visa  
உலகம்

அமெரிக்க குடியுரிமை பறிபோகும் அபாயத்தில் நியூஜெர்சி இந்திய சி.இ.ஓ நீரஜ் சர்மா!

அப்போது நீதிமன்றத்தில் தன் மீதான குற்றச்சாட்டை நீரஜ் சர்மா ஒப்புக்கொண்டார்...

மாலை முரசு செய்தி குழு

அமெரிக்காவில் 'மேக்னாவிஷன்' (Magnavision LLC) என்ற ஐடி ஸ்டாஃப்பிங் (IT Staffing) நிறுவனத்தை நடத்தி வந்த இந்திய வம்சாவளி தொழிலதிபர் நீரஜ் சர்மா (50), தற்போது தனது அமெரிக்க குடியுரிமையை இழக்கும் மிகப்பெரிய சட்ட நெருக்கடியைச் சந்தித்து வருகிறார். நியூஜெர்சியைச் சேர்ந்த இவர், எச்-1பி விசா (H-1B Visa) முறைகேடுகளில் ஈடுபட்டதாக அமெரிக்க சட்டத்துறை மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் தங்கிப் பணிபுரியப் பலரும் பயன்படுத்தும் இந்த விசா முறையில் நீரஜ் சர்மா திட்டமிட்டுப் போலி ஆவணங்களைப் பயன்படுத்தியதே இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்கக் காரணமாக அமைந்தது.

அமெரிக்க அமெரிக்க புலனாய்வுத் துறையின் அறிக்கையின்படி, நீரஜ் சர்மா கடந்த 2015 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் சுமார் 11 போலி எச்-1பி விசா விண்ணப்பங்களை அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகளுக்கு (USCIS) சமர்ப்பித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள ஒரு முன்னணி சர்வதேச நிதி நிறுவனத்தில் (Global Financial Institution) வெளிநாட்டு ஊழியர்களுக்கு முழுநேர வேலை இருப்பதாகக் கூறி இந்த விசாக்கள் பெறப்பட்டுள்ளன. ஆனால், அந்த வங்கியில் அப்படி எந்த ஒரு வேலையும் ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது. நீரஜ் சர்மா அந்த வங்கியில் ஒரு ஒப்பந்த பிசினஸ் அனலிஸ்ட்டாக (Contracted Business Analyst) பணியாற்றியதைச் சாதகமாகப் பயன்படுத்தி, வங்கியின் போலி லெட்டர்ஹெட் மற்றும் வங்கி அதிகாரிகளின் போலி கையெழுத்துக்களைப் பயன்படுத்தி இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளார்.

இந்த மோசடிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, நீரஜ் சர்மா 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தனக்கான அமெரிக்கக் குடியுரிமையைப் (Naturalised US Citizenship) பெற்றார். குடியுரிமை விண்ணப்பத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது, தான் எந்த ஒரு சட்டவிரோத செயலிலும் ஈடுபடவில்லை என்றும், அமெரிக்க அரசிடம் எந்த உண்மைகளையும் மறைக்கவில்லை என்றும் அவர் அத்தாரிட்டியிடம் பொய் வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் பின்னரே 2019-ம் ஆண்டு இந்த விசா மோசடி வழக்கு வெளிச்சத்திற்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் தன் மீதான குற்றச்சாட்டை நீரஜ் சர்மா ஒப்புக்கொண்டார், அதனைத் தொடர்ந்து 2021-ல் அவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார்.

தற்போது அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், குடியேற்ற விதிகளில் தீவிரக் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நீரஜ் சர்மா நேர்மையற்ற வழியில் குடியுரிமை பெற்றதாகக் கூறி, அவரது சிட்டிசன்ஷிப்பை முழுமையாக ரத்து செய்ய அமெரிக்க சட்டத்துறை நீதிமன்றத்தை நாடியுள்ளது. இது குறித்துப் பேசிய அமெரிக்க அதிகாரிகள், "அமெரிக்கக் குடியுரிமை என்பது ஒரு பெருமைக்குரிய விஷயம், அதை நேர்மையான வழியில் மட்டுமே பெற வேண்டும்; சட்டத்தை மீறிப் பொய் சொல்லி அதைப் பெற்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அந்த உரிமையை இழக்க நேரிடும்" என்று எச்சரித்துள்ளனர். இந்தச் சம்பவம் அமெரிக்காவில் உள்ள இந்தியத் தொழில் வல்லுநர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், விசா நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.