உலகம்

கேள்விகுறியாகிறதா ட்ரம்பின் அதிபர் கனவு....என்ன செய்ய போகிறார் ட்ரம்ப்!!!

டொனால்ட் டிரம்ப் அதிபராக இருந்த காலத்திலிருந்தே வரி செலுத்துவது தொடர்பான சர்ச்சை நீடித்து வருகிறது. டிரம்ப் வாழ்க்கை முழுவதும் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தார் என்றாலும் அமெரிக்க சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அவருக்கு சாதகமாக்கிக் கொண்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Malaimurasu Seithigal TV

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் வரிக் கணக்குகள் விரைவில் வெளியிடப்படும் என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்பட்டு வருகிறது. அமெரிக்க பாராளுமன்றத்தின் ஒரு குழு கடந்த வாரம் டிரம்பின் வரி அறிக்கையை வெளியிடுவதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தது. ஆனால் வரிக் கணக்குகளின் திருத்தப்பட்ட பகுதிகள் மட்டுமே வெளிவரும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதிநிதிகள் சபையில்:

அமெரிக்க காங்கிரஸின் கீழ் சபையின் பதவிக்காலம் அடுத்த வாரம் முடிவடைகிறது.  அதன்பிறகு, இந்த ஆண்டு நவம்பரில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய சபையின் பதவிக்காலம் தொடங்கும், இதில் டிரம்பின் குடியரசுக் கட்சி பெரும்பான்மையைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பைடனின் பதவிக்காலம் முடிவதற்குள் டிரம்பின் வரி ஆவணங்களை வெளியிடுவதற்கு ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளதாக அங்குள்ள அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

டிரம்பிற்கு எதிராக:

நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு கடந்த மாதம் டிரம்பின் வரி ஆவணங்களை ஹவுஸ் கமிட்டி பெற்றது. இந்த விவகாரத்தில் ஹவுஸ் கமிட்டிக்கு ஆதரவாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பளித்தது.  ட்ரம்பின் வணிகம் தொடர்பான ஆவணங்களை பகிரங்கப்படுத்துவது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தலாம் என அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வரி ஆவணங்களை பகிரங்கமாக வெளியிடுவது அமெரிக்காவில் உள்ள ஒரு பாரம்பரியம். ஆனால் 2016 தேர்தலில் டிரம்ப் வேட்பாளராக வந்தபோது, ​​அவர் இந்த பாரம்பரியத்தை உடைத்தார் என்பது கவனிக்கத்தக்கது. இதனால் அவரது வரி ஆவணங்களில் ஏமாற்று தனம் உள்ளது என அப்போதே சந்தேகம் எழுந்த நிலையில் கடந்த ஆறு வருடங்களாக இது ஒரு முக்கிய அரசியல் பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.

கேள்விகுறியாகும் எதிர்காலம்:

எனவே பொதுவாக வெளியிடப்படும் வரி அறிக்கைகள் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக டிரம்ப் ஏற்கனவே அறிவித்துள்ளார். வரி ஏய்ப்ப்பு உண்மையானால் அவரது வேட்புமனுவுக்கு அது பெரும் அடியாக இருக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.  வெளியிடப்படும் ஆவணங்களில் 2015 முதல் 2021 வரையிலான டிரம்பின் வரிக் கணக்குகள் அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் வெளியான பிறகு அவர் அமைதியாக இருப்பது கடினம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

-நப்பசலையார்