பல மாதங்களாக நீடித்து வரும் அமெரிக்கா–ஈரான் மோதலில், திடீரென பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு உருவாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே பல மாதங்களுக்குப் பிறகு நேரடி பேச்சு நடந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ள நிலையில், அதே நேரத்தில் ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே வெடிப்பு சத்தம் கேட்டதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒருபுறம் தூதரக முயற்சி தொடங்கியிருப்பதும், மறுபுறம் ராணுவ பதற்றம் தொடர்வதும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க உலக நாடுகளின் தலைவர்கள் நியூயார்க்கில் கூடியுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் பிரதிநிதிகள் சந்தித்து பேசியுள்ளனர். அமெரிக்க தரப்பில் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் ஈரான் தரப்பினருடன் சுமார் மூன்று மணி நேரம் பேசியதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை “மிகவும் நன்றாக” நடந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அடுத்த கட்ட பேச்சுகளும் விரைவில் நடைபெறும் என அவர் கூறியுள்ளார். எனினும், பேச்சுவார்த்தையில் பங்கேற்ற ஈரான் பிரதிநிதிகள் அந்நாட்டின் மிக உயர்மட்ட தலைவர்கள் அல்ல என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில், ஈரான் அரசுத் தொலைக்காட்சி வெளியிட்ட தகவலின்படி, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியும் அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே நேரடி தொடர்பு ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.
முன்னதாக இரு நாடுகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகள் பெரும்பாலும் மத்தியஸ்த நாடுகள் மூலமாகவே நடைபெற்றன. கத்தார் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் இரு தரப்புக்கும் இடையே தகவல்களை பரிமாறும் பணியில் ஈடுபட்டிருந்தன. ஜூன் மாதத்தில் ஏற்பட்ட தற்காலிக போர் நிறுத்தம் நீடிக்காமல் போனதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை முயற்சிகளும் முடங்கின. தற்போது நியூயார்க்கில் மீண்டும் தொடர்பு உருவாகியிருப்பது, மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான புதிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
ஆனால், இதே நேரத்தில் ஈரானின் முக்கியமான கடல் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணை அருகே வெடிப்பு சத்தம் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் அரசுச் செய்தி நிறுவனமான IRNA வெளியிட்ட தகவலின்படி, ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கெஷ்ம் தீவு அருகே வெடிப்பு சத்தம் கேட்கப்பட்டது. அதற்கான காரணம் என்ன, அதனால் ஏற்பட்ட பாதிப்பு என்ன என்பது உடனடியாக தெளிவாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த வெடிப்பு பேச்சுவார்த்தையுடன் தொடர்புடையதா என்பதை உறுதியாகக் கூற முடியாத நிலையே உள்ளது.
கெஷ்ம் தீவு ஏற்கனவே பல்வேறு வெடிப்பு சம்பவங்கள் குறித்து செய்திகளில் இடம்பெற்ற பகுதியாகும். தற்போது அங்கு மீண்டும் வெடிப்பு சத்தம் கேட்டிருப்பது, ஏற்கனவே பதற்றமாக உள்ள பிராந்திய சூழ்நிலையை மேலும் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளது. உலக பொருளாதாரத்துக்கும் ஹோர்முஸ் நீரிணை முக்கியமானது. வளைகுடா நாடுகளில் இருந்து உலகின் பல பகுதிகளுக்கு செல்லும் கச்சா எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு உள்ளிட்ட எரிசக்தி பொருட்களின் கடல் போக்குவரத்துக்கு இந்த நீர்வழி முக்கியமான பாதையாக உள்ளது. அதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டாலோ அல்லது பாதுகாப்பு தொடர்பான அச்சம் அதிகரித்தாலோ, சர்வதேச எரிசக்தி சந்தையிலும் அதன் தாக்கம் உணரப்படலாம்.
இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பாக ஈரான் சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா தனது ராணுவ அழுத்தத்தை குறைத்து, ஈரான் துறைமுகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள முற்றுகையை நீக்கினால், ஏழு நாட்களுக்குள் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என்று ஈரான் தரப்பைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்க அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக முன்வர வேண்டும் என்றும் ஈரான் தரப்பு கூறியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்