அலுவலகத்துக்குச் சென்று வேலை செய்வதற்கு பதிலாக, மலைகளுக்கு நடுவே அமர்ந்து லேப்டாப்பில் வேலை செய்தால் எப்படி இருக்கும்? காலையில் எழுந்தவுடன் பனிச்சிகரங்களை ரசிப்பது, வேலை நேரம் முடிந்ததும் அழகான இடங்களை சுற்றிப் பார்ப்பது என Workation வாழ்க்கை பலருக்கும் கனவாக இருக்கிறது.
ஆனால், அப்படி ஒரு வாழ்க்கையை ஒரு சில நாட்களுக்கு முயற்சி செய்வது வேறு, ஒரு மாதம் முழுவதும் அங்கு தங்கி வேலை செய்வது வேறு. தங்குமிடம், உணவு, போக்குவரத்து, சுற்றுலா என ஒவ்வொரு செலவும் சேரும்போது பட்ஜெட் எவ்வளவு ஆகும் என்பதை ஒரு தம்பதி தங்களது அனுபவத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.
டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்குநர்களான அஞ்சலி மற்றும் நமன் என்ற தம்பதி, வழக்கமான நகர வாழ்க்கையிலிருந்து விலகி, லடாக்கில் ஒரு மாதம் தங்கி வேலை செய்துள்ளனர். அங்கு வாழ்ந்த காலத்தில் ஏற்பட்ட செலவுகளை தனித்தனியாக கணக்கிட்டு, சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். இருவரும் சேர்ந்து ஒரு மாத காலம் தங்கி, வேலை செய்து, சுற்றுலாவும் மேற்கொண்டதற்கான மொத்த செலவு ரூ.96,600 என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
முதலில் அவர்களது கணக்கு மிகவும் குறைவாகவே இருந்துள்ளது. ஒரு மாதத்துக்கு ரூ.15,000 முதல் அதிகபட்சமாக ரூ.20,000க்குள் தங்குவதற்கு அறை கிடைத்துவிடும் என்று எதிர்பார்த்துள்ளனர். ஆனால், அங்கு சென்ற பிறகு நல்ல வசதிகளுடன் இருக்கும் தங்குமிடத்துக்கு ரூ.30,000 செலவானது. அதாவது ஒரு இரவுக்கு சராசரியாக ரூ.1,000 என்ற அளவில் தங்குமிடச் செலவு அமைந்துள்ளது.
நீண்ட நாட்கள் தங்கும்போது அறை வாடகை மட்டுமல்லாமல், அன்றாட உணவுக்கும் கணிசமான தொகை தேவைப்படுகிறது. தம்பதியின் கணக்குப்படி, ஒரு மாதத்தில் உணவுக்காக மட்டும் சுமார் ரூ.9,000 செலவாகியுள்ளது. அதோடு, மளிகைப் பொருட்கள் மற்றும் சிற்றுண்டிகளுக்காக ரூ.2,500 செலவிட்டுள்ளனர். வெளியே சென்று சாப்பிடுவதற்கும், கஃபே போன்ற இடங்களில் நேரம் செலவிடுவதற்கும் மேலும் ரூ.5,000 சென்றுள்ளது. இதனால் உணவு தொடர்பான செலவு மட்டும் சுமார் ரூ.16,500 ஆகியுள்ளது.
அடுத்ததாக உள்ளூர் போக்குவரத்து செலவு. லடாக்கில் தினசரி தேவைகளுக்கும் சுற்றிப் பார்ப்பதற்கும் ஸ்கூட்டர் வாடகைக்கு எடுத்துள்ளனர். அதற்காக ரூ.2,100 செலவாகியுள்ளது. அதே நேரத்தில், அவர்கள் தங்கியிருந்த இடத்தின் உரிமையாளர் பயன்படுத்திய ஸ்கூட்டரை சில நேரங்களில் இலவசமாக பயன்படுத்தும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. இதனால் மேலும் வாடகை செலவு ஏற்படாமல் சில பணத்தை சேமிக்க முடிந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், ஒரு மாதம் முழுவதும் ஒரே இடத்தில் இருந்து வேலை செய்துவிட்டு திரும்பவில்லை. லடாக்கின் பல பகுதிகளை சுற்றிப் பார்க்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். அங்குதான் பயணச் செலவு கணிசமாக உயர்ந்துள்ளது. லடாக்கை சுற்றிப்பார்த்ததற்காக மட்டும் சுமார் ரூ.30,000 செலவாகியுள்ளது. அதோடு, லடாக்கை அடைவதற்கான பயணத் திட்டத்திலும் செலவு ஏற்பட்டுள்ளது.
மணாலியில் இருந்து லே நோக்கி சென்ற பயணம் மற்றும் திரும்பும்போது டெல்லிக்கு விமானத்தில் சென்ற செலவும் மொத்த கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், ஒரு மாதம் தங்குமிடம், உணவு, உள்ளூர் போக்குவரத்து, சுற்றுலா மற்றும் பயணச் செலவுகள் என அனைத்தையும் சேர்த்தபோது ரூ.96,600 என்ற தொகை வந்துள்ளது. இருவருக்கும் சேர்த்து இந்த தொகை செலவானதால், ஒருவருக்கு சராசரியாக ரூ.48,300 என்ற அளவில் வருகிறது.
லடாக்கில் Workation செல்ல நினைப்பவர்களுக்கு இந்த அனுபவம் ஒரு முக்கியமான விஷயத்தையும் காட்டுகிறது. மலைப்பகுதியில் நீண்ட நாட்கள் தங்குவது குறைந்த செலவில் முடிந்துவிடும் என்ற எண்ணம் எப்போதும் சரியாக இருக்காது. குறிப்பாக தங்குமிடம், உணவு மற்றும் சுற்றுலா ஆகிய மூன்றும் சேரும்போது பட்ஜெட் வேகமாக அதிகரிக்கலாம்.
அதே நேரத்தில், பயணத்தை எப்படி திட்டமிடுகிறோம் என்பதையும் செலவு தீர்மானிக்கும். ஒரு மாதம் முழுவதும் ஒரே இடத்தில் தங்கி, வீட்டிலேயே அதிகமாக சமைத்து சாப்பிட்டு, உள்ளூர் போக்குவரத்தை பயன்படுத்தி, அடிக்கடி சுற்றுலா செல்லாமல் இருந்தால் செலவை குறைக்க முடியும். மாறாக, ஒவ்வொரு வாரமும் புதிய இடங்களுக்கு பயணம் செய்வது, வெளியே சாப்பிடுவது, வாடகை வாகனம் பயன்படுத்துவது போன்றவை பட்ஜெட்டை அதிகரிக்கும்.
லடாக்கில் தங்கியிருந்த காலத்தில் வேலைக்கும் பயணத்துக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்திய அனுபவத்தை அஞ்சலி மற்றும் நமன் பகிர்ந்துள்ளனர். வழக்கமான விடுமுறை பயணத்தைப் போல சில நாட்களில் முடிவதில்லை என்பதால், Workationக்கு முன்பாக ஒரு மாதத்துக்கான முழுமையான செலவுத் திட்டத்தை உருவாக்குவது அவசியம் என்பதையும் அவர்களின் அனுபவம் உணர்த்துகிறது. லடாக்கின் மலைகள், பனிப்பாறைகள், பாங்காங் ஏரி, கார்துங் லா போன்ற இடங்கள் பயணிகளுக்கு தனித்துவமான அனுபவத்தை வழங்குகின்றன.
ஆனால் அத்தகைய அழகான இடத்தில் நீண்ட நாட்கள் தங்கி வேலை செய்வது வெறும் இயற்கையை ரசிப்பது மட்டுமல்ல; அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து செலவுகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய ஒரு திட்டமிட்ட வாழ்க்கை முறையாகும். ஒரு மாத Workationக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் செலவானாலும், அதற்குள் தங்குவது மட்டுமல்லாமல் வேலை, சுற்றுலா மற்றும் பயணம் என முழுமையான அனுபவமும் அடங்கியிருந்தது. அதனால்தான், “இவ்வளவு செலவு செய்தது மதிப்புள்ளதா?” என்ற கேள்வியையும் அந்த தம்பதி தங்களது பதிவில் எழுப்பியுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்