உலகம்

“குழந்தை பெத்துக்கோங்க.. பணம் தர்றோம்!” மக்கள் தொகை குறைவதால் பதறும் அரசுகள்.. எவ்வளவு பணம் தெரியுமா?

நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதால் உலகவில் பல நாடுகள் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை ஊக்குவித்து வருகின்றது.

Vinvizhi Leninton

உலகெங்கிலும் குழந்தைகள் பிறப்பு விகிதம் சரிந்து வரும் நிலையில், பல நாடுகள் இந்த நிலையில் இருந்து மீள குழந்தைகள் பிறப்பு விகிதங்களை ஊக்குவிக்க பல சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில், சில நாடுகள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க தம்பத்தியினருக்கு மாதாந்திர நிதியும் வழங்கி வருகிறது. அதில் சில நாடுகள் குறித்து இதில் காண்போம்.

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் மொத்த கருவுறுதல் விகிதம் 0.87 என்ற நிலைக்கு சரிவை சந்தித்து வருகிறது. அதனால் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை ஊக்குவிக்க சிங்கப்பூர் அரசாங்கம் 17 வயது வரையிலான ஒவ்வொரு சிங்கப்பூர் குழந்தைக்கும் கிட்டத்தட்ட S$70,000 நேரடி உதவியை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தினை பிரதமர் லாரன்ஸ் வோங் கடந்த ஆகஸ்ட் 23, ஞாயிற்றுக்கிழமை அன்று தேசிய தினப் பேரணியில் இந்த திட்டத்தை அறிவித்துள்ளார்.

மேலும், இந்த பணம் ஒரே தவணையாக வழங்கப்படாமல் அந்த குழந்தைக்கு 17 வயது வரை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த வகையில், குழந்தை பிறந்த அதே ஆண்டில் இரண்டு தவணைகளாக வழங்கப்படும் S$10,000 பணமும், அதைத் தொடர்ந்து ஒன்று முதல் 16 வயது வரை ஆண்டுதோறும் S$2,000 குழந்தைக் கடன் தொகையும் அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு குழந்தைக்கும் குழந்தை வளர்ச்சிக் கணக்கில் S$5,000 மானியமும், S$5,000 வரையிலான அரசாங்கத்தின் பங்களிப்புகளும், 17 வயதில் மேல்நிலைக் கல்விக் கணக்கில் S$10,000 கூடுதல் தொகையும் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் திட்ட விவரங்களின்படி, பிறந்த குழந்தைகளுக்கான ஏற்கனவே உள்ள S$5,000 மானியம் மற்றும் கல்விக்கான சுமார் S$2,500 பங்களிப்புகள் உள்ளிட்டவற்றை சேர்த்து, மொத்த தொகையாக கிட்டத்தட்ட S$70,000 வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

சீனா: சீனாவில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் அரசாங்கம் வழங்கும் நாடு தழுவிய மானியத்தின் ஒரு பகுதியாக, மூன்று வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தையின் பெற்றோருக்கும் ஆண்டுக்கு 3,600 யுவான் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், ஹோஹோட் நகரம், குறைந்தது மூன்று குழந்தைகளைக் கொண்ட தம்பதியினருக்கு, தலா ஒரு குழந்தைக்கு 100,000 யுவான் வரை வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதனையடுத்து, பெய்ஜிங்கிற்கு வடகிழக்கில் அமைந்துள்ள ஷென்யாங் நகரம், மூன்று வயதுக்குட்பட்ட மூன்றாவது குழந்தையைக் கொண்ட உள்ளூர் குடும்பங்களுக்கு மாதம் 500 யுவான் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வியட்நாம்: வியட்நாம், சுமார் 102 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட நிலையில், அந்நாட்டின் கருவுறுதல் விகிதம் என்பது கடுமையாகச் சரிவை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . சரிந்துவரும் கருவுறுதல் விகிதத்தை சரி செய்யும் வகையில், அரசாங்கம் ஆண்டுக்கு 1.8 டிரில்லியன் வியட்நாம் டாங் (68 மில்லியன் அமெரிக்க டாலர்) பணத்தை ஊக்கத்தொகையாக வழங்குவதாக சில அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால், இதில் இந்த பணத்தை பெறுவதில் சில கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் அந்நாடு விதித்துள்ளது. அவை: வியட்நாமில் சில மாகாணங்களில்/நகரங்களில் பிரசவத்தின்போது ஏற்கனவே அந்த தம்பதியினருக்கு ஒரு சொந்தக் குழந்தை இருக்க வேண்டும் மற்றும் அந்த தம்பதியினருக்கு 35க்குக் குறைவான வயதாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை விதித்துள்ளது. மேலும், நாட்டின் புதிய மக்கள்தொகைச் சட்டத்தின்படி, 35 வயது ஆவதற்குள் இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண்களுக்கு குறைந்தபட்சம் 2 மில்லியன் வியட்நாம் டாங் (சுமார் $75.86) வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசால் கூறப்பட்டுள்ளது.

தென்கொரியா: தென்கொரியா நாட்டில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல், திருமணத்தைப் பதிவு செய்யும் தம்பதிகளுக்கு அரசாங்கத்திடமிருந்து திருமண ஆதரவு நிதியாக (வாழ்நாளில் ஒருமுறை) 1 மில்லியன் கொரிய வோன் வழங்கப்படும் என்ற அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது 8 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மாதந்தோறும் 100,000 முதல் 120,000 கொரிய வோன் வரை வழங்கப்படும் குழந்தைகள் உதவித்தொகையானது, மூன்று மடங்கு வரை அதிகரிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி அடுத்த ஆண்டு முதல், அடிப்படை குழந்தைகள் உதவித்தொகையை அரசாங்கம் மாதத்திற்கு 0–1 வயதுக்கு 600,000 வோன் வரையும், 2–12 வயதுக்கு 200,000–300,000 வோன் வரையும் பணம் தரப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஒரு காலத்தில் மக்கள் தொகை அதிகரித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், "நாம் இருவர், நமக்கு இருவர்" என்ற வாக்கியம் பிரபலமானது. அதன் பின்னர், நாம் இருவர், நமக்கு ஒருவர்" என்ற வாக்கியம் பிரபலமானது, பின்னாளில் "நாம் இருவர், நமக்கு ஏன் ஒருவர்?" என்பது போலாகி தம்பதியினர் திருமணத்திற்கு பிறகு குழந்தைகள் பெற்றுக்கொள்வதை தாமதப்படுத்துதல் அல்லது பொருளாதார சூழல் காரணமாக குழந்தை வேண்டாம் என்ற நிலைக்கு தள்ளபடுகின்றனர். பின்னாளில் திருமணத்தின் மீதான அதிருப்தி, மாறி வரும் பொருளாதார சூழல் போன்ற காரணங்களாலும், பெண்கள் திருமணம் செய்துகொள்ள யோசிப்பதாலும் குழந்தைகளின் பிறப்பு விகிதம் உலகளவில் குறைய துவங்கியுள்ளது. இது நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் உலகளவில் பல நாடுகள் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை ஊக்குவித்து வருகின்றது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.