UAE: Sheikh Mohamed bin Zayed Al Nahyan 
உலகம்

தப்பிக்குமா UAE? ஈரானுக்கு கொடுத்த 3 பில்லியன் டாலர், 2 டன் தங்கம்... பின்னணி என்ன?

அமெரிக்க பொருளாதாரத் தடைகளால் ஈரானின் பொருளாதாரம் கடும் நெருக்கடியில் இருக்கும் இந்த நேரத்தில், இந்த பரிமாற்றங்கள் மூலம் ஈரானுக்கு நிதி ஆதாரங்கள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

மாலை முரசு செய்தி குழு

ஈரானின் மீது அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) அந்த நாட்டு வங்கிகளில் முடக்கப்பட்டிருந்த ஈரானின் சில பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களை விடுவித்திருப்பதாக தெஹ்ரானை சேர்ந்த பல தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் சுமார் ரூ.2,700 கோடி (283 மில்லியன் டாலர்) மதிப்பிலான இரண்டு டன் தங்கமும் அடங்கும்.

அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் மாதக் கணக்காக நீண்டு கொண்டிருக்கிறது. இருதரப்பிலும் பிரச்னையை பேசி தீர்க்க எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன.

அமெரிக்கா ஈரானைத் தாக்கும்போது ஈரான் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தலங்களையே குறிவைத்து தாக்குகிறது. இதனால் வளைகுடா நாடுகள் பாதிக்கப்படுவதுடன் பாதுகாப்பு அற்றவையாகவும் மாறுகின்றன. யுஏஇ போன்ற சுற்றுலாவை முக்கிய வருமான மூலமாகக் கொண்ட நாட்டுக்கு இது பொறுத்துக்கொள்ள முடியாத இழப்பு.

Dubai Skyline Against Clear Blue Sky

அமெரிக்கா-ஈரான் பகைமை தொடர்ந்தால், எதிர்காலத்தில் ஈரான் மேற்கொள்ளக்கூடிய பதிலடி நடவடிக்கைகளில் இருந்து தன்னை விலக்கி வைத்துக் கொள்வதற்காகவே யுஏஇ இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்திருப்பதானால் அதன் சொத்துக்களை விடுவிக்கும் செயல் அமெரிக்காவை பகைத்துக்கொள்ள வழிவகுக்கும். அந்த நாடுகள் மீது அமெரிக்கா இரண்டாம் நிலை பொருளாதார தடைகளை விதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சொத்துக்கள் விடுவிக்கப்பட்டிருப்பதாக ஈரான் தரப்பு சொல்லும் தகவலை மறுத்துள்ளது யுஏஇ. ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியான போதிலும், அமெரிக்க அரசோ அல்லது அமெரிக்க வெளியுறவுத் துறையோ (US State Department) இந்தத் தகவலை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

அபுதாபியிலிருந்து ஈரானுக்கு பறந்த விமானம்

ஆகஸ்ட் 11, 12 ஆகிய தேதிகளில் அபுதாபியிலிருந்து விமானங்கள் தெஹ்ரானின் மெஹராபாத் விமான நிலையத்திற்கும், கராஜ் நகரின் பயாம் விமான நிலையத்திற்கும் பறந்து சென்றதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

Iran Supreme Leader mojtaba khamenei

இந்த விமானங்கள் ஒவ்வொரு முறையும் சுமார் ஒரு மணி நேரம் தரையில் நின்ற பிறகு, மீண்டும் யுஏஇக்கே திரும்பிச் சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன்பு ஜூன் 8ஆம் தேதியும் இதே விமானம் அபுதாபியிலிருந்து மெஹராபாத் விமான நிலையத்திற்கு பறந்து சென்றிருந்தது. அப்போது சுமார் 3 பில்லியன் டாலர் ஈரானுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மொத்தமாக 10 பில்லியன் டாலர் வரை விடுவிக்க ஐக்கிய அரபு அமீரகம் ஒப்புக்கொண்டிருப்பதாகவும், இப்போது நடந்திருக்கும் இந்த புதிய பரிமாற்றங்களில் வங்கிகளில் முடக்கப்பட்டிருந்த ஈரானிய சொத்துக்கள் விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் ராய்ட்டர்ஸ் செய்திதளம் கூறுகிறது.

அமெரிக்க பொருளாதாரத் தடைகளால் ஈரானின் பொருளாதாரம் கடும் நெருக்கடியில் இருக்கும் இந்த நேரத்தில், இந்த பரிமாற்றங்கள் மூலம் ஈரானுக்கு நிதி ஆதாரங்கள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஈரானுக்கு விமானங்களை விற்க யுஏஇ உதவி

இதுமட்டுமல்லாமல் 15 பழைய பயணிகள் விமானங்களை ஈரானிய விமான நிறுவனங்களுக்கு விற்பதற்கும் யுஏஇ அனுமதி அளித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்பு சவூதி விமான நிறுவனத்திற்கு (Saudia) சொந்தமான போயிங் 777-268ER மாடல் விமானங்கள், யுஏஇயை தளமாகக் கொண்ட ECT ஏவியேஷன் சப்போர்ட் நிறுவனம் மூலம் ஈரானுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போயிங் விமானங்கள்

மேலும் மூன்று போயிங் 737-300/500 மாடல் விமானங்கள், யுஏஇயை தளமாகக் கொண்ட ஏரோவிஷன் FZ நிறுவனம் மூலம் ஈரானிய விமான நிறுவனங்களுக்கு விற்கப்பட்டுள்ளன.

அதேபோல, முன்பு காண்டர் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு ஏர்பஸ் A320-212 மாடல் விமானங்கள், ஸ்கைசோர்ஸ் FZ நிறுவனம் மூலம் விற்கப்பட்டிருக்கின்றன. இத்துடன் இரண்டு ஏர்பஸ் A320 விமானங்களும் ஏற்கெனவே ஈரானுக்கு பறந்து சென்றுவிட்டன.

மேலும் ஈரானை வந்தடையும் விமானங்கள்

யுஏஇயை தளமாகக் கொண்ட நிறுவனங்களின் உதவியுடன், மேலும் 14 பயணிகள் விமானங்கள் ஈரானுக்கு அனுப்பப்படக்கூடும் என தகவல் மூலங்கள் தெரிவிக்கின்றன.

C9-ACE மற்றும் C9-ACF என அடையாளம் காணப்பட்ட இரண்டு ஏர்பஸ் A320-212 மாடல் விமானங்கள், ரோமேனியாவின் ஜார்ஜ் எனெஸ்கு சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த காட்சிகளை செயற்கைக்கோள் படங்கள் காட்டியிருந்தன. இதற்குப் பிறகே இந்த விமானங்கள் ஈரானுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

'ஆபரேஷன் எபிக் ஃப்யூரி' மற்றும் 'லயன்ஸ் ரோர்' எனும் இராணுவ நடவடிக்கைகளின் போது, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களால் 30க்கும் மேற்பட்ட ஈரானிய பயணிகள் விமானங்கள் அழிக்கப்பட்டதாக ஈரானிய தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றுக்கு பதிலாக இந்த புதிய விமானங்கள் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

trump

அமெரிக்கா-ஈரான் மோதலில் இருந்து விலகியிருக்க யுஏஇ முயற்சி

ஈரான்-அமெரிக்கா மோதலில் தான் நேரடியாக இலக்காக மாறிவிடக்கூடாது என்பதற்காக யுஏஇ மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாகவே, இந்த நிதி மற்றும் விமான பரிமாற்றங்கள் நடந்திருக்கின்றன என தகவல் மூலங்கள் தெரிவிக்கின்றன.

அடித்தடுத்து நடைபெறும் மோதல்களின்போது தங்கள் நாட்டை குறிவைக்க வேண்டாம் என்ற உறுதிமொழியைப் பெறுவதற்காக, யுஏஇ அதிகாரிகள் ஈரானிய தரப்புடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் மூலங்கள் குறிப்பிடுகின்றன.

முடக்கப்பட்டிருந்த சொத்துக்களை, தங்கம் உள்பட விடுவித்திருப்பதும், விமான பரிமாற்றங்களுக்கு உதவியிருப்பதும், இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகவே சர்வதேச அரசியல் நோக்கர்களால் முன்வைக்கப்படுகின்றன.

ஈரானுக்கு எதிராக யுஏஇ கடும் நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக சமூக ஊடகங்களில் காட்டப்படும் பிம்பத்திற்கும், இந்த நிகழ்வுகளுக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது.

ஈரானின் பதிலடி நடவடிக்கைகளால் ஏற்படும் ஆபத்தைக் குறைப்பதற்கான வழிமுறைகளையே அபுதாபி மேற்கொண்டு வருகிறது என்பதையே தெஹ்ரானை சேர்ந்தவர்கள் கொடுக்கும் விவரங்கள் காட்டுகின்றன.

அமெரிக்காவும் ஈரானும் இன்னும் ஒரு உடன்பாட்டு விதிமுறைகளில் உடன்படாமலும், பிராந்தியம் முழுவதும் பதற்றம் தொடர்ந்து நிலவிவருவதாலும் - அமெரிக்கா-ஈரான் மோதலின் பாதிப்புகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வளைகுடா நாடுகள் எந்த அளவுக்கு முயற்சி எடுத்து வருகின்றன என்பதை யுஏஇயின் இந்த நடவடிக்கைகள் காட்டுகின்றன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்