உலகம்

"பஞ்ச்” குரங்கை தத்தெடுத்துள்ள புதிய தாய்… அம்மாவின் அரவணைப்பை உலகிற்கு உணர்த்திய நெகிழ்ச்சியான சம்பவம்!

தாய் குரங்குகள், தனது குட்டியையே புறக்கணிக்கும் நிகழ்வு அடிக்கடி நடப்பதாக கூறுகின்றன..

மாலை முரசு செய்தி குழு

கடந்த மாதம், தனது கூட்டத்தை விட்டுப் பிரிந்து தனியாக மலையை நோக்கி நடந்துசென்ற பென்குயின் வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரின் மனங்களையும் அசைத்த நிலையில், தற்போது பொம்மையுடன் தனிமையில் இருக்கும் குரங்குக் குட்டியின் வீடியோ வைரலாகி வருகிறது. ஜப்பான் நாட்டின் இச்சிகாவா நகரத்திலுள்ள பூங்கா ஒன்றில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 26-ம் தேதி மக்காக் வகை பெண் குரங்கு ஒன்று குட்டியை ஈன்றுள்ளது.

பொதுவாக இந்த மக்காக் வகை குரங்குகள் மிகவும் புத்திசாலி குரங்குகள். பழங்களை தண்ணீரில் கழுவி சாப்பிடும் பழக்கம் கொண்டவை. இருந்தபோதும், இந்த குரங்கு முதல் முறையாக குட்டியை ஈன்றுள்ளதால், அதற்கு குட்டியை கையாளும் அனுபவம் இல்லாத நிலையில், பிறந்தது முதல், குட்டியை தன்னுடன் சேர்த்துக் கொள்ளாமல் பிரித்து விட்டுள்ளது. பிறக்கும்போது, 500 கிராம் மட்டுமே எடையுள்ள இந்த குட்டிக் குரங்கிற்கு, பஞ்ச் என பெயரிட்டனர், பூங்கா ஊழியர்கள்.

பொதுவாக குரங்குகள் பிறந்து சில மாதங்கள் வரை, தாய்க்குரங்கின் வயிற்றுப்பகுதியை இறுக பற்றிக்கொண்டு, தாயுடன் பயணிக்கும். இந்த அழுத்தம் , குட்டி குரங்குகளுக்கு, தாயுடன் ஒரு பிணைப்பையும், ஒரு பாதுகாப்பு உணர்வையும் கொடுக்கிறது. அத்துடன் அதன் தசை வலிமையையும் வளர்க்க உதவுகிறது. ஆனால் இந்த பிணைப்பு கிடைக்காததால், சில குரங்குகள் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றன என்று விலங்கியலாளர்கள் கூறுகின்றனர்.

மேலும், இந்த வகை குரங்குகள் முதல் முறையாக குட்டிகளை ஈனும்போது, குட்டிகளை கண்டு கொள்ளாமல் விடுவதே சகஜம்தானாம். குறிப்பாக வெப்பம் தாக்கும் கோடைகாலத்தில் குட்டி போடும் தாய் குரங்குகளிடம் மிகப்பெரிய சோர்வு ஏற்படுத்துகிறது. இந்த நேரத்தில் குட்டிக் குரங்கு, தாய் குரங்கை பற்றிக்கொண்டிருப்பதும் பெரும் எரிச்சலை தருகிறது தாய் குரங்கிற்கு. இதுபோன்ற வேளைகளில் தாய் குரங்குகள், தனது குட்டியையே புறக்கணிக்கும் நிகழ்வு அடிக்கடி நடப்பதாக கூறுகின்றனர்.

பிறந்தது முதல் தாய் குரங்கு, "பஞ்ச்" குட்டியை அடித்து துரத்துவதுமாக இருந்த நிலையில், போகப்போக சரியாகிவிடும் என்று பூங்கா ஊழியர்கள் எண்ணியுள்ளனர். ஆனால், அது சரியாகவில்லை. இதனால் குட்டிக்குரங்கை மற்ற குரங்கு கூட்டத்துடன் சேர்க்க பூங்கா ஊழியர்கள் முயற்சி செய்துள்ளனர். ஆனால் மற்ற குரங்குகளும், இந்த குட்டிக் குரங்கை அடித்து விரட்டி ஒதுக்கிவிட்டன. ஒவ்வொரு நாளும், உணவு கொடுக்க வரும் பூங்கா ஊழியர்களின் கால்களைக் கட்டிக்கொண்டு, இந்த குட்டிக் குரங்கு பஞ்ச், "தன்னை இங்கு விட்டு செல்லவேண்டாம், அழைத்து சென்றுவிடுங்கள்" என்பது போல அதன் செயல்கள் அமைந்தன.

இதனால் குட்டிக் குரங்கை சமாதானப்படுத்தவும், அதன் தனிமையை போக்கும் வகையிலும், பூங்கா ஊழியர்கள், பஞ்ச்க்கு ஒராங்குட்டான் என்ற குரங்கு பொம்மை ஒன்றை வாங்கி கொடுத்துள்ளனர். அந்த பொம்மையை தனது தாய் என்றே கருதிய குட்டிக்குரங்கு பஞ்ச், எங்கு சென்றாலும், அந்த பொம்மையை எடுத்து செல்கிறது. மற்ற குரங்குகள் தாக்கும்போது, அது ஓடி வந்து, தனது தாய் என்று கருதும் பொம்மைக்கு பின்னால் ஒளிந்து கொள்வதும், அந்த பொம்மையின் மீது படுத்துக் கொள்வதும் காண்போர் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

தாயை இழந்த குட்டி குரங்கு பொம்மையுடன் விளையாடும் காட்சிகள் மிகவும் உருக்கமானவை... இந்த காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில், தனிமை என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து உயிர்களுக்கும் கொடுமையானது என்பதை உணர்த்தின. இதனால் தாய் பாசத்திற்காக ஏங்கித் தவிக்கும் பஞ்ச்க்கு. சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகியது.

பஞ்ச் ஆதரவாளர்கள் ஜப்பானில் உள்ள இந்த விலங்கியல் பூங்காவிற்கு நாள்தோறும் படையெடுக்கத் தொடங்கினர். தாய்ப்பாசத்திற்காக ஏங்கும் இந்த பஞ்ச்-ஐ காணவரும் மக்கள், ஒராங்குட்டான் பொம்மைகளை வாங்கி வந்து பஞ்ச்க்கு பரிசளித்தனர். பஞ்ச்சின் இந்த நிலையை மாற்ற, மற்ற குரங்குகளுடன் பஞ்சை இணைக்கும் முயற்சியில் பூங்கா ஊழியர்கள், தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இந்த முயற்சியின் பயனாக ஒரு பெரிய குரங்கு, பஞ்ச்யை தத்தெடுத்துக் கொண்டுள்ளது.

ஒரு தாயின் அரவணைப்பு கிடைக்கப் பெற்றதால் பஞ்ச் மட்டுமின்றி, அதன் ஆதரவாளர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். இப்போது மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருக்கும் இந்த குட்டிக் குரங்கிற்கு, இனி இந்த ஒராங்குட்டான் பொம்மை தேவைப்படாமல் கூட போகலாம். ஆனால் ஒரு தாயின் அரவணைப்பு எத்தனை முக்கியம் என்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளது இந்த குட்டிக் குரங்கு பஞ்ச்சும், ஒராங்குட்டான் பொம்மையும்...

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.