ட்ரம்பிற்கு பின்னடைவு..! "இதுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை" விலகும் NATO நாடுகள்..

"போருக்கு முன்பு அமெரிக்காவோ இஸ்ரேலோ எங்களிடம் கலந்தாலோசிக்கவில்லை" என்று கூறியிருந்தார்..
trump
Published on
Updated on
3 min read

எண்ணெய் விலைகள் உயர்ந்து வரும் நிலையில், முக்கிய நீர்வழியைப் பாதுகாக்க நேட்டோ நட்பு நாடுகள் உதவ வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதை அடுத்து ஐரோப்பியத் தலைவர்கள் இதிலிருந்து பின்வாங்கியுள்ளது, இதனால் அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு இது பின்னடைவு ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் தொடங்கப்பட்ட அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதலுக்குப் பதிலளிக்கும் விதமாக, ஈரான் ஹார்மோஸ் வர்த்தகப் பாதையை மூடியது . இதனால் உலகளாவிய எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்தன. இதனால் பல நாடுகளில் மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். மேலும், இந்த போர் தொடங்குவதற்கு முன்பே பொருளாதார வல்லுநர்கள் இதுகுறித்து எச்சரித்திருந்தனர். மேலும், இந்த முறை, அமெரிக்க நட்பு நாடுகள் ஹார்மோஸ் நீர்சந்தி வழியாக எண்ணெய் கொண்டு செல்ல உதவுவதற்காக போர்க்கப்பல்களை அனுப்புமாறு டிரம்ப் விடுத்த கோரிக்கையை நிராகரித்துள்ளன. "இந்தப் போருக்கும் நேட்டோவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. இது நேட்டோவின் போர் அல்ல" என்று ஜெர்மன் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸின் செய்தியாளர்களை சந்தித்து கூறினார்.

மார்ச் 3 அன்று ஓவல் அலுவலகத்தில் டிரம்பிற்கு அருகில் அமர்ந்திருந்த மெர்ஸ், "தெஹ்ரானில் உள்ள இந்த பயங்கரமான ஆட்சியை" அகற்றுவதில் அமெரிக்காவும் ஜெர்மனியும் "ஒரே பக்கத்தில்" இருப்பதாகக் கூறியிருந்தார். தற்போது இவரின் இந்த அறிவிப்பு முந்தய பேச்சிற்கு நேர்மாறாக உள்ளது. மேலும், "இது ஐரோப்பாவின் போர் அல்ல, ஆனால் ஐரோப்பாவின் நலன்கள் நேரடியாக ஆபத்தில் உள்ளன," என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவரான காஜா கல்லாஸ் தெரிவித்திருக்கிறார். இதுமட்டுமின்றி, இத்தாலி, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளும், ஹார்மோஸ் நீர்சந்தியை மீண்டும் திறக்கும் முயற்சிகளில் தங்கள் நாடுகள் பங்கேற்காது என்று கூறியுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில், "ஹார்மோஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் பெறும் உலக நாடுகள், அந்தப் பாதையைப் பாதுகாக்க வேண்டும்" என்று டிரம்ப் அழைப்பு விடுத்திருந்தார். அதே நாளில் 'ஃபைனான்சியல் டைம்ஸ்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், அவர் மேலும் ஒரு படி சென்று, "நேட்டோ உறுப்பு நாடுகள் அந்த ஜலசந்தியை விடுவிக்க உதவாவிட்டால், நேட்டோவிற்கு மிக மோசமான எதிர்காலம்" இருக்கும் என்று எச்சரிக்கையும் விடுத்திருந்தார்.

NATO ஒரு பார்வை:

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு 1949ல் 12 உறுப்பு நாடுகளுடன் இணைத்து உருவாக்கப்பட்ட வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு, நேட்டோ என்று அழைக்கப்படுகிறது. தற்போது இது, 32 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஒரு அரசுகளுக்கிடையேயான கூட்டணியாகும். அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரண்டு நாடுகளைத் தவிர, மற்ற அனைத்து உறுப்பு நாடுகளும் ஐரோப்பிய நாடுகளாகும். பெரும்பாலான பிற கூட்டணிகளைப் போலல்லாமல், நேட்டோ அமைப்பானது, ஒரு வெளித்தரப்பினரால் தாக்குதல் ஏற்படும் பட்சத்தில், அதன் சுதந்திர உறுப்பு நாடுகள் தங்களுக்குள் பரஸ்பர பாதுகாப்பை உறுதி செய்கிறது. தற்போது இந்த நேட்டோ அமைப்பானது ட்ரம்பின் அறைகூவலை நிராகரிக்க காரணமாக கூறப்படுவது, சாசனத்தின் 1ம் பிரிவின் கீழ், உறுப்பு நாடுகள் தாங்கள் சம்பந்தப்பட்ட எந்தவொரு சர்வதேசப் பிணக்கையும், சர்வதேச அமைதி, பாதுகாப்பு மற்றும் நீதிக்கு ஆபத்தை விளைவிக்காமல், அமைதியான வழிகளில் தீர்ப்பதை உறுதிசெய்ய வேண்டும். மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் அம்சங்களுக்கு முரணான வகையில், படைபலத்தைப் பயன்படுத்துவதிலிருந்தோ அல்லது அச்சுறுத்துவதிலிருந்தோ உறுப்பு நாடுகள் விலகி இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய போர் சூழல் இந்த நிபந்தனைகளில் இருந்து விலகி இருப்பதாக சிலர் கூறுகின்றனர்.

தற்போதைய நிலை:

ஜெர்மனியின் இந்த நிலைப்பாட்டை மற்ற நாடுகளும் எதிரொலித்துள்ளது. ஹார்மஸ் நீர்சந்தியில் எந்தவொரு நிலையிலும் இணைவது குறித்து லண்டனிலிருந்து பேசிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், “நான் தெளிவாகக் கூறுகிறேன், அது ஒரு நேட்டோவின் பணியாக இருக்காது, அவ்வாறு இருக்க வேண்டும் என்று ஒருபோதும் கருதப்பட்டதும் இல்லை” என்று கூறினார். மேலும், ஸ்பெயினின் இடதுசாரி அரசாங்கம் போன்ற சில நாடுகள், ஹர்மோஸ் குறித்தான கோரிக்கையை அடியோடு நிராகரித்தன. இதுமட்டுமின்றி, இந்த மோதலுக்கும் நேட்டோவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், இதில் தலையிட ஜெர்மனிக்கு எந்தத் திட்டமும் இல்லை என்றும் ஜெர்மன் அரசாங்க செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார். "போருக்கு முன்பு அமெரிக்காவோ இஸ்ரேலோ எங்களிடம் கலந்தாலோசிக்கவில்லை என்று கூறியிருந்தார். ஜெர்மனி மட்டுமின்றி இத்தாலியும் இந்த அழைப்பினை மறுத்துள்ளது, "இத்தாலி யாருடனும் போரில் ஈடுபடவில்லை, மேலும் போர் மண்டலத்திற்குள் இராணுவக் கப்பல்களை அனுப்புவது போரில் நுழைவதற்குச் சமம்" என்று மிலனில் செய்தியாளர்களிடம் சல்வினி கூறினார். இது மட்டுமின்றி ட்ரம்பின் கோரிக்கைக்கு உதவுவதற்காகக் கப்பல்களை அனுப்பும் திட்டம் தங்களிடம் இல்லை என ஜப்பானும், ஆஸ்திரேலியாவும் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவிற்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு குரல்கள்:

தென் கொரியாவின் சியோலில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு வெளியே, ஹர்மோஸ் ஜலசந்திக்கு தென் கொரியா படைகளை அனுப்ப வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கைக்கு எதிராக பேரணி நடைபெற்றது. மேலும், மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே வழுக்கு பதற்றம் குறித்து விவாதிப்பதற்காக அமெரிக்க மற்றும் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர்கள் 15ஆம் தேதி இரவு சுமார் 30 நிமிடங்கள் தொலைபேசியில் பேசிய நிலையில், தென் கொரிய பாதுகாப்பு அமைச்சகம், “தென் கொரிய மற்றும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்களுக்கு இடையிலான அழைப்பு குறித்து இன்றுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை,” என்று கூறியிருக்கிறது.

தென் கொரிய ஜனநாயகக் கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் லீ உன் ஜூ, YTN வானொலிக்கு அளித்த பேட்டியில், “இது அரசாங்கம் மட்டும் தனியாக முடிவு செய்யக்கூடிய ஒரு சூழ்நிலை அல்ல. மேலும், படைகளை அனுப்புமாறு அதிபர் டிரம்ப் கேட்டுக்கொண்ட நிலையில், மற்ற ஐந்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன்,” என்று கூறியிருக்கிறார். கொரியக் குடியரசு-அமெரிக்க கூட்டுப் படைகளின் கட்டளையகத்தின் முன்னாள் துணைத் தளபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான கிம் பியுங்-ஜூ, MBC வானொலியில் பேசுகையில், “நாம் அவசரமாக இணைந்தால், அது மிகவும் ஆபத்தானதாக இருக்கும். எனவே, கால அவகாசம் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது,” என்றார்.

தற்போதைய இந்த போர்சூழலில் தனக்கு ஆதரவாக நேட்டோ அமைப்புகள் இருக்கும் என்று ட்ரம்ப் எதிர்பார்த்த நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக மற்ற நாடுகள் போரில் இருந்து பின்வாங்குவது என்பது, அமெரிக்கா அதிபர் ட்ரம்பிற்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் போர் முடிவிற்கு வருமா? சூழல் இயல்பு நிலை திரும்புமா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com