பாகிஸ்தான் இடம்பெறும் ‘முஸ்லீம் நேட்டோ’! இந்தியாவுக்கு ஆபத்தா? 
உலகம்

முஸ்லீம் நேட்டோ: பாகிஸ்தான் இடம்பெறும் அமைப்பால் இந்தியாவுக்கு ஆபத்தா?

நேட்டோ கூட்டமைப்பின் 5-ம் பிரிவை (Article 5) நினைவூட்டும் வகையிலான கூட்டு பாதுகாப்பு விதிதான், பாகிஸ்தான் - சௌதி அரேபியா - துருக்கி இந்த ஒப்பந்தத்தின் மையக் கூறு.

மாலை முரசு செய்தி குழு

மத்திய கிழக்கில் புதிய பாதுகாப்பு அமைப்பு ஒன்று உருவாகி வருகிறது.

அரசியல் நோக்கர்கள் "முஸ்லிம் நேட்டோ" என்று வர்ணிக்கும் இந்த அமைப்பில், பாகிஸ்தான் ஒரு முக்கிய அங்கமாக உருவெடுத்திருக்கிறது. எகிப்து இந்த ஒப்பந்தத்தில் இணைவதைப் பரிசீலித்து வருகிறது.

ஆகஸ்ட் 7-ம் தேதி, புனித நகரமான மெக்காவில், சவூதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகள் இந்த முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன்படி, இந்த மூன்று நாடுகளில் ஏதேனும் ஒன்று மீது ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டால், அதை மூன்று நாடுகள் மீதுமான தாக்குதலாகவே கருதி, ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதாகும்.

நேட்டோ கூட்டமைப்பின் 5-ம் பிரிவை (Article 5) நினைவூட்டும் வகையிலான இந்த கூட்டு பாதுகாப்பு விதிதான், இந்த ஒப்பந்தத்தின் மையக் கூறு.

The Mecca Agreement

2025-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தானுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையே ஏற்பட்ட இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இந்த புதிய ஒப்பந்தமும் உருவாகியிருக்கிறது. கூட்டு இராணுவ பயிற்சிகள், உளவுத்துறை தகவல் பரிமாற்றம், பாதுகாப்பு உற்பத்தி ஒத்துழைப்பு போன்றவற்றை ஏற்கெனவே கொண்டிருந்த இரு நாட்டு உறவை, இது மேலும் ஆழப்படுத்தியிருப்பது கூறிப்பிடத்தக்கது.

எனவே மெக்கா பாதுகாப்பு கூட்டமைப்பு ஒப்பந்தத்தில் எகிப்தும் இணைந்தால், கிழக்கு மத்தியதரைக் கடல், செங்கடல், பாரசீக வளைகுடா, தென்னாசியா ஆகிய பகுதிகள் வரை பரவிய நான்கு நாடுகள் கொண்ட கூட்டமைப்பாக இது விரிவடையக்கூடும்.

இதில் இணைவதை அந்த நாடு "தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது" என்று எகிப்திய வெளியுறவு மந்திரி பத்ர் அப்தெலட்டி கடந்த வியாழக்கிழமை தெரிவித்தார். "எல்லா விஷயங்களிலும் இயல்பான கூட்டாளி" என்று எகிப்தை வர்ணித்த துருக்கிய வெளியுறவு மந்திரி ஹகான் ஃபிடான், "சில தொழில்நுட்ப விஷயங்கள் தீர்க்கப்பட்டவுடன்" கெய்ரோ (எகிப்தின் தலைநகர்) இணையும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார்.

அரபு உலகின் மிகப்பெரிய இராணுவத்தைக் கொண்ட எகிப்து இணைந்தால், மெக்கா ஒப்பந்தத்தின் புவியியல் மற்றும் இராணுவ பலம் கணிசமாக விரிவடையக்கூடும்.

இருப்பினும், தன்னுடைய இராஜதந்திர சமநிலையை சிக்கலாக்கிவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுடன், எகிப்து இணைவதை ஆரம்பத்தில் சவூதி அரேபியா எதிர்த்தது. மறுபுறம், எகிப்தை இணைக்க வேண்டும் என்று துருக்கி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

The Makkah Joint Defense Agreement

பாகிஸ்தானின் பங்கு

இந்தப் புதிய பாதுகாப்பு அமைப்பின் மையத்தில், பாகிஸ்தான் இருக்கிறது. ஏனென்றால் இந்த முன்மொழியப்பட்ட கூட்டமைப்பில் அணு ஆயுதம் கொண்ட ஒரே உறுப்பினர் இஸ்லாமாபாத் தான்.

பாகிஸ்தானின் புவியியல் அமைவிடம், தென்னாசியாவையும் மத்திய கிழக்கையும் இணைக்கிறது. இதன் காரணமாக, பாரசீக வளைகுடா, மத்திய ஆசியா, இந்தியப் பெருங்கடல் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய எந்தவொரு பரந்த பாதுகாப்பு ஏற்பாட்டிலும், பாகிஸ்தானுக்கு முக்கியத்துவம் கிடைக்கிறது.

ஆனால் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் நடவடிக்கைகளுக்கு இந்த ஒப்பந்தம் உதவாது என்பதே அரசியல் வல்லுனர்களின் கருத்தாக இருக்கிறது.

ஒரு கூட்டமைப்பு உயிர்ப்புடன் இருக்க அதில் உள்ள உறுப்பினர்களுக்கு பொதுவான எதிரி இருப்பது அவசியம். ரஷ்யா, சீனா போன்ற அச்சுறுத்தல் நாடுகள்தான் நேட்டோவை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. ஆனால் மெக்கா கூட்டமைப்பின் விஷயத்தில் இந்தியா எகிப்து, சௌதி நாடுகளுக்கு முக்கியமான கூட்டாளியாக விளங்குகிறது.

எகிப்து இதில் கையெழுத்திடாமல் இருக்க இந்தியா உடனான நெருக்கமே காரணமாக இருக்கலாம் என்கின்றனர்.

புதிய பாதுகாப்பு ஒழுங்கு உருவாகிறது

இந்த மெக்கா ஒப்பந்தம் தற்போதைய அமெரிக்கா தலைமையிலான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு சவாலாக இருக்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை எனினும், கூட்டு பாதுகாப்பு விஷயத்தில் பிராந்திய நாடுகளே அதிக பொறுப்பை ஏற்கும் என்பதால் இந்த ஒப்பந்தம் முக்கியத்துவம் பெறுகிறது.

Pakistan Saudi Arabia

கூட்டு பாதுகாப்பை மையமாகக் கொண்டு, இஸ்லாமிய உலகின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த நாடுகளை ஒன்றிணைப்பதன் மூலம், இராணுவ ஒருங்கிணைப்புக்கும் நெருக்கடி காலத்தில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்குமான புதிய வழிமுறையை இந்த ஒப்பந்தம் உருவாக்கக்கூடும்.

எகிப்தும் இணைந்தால் நடைமுறையில், பாகிஸ்தான் முக்கிய மூலோபாய பங்கு வகிக்கும் "மத்திய கிழக்கு நேட்டோ" ஆக இந்தக் கூட்டமைப்பு மாறக்கூடும். இது போன்ற ஒரு விரிவாக்கம், பாதுகாப்பு ஒத்துழைப்பு, இராணுவ பயிற்சிகள், ஆயுத கொள்முதல் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

பாகிஸ்தானைப் பொறுத்தவரை, சவூதி அரேபியா, துருக்கி, இப்போது இணையக்கூடிய எகிப்து ஆகிய நாடுகளுடன் நெருக்கமான பாதுகாப்பு உறவுகளை வளர்த்துக்கொள்வது, அப்பகுதியில் அதன் அந்தஸ்தை மேம்படுத்துவதோடு, தென்னாசியாவைத் தாண்டி அதன் இராணுவ கூட்டாண்மைகளையும் ஆழப்படுத்தக்கூடும்.

ஆனாலும், இந்த ஏற்பாடு, மத்திய கிழக்கு பாதுகாப்பு தகராறுகள் மற்றும் மோதல்களில் இஸ்லாமாபாத் இன்னும் அதிகமாக ஈடுபட நேரிடும் அபாயத்தையும் ஏற்படுத்தக்கூடும்.

இந்த ஒப்பந்தத்தில் எகிப்து முறையாக இணையுமா, முன்மொழியப்பட்ட இந்த கூட்டமைப்பு நடைமுறையில் எப்படி செயல்படும் என்பது குறித்த தெளிவான வரையரைகள், அடுத்த சில வாரங்களில் கிடைக்கக்கூடும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்