்த நாடுகள் முற்றிலும் வெவ்வேறான சமூக கட்டமைப்புகள் மற்றும் அரசியல் பொருளாதார சித்தாந்தங்களை பின்தொடர்கின்றன. ஆனாலும் இவற்றுக்குள் ஒத்துழைப்பை வளர்க்க இந்த நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் தொடர்ந்து முறைசாரா சந்திப்புகளை நடத்தி வந்தனர்.

அதன் தொடர்ச்சியாக பிரிக்ஸ் அமைப்பு 2006-ஆம் ஆண்டு ஒரு முறைசாரா குழுவாக உருவாக்கப்பட்டது, அதன் முதல் அதிகாரப்பூர்வ உச்சிமாநாடு ஜூன் 16, 2009 அன்று நடைபெற்றது.

இந்த கூட்டமைப்பு உருவான ஓராண்டு கழித்து இதில் தென்னாப்பிரிக்கா இணைக்கப்பட்டு, S என்ற எழுத்து சேர்த்துக்கொள்ளப்பட்டது.

இரண்டாம் உலகப் போருக்கு பிறகு உலகம் அமெரிக்கா - சோவியத் யூனியன் என்ற இரண்டு துருவ அரசியல் உலகை ஆக்கிரமித்திருந்தது. சோவியத் யூனியன் சிதைவுக்கு பிறகு தனிப்பெரும் சக்தியாக இருந்தது அமெரிக்கா. அதன் வல்லாதிக்கத்துக்கு சவாலாக பிரிக்ஸ் அமைப்பு பார்க்கப்பட்டது.

அரசியல் மட்டுமல்லாமல் பொருளாதாரம் மற்றும் நிதி அமைப்புகளில் பிரிக்ஸ் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துவருகிறது. உறுப்பு நாடுகளைத் தாண்டி தெற்குல நாடுகளுக்காக குரல் கொடுக்கும் அமைப்பாக பிரிக்ஸ் உருபெற்றது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை மையமாக கொண்டு செயல்படும் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்துக்கு மாற்றாக விளங்கும் வகையில் வளரும் நாடுகளுக்கு நிதியாளிக்க புதிய மேம்பாட்டு வங்கி (NDB) மற்றும் அவசரகால கையிருப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது பிரிக்ஸ் அமைப்பு.

இது உறுப்பு நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் உள்கட்டமைப்புக்கு நிதியளிக்கவும் அவசரகாலத்தில் நிதி உதவி செய்யவும் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரிக்ஸ் நாடுகள் இணைந்து, சர்வதேச வர்த்தகத்தை மேற்கொள்ள அமெரிக்க டாலருக்கு மாற்றான ஒரு நாணயத்தை உருவாக்கத் திட்டமிட்டன. அமெரிக்கா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, பிரிக்ஸ் உறுப்பினர் நாடுகளின் மீது பொருளாதார தடை விதிப்பதாக மிரட்டியது. அதைத் தொடர்ந்து இந்த திட்டத்தின் முன்னேற்றம் மிகவும் மெதுவாகவெ நடக்கிறது.

இன்றைய பிரிக்ஸ் அமைப்பு

நிறுவன ஒப்பந்தம், ஆதரவுச் செயலகம் அல்லது தலைமையகம் எதுவும் இல்லாதபோதிலும், பிரிக்ஸ் அமைப்பு கணக்கீட்டின்படி ஒரு குறிப்பிடத்தக்க புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார சக்தியாக வளர்ந்துள்ளது. 

இன்று பிரிக்ஸில் 10 உறுப்பினர்கள் உள்ளனர். எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் கடந்த ஆண்டுகளில் இணைந்தன.

பிரிக்ஸ் நாடுகளின் ஜிடிபி வளர்ந்த நாடுகளின் ஜி7 அமைப்பின் ஜிடிபியை விட அதிகம். மொத்த உலக ஜிடிபியில் மூன்றில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிக்ஸ் நாடுகளின் கூட்டு மக்கள் தொகை உலக மக்கள் தொகையில் 40-49%. ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் இணைந்த பிறகு உலகின் எண்ணெய் இருப்பில் சுமார் 40% மற்றும் அறிய கனிமங்களில் பெரும்பகுதியை பிரிக்ஸ் நாடுகள் கட்டுப்படுத்துகின்றன.

பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர வர்த்தகம் 1 டிரில்லியன் டாலருக்கு மேலாக நடந்து வருகிறது. பிரிக்ஸ் நாடுகளில் இன்று சீனா தனித்துவமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

பிரிக்ஸ் -ல் இணைய ஆர்வம் காட்டும் நாடுகள்

பிரிக்ஸ் அமைப்பு தனித்த ஒரு தலைமையின் கீழ் இயங்குவாதில்லை. எந்த ஒரு நாடும் சர்வாதிகாரப் போக்கை மேற்கொள்வதில்லை.

சுழற்சி முறையில் தலைமை மாறி வருகின்றது. இந்தமுறை இந்தியா தலைமை தாங்குகிறது. பிரிக்ஸ் அமைப்பில் இணைய 44 நாடுகள் அதிகாரப்பூர்வமாக விருப்பம் தெரிவித்துள்ளன.

அஜர்பைஜான், பஹ்ரைன், பங்களாதேஷ், புர்கினா பாசோ, கம்போடியா, சாட், கொலம்பியா, காங்கோ குடியரசு, ஈக்வடோரியல் கினியா, ஹோண்டுராஸ், லாவோஸ், குவைத், மொராக்கோ, மியான்மர், நிகரகுவா, பாகிஸ்தான், பாலஸ்தீனப் பகுதிகள், செனகல், தெற்கு சூடான், இலங்கை, சிரியா, வெனிசுலா மற்றும் ஜிம்பாப்வே ஆகியவை இதில் அடங்கும்.

பெலாரஸ், ​​பொலிவியா, கியூபா, கஜகஸ்தான், மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், உகாண்டா மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் அமைப்பில் சேருவதற்கு முன்னோட்டமாக பிரிக்ஸ்+ என்ற அமைப்பில் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு எதிரி நாடாக இருப்பதனால் பாகிஸ்தானும் பாகிஸ்தான் உடன் நெருக்கிய தொடர்புகொண்டுள்ள துருக்கியும் இதில் இணைவதை இந்தியா தவிர்த்து வருகிறது.

அமெரிக்காவின் நட்பு நாடான சௌதி இதில் இணைவதாக செய்திகள் வெளியாகி பின்னர் முடிவு கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிரிக்ஸ் அமைப்பின் எதிர்காலம் என்ன?

மேற்கு நாடுகளின் வல்லாதிக்கத்துக்கு சவால் விடுக்கும் அமைப்பாக பிரிக்ஸ் இருந்தாலும் இதன் உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு இலக்குகள் இருப்பதனால் அதன் முழுமையான திறனுக்கு ஏற்ற மாற்றங்களை விளைவிக்க முடியவில்லை.

சீனாவும் ரஷ்யாவும் பிரிக்ஸ் அமைப்பை மேற்கத்திய மேலாதிக்கத்திற்கு ஒரு எதிர்சக்தியாக தீவிரமாக நிலைநிறுத்தும் அதே வேளையில், இந்தியாவும் பிரேசிலும் புவிசார் அரசியல் மோதலைக் காட்டிலும் பொருளாதார ஒத்துழைப்புக்கு முன்னுரிமை அளிப்பதால், இந்த அமைப்புக்குள் சர்ச்சைகள் எழ வாய்ப்புள்ளது.

இந்தியா பிரேசில் போன்ற ஜனநாயக நாடுகள் சீனா, ரஷ்யா, ஈரான் போன்ற வல்லாதிக்க நாடுகளுடன் கைக்கோர்த்து செயல்படுவாதில் பல கேள்விகள் உள்ளன.

சீனாவின் பொருளாதாரம் ஏத்தியோப்பியா போன்ற சிறிய நாடுகளின் பொருளாதாரத்துடன் ஒப்பிடுகையில் மிகப் பெரிய அளவில் வளர்ந்திருப்பதானால் கூட்டமைப்பில் ஒரு சமமின்மை நிலவுகிறது.

பிரிக் என்ற சொல்லை முதன்முறை அறிமுகப்படுத்திய ஜிம் ஓ'நீல் இது ஒரு தோல்வியடைந்த கூட்டமைப்பு என்றே கருதுகிறார். சீனாவைத் தொடர்ந்து இந்தியாவின் பொருளாதாரம் ஓரளவு வளர்ந்திருந்தாலும் ரஷ்யா, பிரேசில் நாடுகளின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடையாததால் கூட்டமைப்பை பலவீனமானதாக அவர் கருதுகிறார்.

கூட்டமைப்பிற்கு என்று ஒரு பொதுவான தலைமை அல்லது உறுதியான கட்டமைப்பு இல்லாததால், உறுப்பு நாடுகளுக்கு இடையே பல விஷயங்களில் ஒருமித்த கருத்து எட்டப்படுவதில்லை என்பது அவரது குற்றச்சாட்டு.

ஐநா, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகிய சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தங்கள் வர வேண்டும் என்று பிரிக்ஸ் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தாலும் அவற்றை சாதித்துக்காட்ட போதுமான ஒற்றுமை இல்லை. வருகின்ற ஆண்டுகளில் குறிப்பிட்ட இலக்குகளில் ஒற்றுமையாக செயல்பட்டு மேற்குலக ஆதிகத்துக்கு எதிரான வெற்றியை அடையுமா என்பதைப் பொறுத்திருந்து காணலாம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்