பெரும் அமைச்சரவை மாற்றத்துடன் கிம் ஜாங் உன் 99.93% வாக்குகளைப் பெற்றார். கிம் ஜாங் உன்-னின் கட்சி, வட கொரியாவின் 2026 தேர்தலில் ஏறக்குறைய முழுமையான ஆதரவுடன், 99.93% வாக்குகளையும் அனைத்து இடங்களையும் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இருப்பினும், அரிதான 0.07% எதிர்ப்பு எழுந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
15வது உச்ச மக்கள் பேரவையின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக மார்ச் 15 அன்று நடைபெற்ற 2026 நாடாளுமன்றத் தேர்தலில், கிம் ஜாங் உன்-னின் கொரிய தொழிலாளர் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் 99.93% வாக்குகளை பெற்றதோடு, அனைத்து இடங்களையும் கைப்பற்றியதன் மூலம், மற்றொரு மகத்தான தேர்தல் வெற்றியைப் பெற்றுள்ளார் கிம் ஜாங் உன். வட கொரியா கடுமையான சட்டங்களை கொண்டுள்ள நாடு என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதேபோல், அந்நாட்டு தேர்தலில், அதிபர் கிம் ஜாங் உன் மட்டுமே நிற்பார் என்றும், அவருக்கு மட்டுமே மக்கள் வாக்களிக்க தேர்தல் நடத்தப்படுகிறது என்றும், பல இடங்களில் குறிப்பிடப்பட்டு பார்த்திருப்போம். தற்போது, அந்நாட்டில் தேர்தல் நடத்தப்பட்டு 99.93% பேர் வேட்பாளர்களை ஆதரித்த நிலையில், 0.07% பேர் எதிராக வாக்களித்துள்ளனர். இது வட கொரியத் தேர்தல்களில் வழக்கத்திற்கு மாறாகக் கவனிக்கப்பட்ட ஒரு எண்ணிக்கையாகும்.
தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, அரசுத் தலைமைத் தேர்தல் குறித்து முடிவெடுப்பதற்கும், அரசியலமைப்பில் ஒரு பெரிய திருத்தம் செய்வது பற்றி விவாதிப்பதற்கும், 'பியோங்யாங்கில்' புதிய சட்டமன்றத்தின் தொடக்க அமர்வை நடத்தத் திட்டமிட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளன. மேலும், உச்ச மக்கள் பேரவை கூடும்போது, தலைவர் கிம் ஜாங் உன் 'ஜனாதிபதியாக நியமிக்கப்படுவாரா?' என்பதில் கவனம் செலுத்தப்படும். இந்த உயரிய அரசுப் பதவி, நீண்ட காலமாக கிம்மின் மறைந்த தாத்தாவும் வட கொரியாவின் நிறுவனருமான கிம் இல் சுங்-கிற்காக ஒதுக்கப்பட்டிருந்தது செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. மேலும், இந்த அமர்வில் கிம் உச்ச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும், அரச விவகார ஆணையத்தின் தலைவராக அவரது பங்கு உறுதி செய்யப்படும் என்றும் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, வட கொரியா தனது ஸ்தாபக ஆவணத்தில், இரு கொரியாக்களையும் ஒன்றுக்கொன்று விரோதமான நாடுகளாக வரையறுத்து, தெற்கிற்கு எதிரான தனது விரோத நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமான சட்டமாக்குமா என்பதே இந்த அமர்வின் முதன்மை கவனம் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தற்போது, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளில், கிம்மின் சகோதரியான கிம் யோ-ஜாங் மற்றும் வெளியுறவு அமைச்சர் சோ சோன்-ஹுய் ஆகியோரும் அடங்குவர். பொதுவாகவே, வட கொரிய சட்டமன்றம், பெரும்பாலும் ஒரு ஒப்புதல் அளிக்கும் நாடாளுமன்றமாக இருப்பதாக வர்ணிக்கப்பட்டாலும், ஆளும் கட்சித் தலைமையால் எடுக்கப்படும் முடிவுகளைச் சட்டப்பூர்வமாக்குவதற்கான இன்றியமையாத ஓர் அமைப்பாக இது விளங்குகிறது.
மேலும், உறுதிப்படுத்தப்பட்ட 687 பிரதிநிதிகளில், கிம்மின் முக்கிய உதவியாளரான ஜோ யோங்-வோனும் ஒருவர் என்றும், இவர் சட்டமன்றத்தின் நிலைக்குழுவின் தலைவராக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறார். கட்சியின் உயர்மட்ட மத்தியக் குழுவில் துறை இயக்குநராக கிம் யோ-ஜாங் பதவி உயர்வு பெற்றதால், அவர் இந்த வாக்கெடுப்பின் மூலம் அதிகப் பயனடைந்தவர்களில் ஒருவராகத் திகழ்வார் என்றும், கிம் யோ-ஜாங் (38), கிம்மின் உடனடி வாரிசாக உருவாக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றனர். மேலும், கிம்மின் மகள் கிம் ஜூ-ஏ (13) பொறுப்பேற்கத் தயாராகும் வரை, அவர் வட கொரிய நாட்டை தனது இரும்புக்கரம் கொண்டு ஆட்சி செய்வார் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும், வட கொரியாவில் இதுபோன்ற மகத்தான வெற்றிகள் வழக்கமானவை என்றாலும், அந்த 0.07% எதிர்ப்பு வாக்குகள் என்பது இணையத்தில் உடனடியாகக் கவனத்தை ஈர்த்ததோடு, வட கொரியத் தேர்தல்கள் எந்த தீர்ப்புகளும் இன்றி நடத்தப்படுகிறது என்று கூறிவந்த நிலையில், இந்த 2026 தேர்தல் எர்ப்புத் தெரிவிப்பதற்கான உரிமை இருப்பதை இது காட்டுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.