உலகம்

2025-ல் உலகை உலுக்கிய இயற்கைப் பேரிடர்கள்! 10 லட்சம் கோடி ரூபாய் காலி! வெளியானது அதிர்ச்சி ரிப்போர்ட்!

நவம்பர் மாதம் தாய்லாந்து, இந்தோனேசியா, இலங்கை, வியட்நாம் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் வீசிய புயல்கள்...

மாலை முரசு செய்தி குழு

2025-ம் ஆண்டு முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த ஆண்டு உலகம் சந்தித்த மிக மோசமான இயற்கைப் பேரிடர்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகள் குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரிட்டனைச் சேர்ந்த 'கிறிஸ்டியன் எய்ட்' (Christian Aid) என்ற தொண்டு நிறுவனம், "Counting the Cost 2025: A year of climate breakdown" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டு மட்டும் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட முதல் 10 பெரிய பேரிடர்களால் உலகிற்கு 120 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.10 லட்சம் கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த இழப்புகள் அனைத்தும் காப்பீடு செய்யப்பட்ட சொத்துக்களின் அடிப்படையில் கணக்கிடப்பட்டவை என்பதால், உண்மையான இழப்பு இதைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்கும் என்று அந்த அறிக்கை எச்சரிக்கிறது.

இந்த ஆண்டின் ஆகப் பெரிய பொருளாதார இழப்பைச் சந்தித்த நாடாக அமெரிக்கா உள்ளது. 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ (Los Angeles Wildfires) உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்தக் காட்டுத்தீயால் மட்டும் சுமார் 60 பில்லியன் டாலர் (சுமார் ரூ.5 லட்சம் கோடி) இழப்பு ஏற்பட்டதாகவும், 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. பணக்கார நாடான அமெரிக்காவில் சொத்துக்களின் மதிப்பு அதிகம் என்பதால் பொருளாதார இழப்பு மலைக்க வைக்கும் அளவில் உள்ளது.

இருப்பினும், பேரிடர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகளின் அடிப்படையில் ஆசியக் கண்டமே இந்த ஆண்டு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்டியன் எய்ட் பட்டியலிட்டுள்ள முதல் 6 மோசமான பேரிடர்களில் 4 ஆசியாவில் நிகழ்ந்துள்ளன என்பது வேதனையான உண்மை. குறிப்பாக, தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் இயற்கையின் சீற்றத்திற்குத் தப்பவில்லை. நவம்பர் மாதம் தாய்லாந்து, இந்தோனேசியா, இலங்கை, வியட்நாம் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் வீசிய புயல்கள் மற்றும் வெள்ளத்தால் சுமார் 25 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 1,750-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்த பருவமழை இயல்பை விட மிக அதிகமாக இருந்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு மற்றும் மேகவெடிப்புச் சம்பவங்கள் பேரழிவை ஏற்படுத்தின. இந்த அறிக்கையின்படி, இந்தியா மற்றும் பாகிஸ்தானில் மட்டும் பருவமழைக்காலப் பேரிடர்களால் 1,860 பேர் உயிரிழந்துள்ளனர். விவசாயம் மற்றும் உள்கட்டமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் சுமார் 3 பில்லியன் டாலர் முதல் 5.6 பில்லியன் டாலர் வரை பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

சீனாவிலும் நிலைமை மோசமாகவே இருந்தது. ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் சீனா 11.7 பில்லியன் டாலர் இழப்பைச் சந்தித்துள்ளது. அதேபோல், பிலிப்பைன்ஸ் நாட்டைத் தாக்கிய தொடர் சூறாவளிகள் நூற்றுக்கணக்கான உயிர்களைப் பறித்ததுடன், 5 பில்லியன் டாலர் இழப்பையையும் ஏற்படுத்தியுள்ளன. ஆசியாவைத் தாண்டி, பிரேசிலில் ஜனவரி முதல் ஜூன் வரை நிலவிய கடுமையான வறட்சி 5 பில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்தியது. கரீபியன் தீவுகளான ஜமைக்கா, கியூபா மற்றும் பஹாமாஸைத் தாக்கிய 'மெலிசா' புயல் (Hurricane Melissa) 8 பில்லியன் டாலர் இழப்பை உண்டாக்கியது.

இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள மிக முக்கியமான விஷயம், 'இன்சூரன்ஸ்' எனப்படும் காப்பீடு பற்றியது ஆகும். வளர்ந்த நாடுகளில் மக்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் சொத்துக்களுக்குக் காப்பீடு செய்துள்ளதால், பேரிடர் காலங்களில் அவர்களுக்குப் இழப்பீடு கிடைக்கிறது. ஆனால், இந்தியா போன்ற வளரும் மற்றும் ஏழை நாடுகளில் பெரும்பாலான சொத்துக்களுக்குக் காப்பீடு இல்லை. இதனால், ஏழை நாடுகள் சந்திக்கும் உண்மையான பொருளாதார இழப்பு கணக்கில் வருவதில்லை. பணக்கார நாடுகள் பணத்தை இழக்கின்றன, ஆனால் ஏழை நாடுகள் தங்கள் மக்களின் உயிர்களையும், வாழ்வாதாரத்தையும் இழக்கின்றன என்று அந்த அறிக்கை வேதனையுடன் சுட்டிக்காட்டுகிறது.

காலநிலை மாற்றத்திற்குக் காரணமாக இருக்கும் புதைபடிவ எரிபொருட்களின் (Fossil Fuels) பயன்பாட்டைக்குறைக்க உலக நாடுகள் தவறியதே இந்தப் பேரழிவுகளுக்கு முக்கியக் காரணம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பிரேசிலில் நடைபெற்ற COP30 மாநாட்டில் கூட, எரிபொருள் பயன்பாட்டை நிறுத்துவது குறித்த கட்டாய முடிவுகள் எடுக்கப்படாமல், அது ஒரு விருப்பத் தேர்வாகவே விடப்பட்டது பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக அறிக்கை கூறுகிறது.

பூமியின் வெப்பநிலை உயர்ந்து கொண்டே செல்வதால், வரும் ஆண்டுகளில் இதைவிட மோசமான பேரிடர்களைச் சந்திக்க நேரிடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். 2025-ம் ஆண்டு நமக்குக் கற்றுக்கொடுத்த பாடம் என்னவென்றால், காலநிலை மாற்றம் என்பது எதிர்காலப் பிரச்சனை அல்ல, அது நம் வீட்டு வாசலில் வந்து நிற்கும் நிகழ்காலப் பேராபத்து என்பதே. உலக நாடுகள் விழித்துக்கொள்ளுமா அல்லது அடுத்த ஆண்டும் இழப்புகளை மட்டுமே கணக்கிட்டுக் கொண்டிருக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.