உலகின் மிக உயர்ந்த சிகரமான இமயமலை, வெறும் பனிக்கட்டிகளால் ஆன மலை மட்டுமல்ல; அது பல விடைதெரியாத மர்மங்களின் இருப்பிடம். அதில் மிக முக்கியமானது 'ஏதி' என்று அழைக்கப்படும் ராட்சத பனிமனிதன். நேபாளம் மற்றும் திபெத் நாட்டு மக்களின் நாட்டுப்புறக் கதைகளில் பல நூற்றாண்டுகளாக ஏதி பற்றிய குறிப்புகள் உள்ளன. மனிதனை விட உயரமாக, உடல் முழுவதும் அடர்த்தியான முடிகளுடன், கரடியையும் குரங்கையும் கலந்தாற்போல இருக்கும் ஒரு விசித்திரமான உருவம் தான் ஏதி என்று சொல்லப்படுகிறது. இமயமலையின் மிக ஆழமான, மனிதர்கள் நடமாட முடியாத பகுதிகளில் இது வசிப்பதாக நம்பப்படுகிறது. மலை ஏறுபவர்கள் பலர் "நாங்கள் ஏதியைப் பார்த்தோம்" என்றும், அதன் கால்தடங்களைக் கண்டெடுத்தோம் என்றும் கூறி வருவது இன்றும் உலக ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. இந்த மர்மமான பனிமனிதனின் பின்னணியைப் பற்றி இப்போ விரிவா பார்ப்போம்.
ஏதி பற்றிய தேடல் உலக அளவில் பிரபலம் அடைந்தது 1921-ம் ஆண்டுக்குப் பிறகுதான். கர்னல் ஹோவர்ட் மெபரி (Howard-Bury) தலைமையிலான ஒரு குழு இமயமலையில் பயணம் செய்தபோது, சுமார் 21,000 அடி உயரத்தில் மனிதப் பாதத்தை விட இரண்டு மடங்கு பெரிய கால்தடங்களைக் கண்டனர். உள்ளூர் வழிகாட்டிகள் அது 'மேட்டோ-காங்மி' (Metoh-Kangmi) அல்லது பனிமனிதனின் கால்தடம் என்று கூறினர். அதன் பிறகு, 1951-ம் ஆண்டு எரிக் ஷிப்டன் (Eric Shipton) என்ற மலையேற்ற வீரர் எடுத்த புகைப்படம் உலகையே அதிர வைத்தது. ஒரு பனிச்சரிவில் மிகத் துல்லியமாகப் பதிந்திருந்த அந்த ராட்சத கால்தடத்தின் புகைப்படம், ஏதி ஒரு கற்பனை அல்ல, அது நிஜமாகவே இருக்கும் ஒரு உயிரினம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.
திபெத் மற்றும் நேபாளத்தில் உள்ள சில மடாலயங்களில் (Monasteries) ஏதியினுடையது என்று சொல்லப்படும் தலைமுடி, தோல் மற்றும் மண்டை ஓடுகள் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பல வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் இந்தத் தடயங்களை ஆய்வு செய்துள்ளனர். ஒருமுறை புகழ்பெற்ற மலையேற்ற வீரர் எட்மண்ட் ஹிலாரி, ஏதியின் மண்டை ஓடு என்று சொல்லப்பட்ட ஒன்றை ஆய்வுக்காக லண்டன் கொண்டு சென்றார். ஆனால், நவீன அறிவியல் சோதனைகளில் அது 'செரோ' (Serow) எனப்படும் ஒரு வகை இமயமலை ஆட்டின் தோலால் செய்யப்பட்டது என்று கண்டறியப்பட்டது. இருப்பினும், 2019-ம் ஆண்டு இந்திய ராணுவத்தின் மலையேற்றக் குழு, மாகாலு மலைப்பகுதியில் 32 இன்ச் நீளமும் 15 இன்ச் அகலமும் கொண்ட ராட்சத கால்தடங்களைப் பார்த்ததாகப் புகைப்படங்களை வெளியிட்டது மீண்டும் விவாதங்களைக் கிளப்பியது.
அறிவியல் ரீதியாக ஏதி யார்? இதற்கு ஆராய்ச்சியாளர்கள் சில சுவாரஸ்யமான விளக்கங்களைக் கொடுக்கிறார்கள். டி.என்.ஏ (DNA) சோதனைகளின்படி, ஏதியின் முடி என்று சொல்லப்பட்ட பல மாதிரிகள் இமயமலையில் வாழும் பழுப்புக் கரடி (Brown Bear) அல்லது ஆசியக் கருப்புக் கரடியினுடையது என்று தெரியவந்துள்ளது. குறிப்பாக, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த துருவக் கரடியின் ஒரு அரிய இனம் இமயமலையில் இன்னும் எஞ்சியிருக்கலாம் என்றும், மக்கள் அதைப் பார்த்துவிட்டு ஏதி என்று தவறாகக் கருதுகிறார்கள் என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஆனால், கரடிகள் நடக்காத செங்குத்தான பனிச்சரிவுகளில் இந்த உருவங்கள் தென்படுவது இந்த விளக்கத்திற்குச் சவாலாகவே இருக்கிறது.
மற்றொரு சுவாரஸ்யமான கோட்பாடு என்னவென்றால், ஏதி என்பது மனித பரிணாம வளர்ச்சியில் விடுபட்ட ஒரு இனம் (Gigantopithecus) என்பதாகும். சுமார் மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராட்சத குரங்கு போன்ற மனிதர்கள் இன்னும் இமயமலையின் குகைகளில் வாழ்ந்து வரலாம் என்று சிலர் நம்புகிறார்கள். பனியில் ஒளியின் பிரதிபலிப்பால் ஒரு சிறிய பொருள் கூடப் பெரியதாகத் தெரிய வாய்ப்புண்டு என்றும், இது ஒருவிதமான மாயத்தோற்றம் (Mirage) என்றும் சில அறிவியலாளர்கள் வாதிடுகின்றனர். ஆனாலும், உள்ளூர் மக்கள் இன்றும் ஏதியை ஒரு கடவுளாகவோ அல்லது தங்களைப் பாதுகாக்கும் ஒரு சக்தியாகவோ கருதி வழிபட்டு வருகிறார்கள்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.