உலகம்

விமான நிறுவனத்தையே விலைக்கு வாங்க கிளம்பிய மக்கள்.. ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் மூடப்பட்டதால் உருவான வினோத முயற்சி!

17,000 ஊழியர்கள் வேலையிழந்துள்ளதோடு, லட்சக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் தவித்து

Muthu Lakshmi

அமெரிக்காவின் பிரபல பட்ஜெட் விமான நிறுவனமான ஸ்பிரிட் ஏர்லைன்ஸ், எரிபொருள் விலை உயர்வு மற்றும் நிதி நெருக்கடி காரணமாக தனது 34 ஆண்டுகால சேவையை அதிரடியாக நிறுத்தியுள்ளது. இதனால் சுமார் 17,000 ஊழியர்கள் வேலையிழந்துள்ளதோடு, லட்சக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் தவித்து வருகின்றனர். டிக்கெட் வைத்திருப்பவர்கள் விமான நிலையத்திற்கு வரவேண்டாம் என்று நிறுவனம் கைகழுவிய நிலையில், பாதிக்கப்பட்ட பயணிகளில் ஒருவருக்கு தோன்றிய வினோதமான யோசனை இப்போது ஒரு பெரிய இயக்கமாக மாறியுள்ளது.

ஹண்டர் பீட்டர்சன் என்ற நபர் சமூக வலைதளங்களில் "லெட்ஸ் பை ஸ்பிரிட்" (Let's Buy Spirit) என்ற இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். அமெரிக்காவில் 18 வயதிற்கு மேற்பட்ட சுமார் 25 கோடி பேர் உள்ளனர். இதில் வெறும் 20 சதவீத மக்கள் ஆளுக்கு 30 முதல் 40 டாலர்கள் கொடுத்தால் கூட, பல பில்லியன் டாலர்களைத் திரட்டி இந்த விமான நிறுவனத்தையே மக்களே விலைக்கு வாங்கிவிடலாம் என்பதுதான் அவரது திட்டம். இது ஒரு சாதாரண ஜோக்காகத் தொடங்கினாலும், தற்போது ஆயிரக்கணக்கான மக்கள் இதில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதற்காக உருவாக்கப்பட்ட இணையதளம், மக்களின் வருகை அதிகரித்ததால் பலமுறை முடங்கியது. தற்போதைய தகவல்படி, சுமார் 1.24 லட்சம் பேர் இந்த முயற்சியில் தங்களை இணைத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். இதுவரை சுமார் 8.8 கோடி டாலர் வரை நிதி தருவதாக மக்கள் உறுதி அளித்துள்ளனர். இருப்பினும், இது வெறும் உறுதிமொழி மட்டுமே என்றும், இப்போது யாரிடமும் பணம் வசூலிக்கப்படவில்லை என்றும் ஹண்டர் தெளிவுபடுத்தியுள்ளார்.

விமானத் துறையில் இதுவரை நடந்திராத ஒரு மாற்றத்தை ஏற்படுத்த இதுவே சரியான தருணம் என்று அந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பயணிகளும் ஊழியர்களும் ஒன்றிணைந்து இந்த நிறுவனத்தை மீட்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஒரு விமான நிறுவனத்தை இயக்குவதற்கு பில்லியன் கணக்கில் பணம் தேவைப்படும் என்பதை உணர்ந்துள்ள ஹண்டர், இந்தத் திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல விமானத் துறை வழக்கறிஞர்கள் மற்றும் நிபுணர்களின் உதவியை நாடி வருகிறார்.

இந்தத் திட்டமானது அமெரிக்காவின் பிரபல கால்பந்து அணியான 'கிரீன் பே பேக்கர்ஸ்' மாடலை அடிப்படையாகக் கொண்டது. அந்த அணியை எப்படி ஒரு தனி நபரோ அல்லது முதலாளியோ கட்டுப்படுத்தாமல் மக்களே நிர்வகிக்கிறார்களோ, அதேபோல் இந்த விமான நிறுவனத்தையும் ஜனநாயக முறையில் இயக்க வேண்டும் என்பதே இவர்களின் கனவு. ஒரு வேடிக்கையான யோசனையாகத் தொடங்கி, தற்போது சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ள இந்த 'ஸ்பிரிட் 2.0' முயற்சி வெற்றி பெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.