டிரம்பின் மீது துப்பாக்கி சூடு  டிரம்பின் மீது துப்பாக்கி சூடு
உலகம்

டிரம்ப் மீது துப்பாக்கிசூடு! - கொந்தளித்த உலக தலைவர்கள் ஈரானின் சதியா இது?

வாஷிங்டனின் ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற அந்த நிகழ்விடம் மகிழ்ச்சியால் நிறைந்திருக்க, ட்ரம்பின் திட்டம் துப்பாக்கிச் சத்தத்தால் தடைபட்டது.

Vinvizhi Leninton

சனிக்கிழமை இரவு நடைபெற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர் சங்கத்தின் இரவு விருந்தின்போது துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதை அடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் , முதல் பெண்மணி மெலானியா டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் ஆகியோர் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். நிகழ்ச்சியிலிருந்து டிரம்ப் வெளியேற்றப்பட்ட சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு , "துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்" என்று அவர் 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் ட்ரம்ப் பதிவிட்டார்."வாஷிங்டன் டி.சி.யில் அது ஒரு மறக்க முடியாத மாலைப் பொழுதாக அமைந்தது. இரகசிய சேவையும் சட்ட அமலாக்கத் துறையும் மிகச் சிறப்பாகப் பணியாற்றின," என்று அவர் பதிவிட்டிருந்தார். வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் நடந்த அந்த நிகழ்வில் சுமார் 2,600 பேர் கலந்துகொண்டனர். கடந்த 100 ஆண்டுகளில் இருந்த அமெரிக்க அதிபர்களைப் போலல்லாமல், டொனால்ட் டிரம்ப் ஒருமுறை கூட வெள்ளை மாளிகையில் செய்தியாளர் இரவு விருந்தில் (WHCD) கலந்துகொண்டதில்லை. இந்த ஆண்டு, பத்திரிகைகளுடனான தனது நிலையற்ற உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முனைந்தார்.

வாஷிங்டனின் ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற அந்த நிகழ்விடம் மகிழ்ச்சியால் நிறைந்திருக்க, டிரம்பின் திட்டம் துப்பாக்கிச் சத்தத்தால் தடைபட்டது. இதுகுறித்து பல்வேறு நாட்டின் தலைவர்களும் தங்களது எதிர்ப்பினை சமூக வலைதளபக்கத்தின் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். "அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்துகொண்ட வெள்ளை மாளிகை ஊடக விருந்தில் துப்பாக்கியோடு ஒரு மர்ம நபர் புகுந்து தாக்கிய சம்பவம் "ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். அவரைத்தொடர்ந்து, "நான் டொனால்ட் டிரம்பிற்கு எனது முழு ஆதரவையும் அளிக்கிறேன்."வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் இரவு விருந்தில் காணப்பட்ட காட்சிகளால் தாம் அதிர்ச்சியடைந்ததாக இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். மேலும், "ஜனநாயக நிறுவனங்கள் மீதோ அல்லது பத்திரிக்கை சுதந்திரத்தின் மீதோ நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலும் மிகக் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டும்," என்று அவர் X தளத்தில் எழுதியதோடு, டிரம்ப் மற்றும் பிறர் பாதுகாப்பாக இருப்பது "பெரும் நிம்மதி" என்றும் குறிப்பிட்டார். அதன் பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "இந்தச் சம்பவம் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக நீடித்து வரும் மோதலுடன் தொடர்புடையது அல்ல' என்று தாம் நம்புவதாகக் கூறினார். "இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்கும் ஈரான் போருக்கும் தொடர்பு உள்ளதா? என்று பத்திரிகையாளர் கேட்டபோது, ​​"அப்படி நான் நினைக்கவில்லை, ஆனால் எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது," என்று ட்ரம்ப் பதிலளித்தார்.

"ஈரானில் நடக்கும் போரில் வெற்றி பெறுவதிலிருந்து இது என்னைத் தடுக்கப் போவதில்லை. அதற்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு இருந்ததா? என்று எனக்குத் தெரியவில்லை; நமக்குத் தெரிந்தவற்றின் அடிப்படையில், அப்படி நான் நிச்சயமாக நினைக்கவில்லை, ஆனால் நாங்கள் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுவோம்," என்று டிரம்ப் கூறினார். இதையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை பிரதமர் நரேந்திர மோடி கண்டித்ததோடு, "ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை" என்றும் கூறியுள்ளார். வாஷிங்டன் டி.சி. ஹோட்டல் ஒன்றில் சமீபத்தில் நடந்த பாதுகாப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, அதிபர் டிரம்ப், முதல் பெண்மணி மற்றும் துணை அதிபர் ஆகியோர் பாதுகாப்பாகவும் காயமின்றியும் உள்ளனர் என்பதை அறிந்து நிம்மதி அடைந்தேன். அவர்கள் தொடர்ந்து பாதுகாப்பாகவும் நலமாகவும் இருக்க எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை, அது சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கப்பட வேண்டும்," என்று அவர் X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்