

இந்தோனேசியாவில் நடந்த ஒரு வினோதமான சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது கணவரின் முந்தைய திருமணத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்ததை, திருமணத்திற்குப் பிறகுதான் ஒரு பெண் கண்டுபிடித்துள்ளார்.
இந்தோனேசியாவை சேர்ந்த 24 வயதான ரெனாட்டா ஃபாதியா என்ற இளம் பெண், தன்னைவிட 38 வயது மூத்தவரான 62 வயது நபரை திருமணம் செய்து கொண்டுள்ளார். சமீபத்தில் அவர் பகிர்ந்த ஒரு டிக்டாக் காணொளி மூலம் ஒரு ஆச்சரியமான தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ரெனாட்டா ஃபாதியாவின் கூற்றுப்படி, 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற அவரது கணவரின் இரண்டாவது திருமணத்தில் அவர் ஒரு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு வெறும் 9 வயதுதான். பல ஆண்டுகளுக்குப் பிறகு, தனது கணவரின் பழைய திருமண ஆல்பத்தை பார்த்துக்கொண்டிருந்தபோது, அந்த திருமணத்தில் தானும் இருந்ததை அவர் தற்செயலாகக் கண்டறிந்தார்.
வைரலான அந்தக் காணொளியில் இடம்பெற்றிருந்த குழுப் புகைப்படத்தில், சிறுமியாக இருந்த ரெனாட்டா தனது தற்போதைய கணவருக்கு அருகில் நிற்பது தெளிவாகத் தெரிகிறது. இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுகுறித்து விளக்கமளித்த ரெனாட்டா, அந்தத் திருமணத்திற்கு தூரத்து உறவினர் என்பதன் அடிப்படையில் அழைக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும், தனது கணவர் தனது அத்தையின் மருமகன் என்றும் கூறியுள்ளார். இருப்பினும், அப்போது இருவருக்கும் தனிப்பட்ட அறிமுகம் எதுவும் இல்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.
பின்னர் பல ஆண்டுகள் தொடர்பின்றி இருந்த அவர்கள், 2019-ஆம் ஆண்டு மீண்டும் சந்தித்துள்ளனர். அதன்பிறகு அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டு, 2020-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமான ஓராண்டுக்குப் பிறகு அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்துள்ளது. ரெனாட்டாவின் கணவர் தனது இரண்டாவது மனைவியுடன் 2011-ஆம் ஆண்டிலேயே விவாகரத்து பெற்றுவிட்டதாகவும், அந்த விவாகரத்துக்கு தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், அவரது கணவருக்கு முதல் திருமணத்தின் மூலம் ஒரு குழந்தை மட்டுமே இருப்பதாகவும், இரண்டாவது திருமணத்தில் குழந்தைகள் இல்லை என்றும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக தம்பதியினருக்கிடையேயான 38 ஆண்டுகள் வயது வித்தியாசம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பதிவாகி வருகின்றன. சிலர் இதை “விதியின் விளையாட்டு” என்று வர்ணித்துள்ள நிலையில், மற்றவர்கள் வயது வித்தியாசம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். குழந்தைப் பருவத்தில் தற்செயலாக சந்தித்த இருவர், பல ஆண்டுகளுக்குப் பிறகு வாழ்க்கைத் துணைகளாக இணைந்திருப்பது தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.