சிறப்பு செய்திகள்

“தோழர் நல்லகண்ணுவுக்கு ஏற்பட்ட மறக்க முடியாத தோல்வி” - களத்தில் மக்கள் போராளிக்கு கிடைத்த மரியாதை… ஒரு பிளாஷ்பேக்!

தலைவர் என்று இப்போதும் அந்த சம்பவத்தை குறிபிட்டு அரசியல் தலைவர்கள் அவரை பாராட்டுவார்கள்...

மாலை முரசு செய்தி குழு

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஐயா நல்லகண்ணு அவர்களின் மறைவு ஒரு நேர்மையான அரசியல் தலைவரின் இழப்பு மட்டுமல்ல, சமூகப்பற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு பொதுவாழ்க்கையின் முடிவாகவும் பார்க்கப்படுகிறது. தனது 12-வது வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார், 16வது வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர முயன்றார். ஆனால், கட்சி அப்போது அவரை சேர்க்கவில்லை. 18 வயது நிரம்பிய பின்னரே உறுப்பினராக சேர்த்துக்கொண்டது. 1943-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தர். பின்னர் 1992 கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராகப் பொறுபேற்று 2005 வரை 13 ஆண்டுகள் பணியாற்றினார். தனது வாழ்நாளில் ஏறத்தாழ 80 ஆண்டுகளுக்கும் மேல் மக்களுக்கான போராட்டங்களில் தன்னை இணைத்துக்கொண்டு களத்தில் நின்றிருக்கிறார். பல போராட்டங்களில் கைதாகி சிறையும் சென்றுள்ளார்.

போராட்ட களத்தையும், சிறை வாழ்வையும் அதிகம் பார்த்த ஐயா நல்லகண்ணு தேர்தல் களத்திலும் போட்டியிட்டுள்ளார். அவரது அரசியல் வாழ்க்கையில் முழுவதும் மக்களுக்காக போராடியிருந்தாலும், தேர்தல் அரசியலில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. தமிழக சட்டமன்றத் தேர்தலில் 1967 மற்றும் 1977ஆம் ஆண்டுகளில் அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். இரண்டு தேர்தல்களிலும் தோல்வியே கண்டார். பின்னர் 1999 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பதற்றமான கோவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அப்போது அதிமுக - சிபிஐ கூட்டணியில் நல்லகண்ணு வேட்பாளராக களம் கண்டது குறிப்பிடத்தக்கது. அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக-வின் சி.பி. ராதாகிருஷ்ணன் 49.21% வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இருப்பினும் தோல்வி அவரை துவண்டுவிட செய்யவில்லை.

தோல்வியால் அரசியல் பணியில் இருந்து விலகாமல் சமூகப் போராட்டங்களில் ஈடுபட்டு மக்களுடனும் அவர்களின் போராட்டகளுடனும் தொடர்ந்து பயணித்தார். அவரது அரசியல் பயணம், பதவி மற்றும் அதிகாரத்தை விட கொள்கை மற்றும் சமூக சேவைக்கு முக்கியத்துவம் அளித்ததாக இருந்தது. அவரின் எளிமையான வாழ்க்கை, சமூக போராட்டக்கள், பொதுமக்கள் பிரச்சினைகளில் சமரசமில்லா பங்கேற்பு ஆகியவற்றால் அவர் தனித்துவமான அரசியல் மனிதராக அறியப்பட்டார். எந்தவொரு அரசியல் தலைவர்களால் சிறிதும் வெறுக்க படாத ஒரு தலைவர் நல்லகண்ணு.

தான் ஏற்றுக்கொண்ட கொள்கையையிலும் , தேர்தல் களத்திலும் அவர் சமசரமில்லாமல் நேர்மையுடனே இருந்திருக்கிறார். 1999 நாடாளுமன்ற தேர்தலின் போது, நடந்த ஒரு நிகழ்வு, அதிமுக - சிபிஐ கூட்டணியில் முஸ்லீம் கட்சி இடம்பெறட்டு இருத்தது. பொதுவாக வேட்பாளரின் பிரச்சார வாகனத்தில் கூட்டணி கட்சிகளின் கொடிகள் கட்டப்பட்டிருக்கும். அப்படி ஒருமுறை பிரச்சாரத்திற்கு செல்லும்போது, பிரச்சார வாகனத்தில் முஸ்லீம் லீக் கட்சியின் கொடி இடம்பெறவில்லை. இதை கவனித்த நல்லகண்ணு "ஏன் முஸ்லீம் லீக் கட்சியின் கொடி பிரச்சாரத்தில் இடம்பெறவில்லை" என்றார். அதற்கு முஸ்லீம் லீக் நிர்வாகி ஒருவர் "இன்றைக்கு இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிக்கு பிரச்சாரம் செல்கிறோம். எங்கள் கொடி இருந்தால் அது பிடிக்காமல், சில மக்கள் வாக்களிக்காமல் போகலாம். அதனால் நாங்கள் தான் அகற்றினோம்" என்றார்.

அதற்கு நல்லகண்ணு "உங்களின் கொடியில்லாமல் சென்றால் தான் வெற்றி பெற முடியும் என்றால் எனக்கு அந்த வெற்றியே தேவையில்லை. கொடியை கட்டிவிட்டு, வண்டியில் ஏறுங்கள்" என்று முஸ்லீம் லீக் நிர்வாகிகளை அழைத்து சென்றார். வாக்கு அரசியலுக்காக சிறுபான்மை மக்கள் நலனை விட்டு கொடுக்காத தலைவர் என்று இப்போதும் அந்த சம்பவத்தை குறிபிட்டு அரசியல் தலைவர்கள் அவரை பாராட்டுவார்கள்.

அவரை எதிர்ந்து வெற்றி பெற்ற சி.பி ராதாகிருஷ்ணன் தற்போது நாட்டின் துணை ஜனாதிபதி இருக்கிறார். அந்த தேர்தலில் சுமார் 54,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராதாகிருஷ்ணன், அப்போது ஐயா நல்லகண்ணுவை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றார். தோல்வி அடைந்த வேட்பாளரிடம் ஆசிபெற்ற முதல் வெற்றி வேட்பாளரக இருந்தார். இந்நிகழ்வு மூத்த தலைவர் நல்லகண்ணு-வின் மீது அரசியல் தலைவர்கள் வைத்திருக்கும் உயர்வான மரியாதையை காட்டுகிறது. அரசியலில் நேர்மையான நல்லகண்ணு ஐயாவை தோற்கடித்த போது மிகவும் வருத்தப்பட்டேன் என்றும் அந்த வெற்றி எனக்கு வருத்தமாக இருந்தது எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.