"கோல்டி பிரார் என்றும் அறியப்படும் சதிந்தர்ஜீத் சிங் ஒரு ஆபத்தான நபர். அவரைப் பிடிப்பதை எஃப்.பி.ஐ.யும் எங்கள் கூட்டாளிகளும் தங்களின் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளோம். இதன் காரணமாகவே, நாங்கள் அவரை எஃப்.பி.ஐ.யின் முதல் பத்து தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்து, அவரைக் கைது செய்வதற்கு 1 மில்லியன் டாலர் வரை வெகுமதி வழங்குகிறோம்." என அமெரிக்க அரசின் புலனாய்வு அமைப்பான Federal Bureau of Investigation (FBI) அறிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி FBI தனது டாப் 10 அதிகம் தேடப்படும் தப்பியோடியவர்கள் (Most Wanted Fugitives) பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த கோல்டி பிரார் என்றழைக்கப்படும் சதிந்தர்ஜீத் சிங் இடம்பெற்றுள்ளார். கொலை, மிரட்டிப் பணம் பறித்தல், போதைப்பொருள் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு கூட்டாட்சி குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் தேடப்பட்டு வருகிறார்.
சிங் மிகவும் வன்முறையானவர், ஆயுதம் ஏந்தியவர் மற்றும் ஆபத்தானவர் என FBI எச்சரித்துள்ளது. அவர் கலிபோர்னியாவிலும், கனடாவின் பல்வேறு பகுதிகளிலும் வசித்து வருவதாகக் கணித்துள்ளனர்.
தெற்கு கலிபோர்னியாவிலும், அமெரிக்கா மற்றும் கனடா முழுவதிலும் பல்வேறு வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படும் லாரன்ஸ் பிஷ்னோய் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவில் (Organized Criminal Group) தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் சிங் தேடப்படுகிறார்.
மேலும், அந்தக் குழுவின் வட அமெரிக்கத் தலைவராக சந்தேகிக்கப்படுகிறார். லாரன்ஸ் பிஷ்னோய் தற்போது இந்தியாவில் சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் முதல் உதவி அரசு வழக்கறிஞர் பில் எஸ்ஸெய்லி, "கனடா, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள சட்ட அமலாக்கத் துறைகளுடன் இணைந்து பணியாற்றி, 'கோல்டி பிரார்' போன்ற குண்டர்களை நாங்கள் தொடர்ந்து வேட்டையாடுவோம். மேலும், அவர்கள் மீண்டும் ஒருபோதும் சிறைக்கு வெளியே வராமல் இருப்பதை உறுதி செய்வோம்" எனக் கூறியுள்ளார்.
FBI 33 வயது லாரன்ஸ் பிஷ்னோய் குறித்து கூறுகையில், "பிஷ்னோய் தன்னை ஒரு ஆழ்ந்த 'மதப்பற்றுள்ள தேசபக்தராக' பொதுவெளியில் காட்டிக்கொண்டார். மேலும், இந்தப் பொதுப் பிம்பத்தைப் பயன்படுத்தி இந்தியா, அமெரிக்கா மற்றும் பிற இடங்களில் உள்ள தனது குற்றக் கும்பலுக்கு உறுப்பினர்களையும் கூட்டாளிகளையும் சேர்த்தார்" எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், தன்னைத்தானே பல்கலைக்கழக மாணவர் தலைவனாகக் காட்டிக்கொண்ட லாரன்ஸ், அரசியலில் சலிப்புற்று, தன்னையும் தன் சகாக்களையும் குற்றக் கும்பல்களுடன் இணைத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தியச் சிறையில் இருந்து உலகம் முழுவதும் இருக்கும் தனது கூட்டாளிகளை பிஷ்னோய் இயக்குவதாகவும் FBI கூறியுள்ளது.
கனடா அரசு கடந்த 2025-ஆம் ஆண்டு பிஷ்னோய் கும்பலைத் தீவிரவாத அமைப்பாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட மதகுருவான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் பிஷ்னோய் கும்பல் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இதனுடன், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் மற்றும் கலிஃபோர்னியாவில் உள்ள போட்டி போதைப்பொருள் கடத்தல் கும்பலுடனான வன்முறையில் அடிக்கடி ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்