உலகம்

“நட்பு நாடுகளுக்கு மட்டுமே அனுமதி” ஹோர்முஸ் ஜலசந்தியில் எதிரிகளுக்கு செக்! மீண்டும் அமெரிக்காவை சீண்டும் ஈரான்..

முக்கிய நீர்வழிகள் வழியாக தினசரி எரிசக்தி கொண்டு செல்லும் போக்குவரத்தில் 95 சதவிகித வீழ்ச்சி ஏற்பட்டது...

மாலை முரசு செய்தி குழு

மத்திய கிழக்கில் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் ஜலசந்தி இந்தியாவிற்குத் திறந்தே இருக்கும் என்று ஈரான் அறிவித்துள்ளது. பொதுவாக உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் கொண்டு செல்லப்படும் பாரசீக வளைகுடாவின் முக்கிய நீர் வழி தளத்தை , கடந்த மாதம் அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய ஈரானுக்கு எதிராக கூட்டு தாக்குதலால் முடங்கியது. தொடர்ந்த தாக்குதலால் ஹோர்முஸ் ஜலசந்தியில் போர் பதற்றம் நிலவியது. தற்போது ஈரானிய அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, மேற்கத்திய ஊடகங்களின் கூற்றுகளுக்கு மாறாக, அந்த ஜலசந்தி முழுமையாக மூடப்படவில்லை என்று தெளிவுபடுத்தினார்.

"பல கப்பல் உரிமையாளர்கள் அல்லது சில நாடுகள் எங்களை தொடர்புகொண்டு, நீர்வழிப்பாதை வழியாக அவை பாதுகாப்பாக செல்வதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. நாங்கள் நட்பு நாடுகள் என்று கருதும் சில நாடுகளுக்கு எங்கள் ஆயுதப் படைகள் பாதுகாப்பான பயணத்தை வழங்கியுள்ளது," அராக்சி தெரிவித்துள்ளார்.

“சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், ஈராக் மற்றும் இந்தியா நாடுகளின் கப்பல்கள்  சில நாட்களுக்கு முன்பு அதன் வழியாகச் சென்றன. மேலும் சில நாடுகளும், சென்றதாக நான் நம்புகிறேன்.  இந்த நாடுகள் எங்களுடன் பேசி, ஒருங்கிணைந்து செயல்படும் நாடுகள். போருக்குப் பிறகும் கூட மற்றும்  எதிர்காலத்திழும் இந்த அனுமதி தொடரும்," என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் எதிரிகளாகக் கருதப்படும் நாடுகள் அல்லது தற்போதைய மோதலில் ஈடுபட்டுள்ள நாடுகள் உடன் தொடர்புடைய கப்பல்கள் அனுமதிக்கப்படாது என்றும் அராக்சி குறிப்பிட்டார். தற்போதைய தாக்குதலுக்கு காரணமான அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் சில வளைகுடா நாடுகளின் கப்பல்களுக்கு இந்த நீர்வழிப் பாதை வழியாகச் செல்ல அனுமதி வழங்கப்படாது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

"நாம் கடும் போர்ச் சூழலில் இருக்கிறோம். இந்தப் பிராந்தியம் ஒரு போர் மண்டலமாகும், மேலும் நமது எதிரிகள் மற்றும் அவர்களின் கூட்டாளிகளின் கப்பல்கள் இதன் வழியே செல்ல அனுமதிக்க எந்தக் காரணமும் இல்லை” என்றும் மேலும் “இது மற்றவர்களுக்குத் திறந்தே இருக்கிறது," என்று அவர் தெரிவித்திருந்தார்.

குறிப்பாக, இந்த வாரத் தொடக்கத்தில், பாகிஸ்தானுக்குச் சென்றுகொண்டிருந்த ஒரு கொள்கலன் கப்பலை ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்கவிடாமல் ஈரான் தடுத்தது. ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா துறைமுகத்திலிருந்து கராச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த 'செலன்' என்ற அந்தக் கப்பல், போக்குவரத்து அனுமதி இல்லாததால், அந்த முக்கிய நீர்வழியின் நுழைவாயிலில் தனது பாதையை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என இஸ்லாமிய புரட்சிகரப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவிற்கான வழித்தடம் திறம்பட மூடப்பட்டுள்ளதால், உலகம் முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. மேலும், விமான நிறுவனங்கள் முதல் பல்பொருள் அங்காடிகள் மற்றும் பயன்படுத்தப்பட்ட கார் விற்பனையாளர்கள் வரையிலான வணிகங்கள், அதிகரித்து வரும் செலவுகள், குறைந்து வரும் தேவை மற்றும் சீர்குலைந்த விநியோகச் சங்கிலிகள் உள்ளிட்ட சவால்களுடன் போராடி வருகின்றன. சில அரசாங்கங்கள், கோவிட் பெருந்தொற்று காலத்தின்  போது பின்பற்றிய நடவடிக்கைகளை மீண்டும் பரிசீலித்து வருகின்றன.

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது குண்டு வீச்சு நடத்தியதால் தொடங்கிய இந்தப் போர், பிராந்தியம் முழுவதும் தாக்குதல்களை நடத்தி பதிலடி கொடுக்கவும், ஜலசந்திக்கு கடுமையாகக் கட்டுப்பாட்டை அளிக்கவும் தெஹ்ரானைத் தூண்டியது. இதன் விளைவாக, அந்த முக்கிய நீர்வழிகள் வழியாக தினசரி எரிசக்தி கொண்டு செல்லும் போக்குவரத்தில் 95 சதவிகித வீழ்ச்சி ஏற்பட்டது. கப்பல் போக்குவரத்துத் துறை நுண்ணறிவுத் தளமான லாயிட்ஸ் லிஸ்ட்டின்படி, இந்த வழித்தடத்தில் வழக்கமாக ஒரு நாளைக்குச் சுமார் 120 கப்பல்கள் கடந்து செல்லப்படுகின்றன. இருப்பினும், கேப்லர் என்ற பகுப்பாய்வு நிறுவனத்தின்படி, மார்ச் 1 முதல் 25 வரை, சரக்குக் கப்பல்கள் வெறும் 155 முறை மட்டுமே கடந்து சென்றுள்ளது — இது 95 சதவிகித சரிவாகும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.