US Flight Cancellations November 2026 
உலகம்

“ஒரே நாளில் அமெரிக்காவில் 7,000 விமானங்கள் ரத்து” - 4 மணி நேரமாக அவதிப்பட்ட பயணிகள்.. மைக்ரோசாப்ட் பாதிப்பு தான் இதற்கும் காரணமா?

அமெரிக்காவில் நடந்த விமான ரத்திற்கும் தங்களது சேவை முடங்கியதற்கும் எந்த தொடர்பும் இல்லை..

Mahalakshmi Somasundaram

அமெரிக்காவில் தொலைத்தொடர்பு அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நாடு முழுவதும் விமான சேவையில் தாமதம் ஏற்பட்டது. விமான நிலயங்களில் இருந்து புறப்பட தயாராக இருந்த விமானங்களை சுமார் 4 மணி நேரம் நிறுத்தி வைக்கும் உத்தரவை அந்நாட்டின் மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA) பிறப்பித்தது. இதனால் ஆயிரக்கணக்கான விமானங்கள் தாமதமாகின; பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் விமான நிலையங்களில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். அமெரிக்காவின் விமானப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் முக்கியத் தொலைத்தொடர்பு அமைப்பான L3 harris நிறுவனத்தில் நேற்று (நவம்பர் 13) ஆம் தேதி திடீர் கோளாறு ஏற்பட்டது.

குறிப்பாக, நாடு முழுவதும் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையங்களைப் பாதிக்கும் வகையில் தகவல் தொடர்பில் பாதிப்பு ஏற்பட்டதாக அமெரிக்கப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சீன் டஃபி தெரிவித்தார். எனவே மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அனைத்து அமெரிக்க விமான நிலையங்களிலும் புறப்பட வேண்டிய விமானங்களைத் தரையிலேயே நிறுத்தி வைக்க FAA உத்தரவிட்டது. ஏற்கெனவே வானில் பறந்து கொண்டிருந்த விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கப்பட்டன. மேலும் சர்வதேச விமானங்களின் இயக்கம் ஒவ்வொன்றாகப் பரிசீலிக்கப்பட்டது.

இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடு முழுவதும் உள்ள மைக்ரோசாப்ட் சேவைகள் 10 மணி நேரத்திற்கு மேலாக முடங்கியுள்ளது. எனவே இதன் காரணமாக அமெரிக்கா விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் இது குறித்து மைக்ரோசாப்ட் தனது வலைதள பக்கத்தில் “அமெரிக்காவில் நடந்த விமான ரத்திற்கும் தங்களது சேவை முடங்கியதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் முழுக்க முழுக்க இவை இரண்டும் தனிப்பட்ட தொழில்நுட்ப பாதிப்புகள்” என்றும் விளக்கமளித்துள்ளது.

தொடர்ந்து விமான சேவை ரத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் சீன் டஃபி, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பில் பயன்படுத்தப்படும் பழைய தொழில்நுட்பங்களே விமான சேவை முடக்கத்திற்கு காரணமாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, பழைய சுவிட்ச்கள், ரவுட்டர்கள் மற்றும் 1980-களில் பயன்படுத்தப்பட்ட செம்புக் கம்பிகள் (Copper Lines) கொண்ட தொலைத்தொடர்பு அமைப்பு அதிகப்படியான சுமையைத் தாங்க முடியாமல் செயலிழந்ததாக அவர் விளக்கினார். இதனால் நாடு முழுவதும் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையங்களில் தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும், சைபர் தாக்குதலால் தான் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது என செய்திகள் பரவிய நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக “இந்தச் சம்பவம் சைபர் தாக்குதலால் ஏற்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை” என உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்க்வெய்ன் முல்லன் தெரிவித்தார். இந்தத் திடீர் முடக்கத்தால் அமெரிக்கா முழுவதும் விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. விமானக் கண்காணிப்பு நிறுவனமான FlightAware வெளியிட்ட தகவலின்படி, நவம்பர் 13-ம் தேதி இரவு 9 மணி நிலவரப்படி 8,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின; சுமார் 7,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இதனால் பல விமான நிலையங்களில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விமானங்களில் இருந்த பயணிகள், விமான நிலையங்களில் காத்திருந்தவர்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டனர். விளையாட்டு அணிகளின் பயணத் திட்டங்களும் பாதிக்கப்பட்டதால், சில போட்டிகளை மாற்றியமைக்கவும் மாற்றுப் போக்குவரத்தை ஏற்பாடு செய்யவும் வேண்டிய நிலை ஏற்பட்டது. சுமார் 4 மணி நேரம் நீடித்த இந்தத் தடை, வெள்ளிக்கிழமை இரவு FAA-வால் நீக்கப்பட்டது.

இருப்பினும், ரத்து செய்யப்பட்ட மற்றும் தாமதமான விமானங்களின் அட்டவணையைச் சீரமைக்க மேலும் காலம் தேவைப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சீன் டஃபி, தெரிவித்துள்ளார்.கடந்த 2023-ம் ஆண்டு விமானப் போக்குவரத்துக்கான முக்கிய கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறுக்குப் பிறகு, அமெரிக்கா முழுவதும் இத்தகைய அளவில் விமானப் புறப்பாடுகள் நிறுத்தப்படுவது அரிய நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.

மைக்ரோசாப்ட் மற்றும் விமான தொலைத்தொடர்பு சேவை என இரண்டு பெரிய தொழில்நுட்பங்கள் அடுத்தடுத்து முடங்கிய சம்பவம் அமெரிக்க மக்களிடையே பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரண்டு தொழிநுட்ப கோளாறுகளும் எந்த தொடர்பு இல்லை என்றாலும், இரண்டு கோளாறுகளும் ஏற்பட மையப்புள்ளியாக அமைந்தது அந்த தொழிநுட்பங்களில் செய்யப்பட்ட அப்டேட் தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.