அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் 'நாடு கடத்தும்' நடவடிக்கையைத் தொடர்ந்து, அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் குடியேறிகள், கைதாவது மற்றும் தடுப்புக்காவலை எதிர்கொள்வதற்குப் பதிலாக, தாங்களாகவே நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கும் புதிய செயலி ஒன்றை டிரம்ப் நிர்வாகம் கடந்த மார்ச் 10ம் தேதி அறிமுகப்படுத்தியது. சிபிபி ஹோம் (CBP Home) எனப்படும் அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புச் செயலி, ஒருவர் தனது 'புறப்படும் எண்ணத்தை' தெரிவிப்பதற்கான ஒரு விருப்பத்தை வழங்கும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த 'CBP ஹோம்' செயலியானது, வெளிநாட்டினருக்கு, தாங்களாகவே நாட்டை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்பினை வழங்குகிறது. இதன் மூலம், அவர்கள் எதிர்காலத்தில் சட்டப்பூர்வமாகத் திரும்பி வந்து அமெரிக்கவில் வாழ ஒரு வாய்ப்பு கிடைக்கும், என்று உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோம் அறிக்கையில் கூறியிருக்கிறார். "அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால், நாங்கள் அவர்களைக் கண்டுபிடித்து, நாடு கடத்திவிடுவோம்; அவர்கள் மீண்டும் ஒருபோதும் அமெரிக்கா திரும்பி வரமாட்டார்கள்'', என்றும் அவர் கூறியிருக்கிறார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் வெளிநாட்டினரை நாட்டை விட்டு வெளியேற்ற அழுத்தம் கொடுக்கக்கூடிய பிற நடவடிக்கைகளையும் டிரம்ப் நிர்வாகம் எடுத்துவந்தது. மேலும், ஏப்ரல் 11 அன்று அமலுக்கு வரவிருக்கும் ட்ரம்ப் நிர்வாகத்தின் விதிமுறையின்படி, சட்டப்பூர்வ அந்தஸ்து இல்லாதவர்கள் அரசிடம் வந்து பதிவு செய்ய வேண்டும், இல்லையெனில் அபராதம் அல்லது சிறைத் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்று கூறப்பட்டிருந்தது.
பைடன் ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 'CBP One' என்ற செயலிக்கு மாற்றாக 'CBP Home' நடைமுறைக்கு தற்போது வந்துள்ளது. பைடன் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அந்தச் செயலியில், மெக்சிகோவில் உள்ள சுமார் பத்து லட்சம் புலம்பெயர்ந்தோர், சட்டப்பூர்வமான எல்லைக் கடப்பில் நுழைவு கோருவதற்காக ஒரு சந்திப்பை முன்பதிவு செய்ய அனுமதிக்கும் ஓர் அம்சம் இடம்பெற்றிருந்தது. பைடனின் இத்திட்டம் அமெரிக்காவிற்குப் பெருமளவிலான குடியேற்றத்தை எளிதாக்கியதாகவும், குடியேறிகளை முறையாகச் சரிபார்க்கவில்லை என்றும் கூறி, குடியரசுக் கட்சியினர் அத்திட்டத்தை விமர்சித்தனர். இதனையடுத்து, ட்ரம்ப் பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே 'CBP One' சேவையை முடக்கியனார். இதனால் முன்பதிவு செய்திருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் செய்வதறியது, அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன வென்று தெரியாமல் தவித்தனர். இந்நிலையில் தற்போது இந்த CBP Home என்ற புதிய ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
CBP One ஆப் பற்றி...:
CBP Home-ஐப் பயன்படுத்த விரும்பும் வெளிநாட்டினர், முழுப் பெயர், பிறந்த தேதி, குடியுரிமை நாடு, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண், பாலினம், பயண ஆவணத் தகவல் மற்றும் புகைப்படம் உள்ளிட்ட சுயவிவர மற்றும் பயோமெட்ரிக் தகவல்களை பெறுகிறது. மேலும், தகவல் சமர்ப்பிக்கப்பட்ட, அவர்களுடைய இடத்தின் தகவலையும் எடுத்துக்கொள்ளும். மேலும், CBP மொபைல் சாதனப் பயனரிடமிருந்து பின்வரும் தகவல்களைச் சேகரிக்கிறது: செல்லுலார் இயக்கப்பட்ட காட்டி, வைஃபை இயக்கப்பட்ட காட்டி, தொலைபேசி மாடல், தொலைபேசி இயக்க முறைமை வகை, மற்றும் சாதன அடையாள டோக்கன். இந்தத் தகவல்கள் CBP Home மூலம் சேகரிக்கப்பட்டு, மொபைல் சாதனப் பயனருக்கு 'புஷ் நோட்டிபிகேஷன்'அனுப்பப்படும்.
சிறப்பு உதவிகள்:
CBP ஹோம் மொபைல் செயலி மூலம் தாமாக முன்வந்து வெளியேறப் பதிவு செய்யும் சட்டவிரோதக் குடியேறிகளுக்கு இலவசப் பயணமாக, $2,600 'வெளியேறும் ஊக்கத்தொகை' மற்றும் வெளியேறத் தவறியதற்கான அபாரதங்களையும் தள்ளுபடி செய்கிறது. உதவி கோரும் சட்டவிரோதக் குடியேறிகளுக்கு உரிய நேரத்தில் வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். CBP ஹோம் மொபைல் செயலியானது, சட்டவிரோதக் குடியேறிகள் தங்கள் வேலை, பள்ளி மற்றும் தனிப்பட்ட விஷயங்களை முடித்துக்கொண்டு, சட்டப்பூர்வமான முறையில் தங்கள் திரும்புதலைத் திட்டமிடவும், உரிய நேரத்தில் வெளியேறுவதற்கான வாய்ப்பைப் பெறவும் உதவும் என்று கூறியிருக்கின்றனர்.
இதன் மூலம் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்களை அவரவர் நாட்டிற்கு எந்த சிக்கலும் இல்லாமல் அனுப்பி வைக்கமுடியும் என்று கூறப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.