பொதுமக்களிடம் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மார்ச் 16ல் தேசிய தடுப்பூசி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. தொற்று நோயை தடுக்கவும், பொதுச் சுகாதாரத்தை பாதுகாக்கவும் தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
தடுப்பூசி துறையில் குறிப்பாக அதன் பரந்த மக்கள் தொகை, அடர்த்தி மற்றும் தீவிரப்படுத்தப்பட்ட தடுப்பூசி இயக்கங்களின் அதிகரிப்பு ஆகியவற்றில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது.
தற்போது, இந்தியா உலகின் மிக விரிவான நோய்த்தடுப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது, மேலும் சுகாதாரப் பணியாளர்கள் கடினமான சூழ்நிலைகளிலும், கரடுமுரடான நிலப்பரப்புகளிலும் கூட தடுப்பூசி போடுவதற்கான முயற்சிகள் மூலம் நாட்டிற்கு பெரும் பங்களிப்பை வழங்கி வருகிறார்கள்.
இந்தியாவில் முதல் முறையாக 1995 ஆம் ஆண்டு, வாய்வழி போலியோ தடுப்பூசி மார்ச் 16 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டிலிருந்து போலியோவை ஒழிக்க உதவியது. உலக சுகாதார அமைப்பு (WHO) மார்ச் 27, 2014 அன்று இந்தியாவை போலியோ இல்லாத நாடாக அறிவித்தது.
பிறந்த குழந்தைக்கு, குறிப்பாக பிறந்து 24 மணி நேரத்திற்குள் அவசியமான 3 தடுப்பூசிகள் போட வேண்டும். கல்லீரல் பாதிப்பைத் தடுக்க- Hepatitis B தடுப்பூசி, BCG - காசநோய் தடுப்பூசி, மற்றும் போலியோ வைரஸிலிருந்து பாதுகாக்க வாய்வழி OPV - போலியோ தடுப்பூசிகள் மிக அவசியமாகும். இந்த தடுப்பூசிகள் ஆபத்தான நோய்களில் இருந்து குழந்தையை பாதுகாக்கின்றன. மேலும் முக்கியமான பிற புதிய தடுப்பூசிகள் பற்றியும் தெரிந்து கொள்வோம்.
ரோட்டா வைரஸ் தடுப்பூசி- RVV, பொதுவாக 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை இந்த வைரஸ் அதிகம் தாக்குகிறது. உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான குழந்தைகள் தங்கள் ஐந்தாவது வயதிற்குள் ஒரு முறையாவது இந்த வைரஸால் பாதிக்கப் படுகிறார்கள். குழந்தைகளின்
வயிற்றுப்போக்கினால் ஏற்படும் இறப்பு மற்றும் நோயின் தீவிரத்தை குறைக்க மார்ச் 2016 இல் இந்தியாவில், 11 மாநிலங்களில் RVV தொடங்கப்பட்டது.
செயலிழக்கச் செய்யப்பட்ட போலியோவின் தடுப்பூசி (IPV) உலகளாவிய போலியோ ஒழிப்பு முயற்சியின் ஒரு பகுதியாக IPV இணைக்கப்பட்டுள்ளது. IPV முதன்முதலில் ஆறு மாநிலங்களில் நவம்பர் 2015 இல் தொடங்கப்பட்டது, மேலும் ஏப்ரல் 2016 வாக்கில், இது நாடு தழுவிய அளவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
தட்டம்மை-ரூபெல்லா - MR தடுப்பூசி, தட்டம்மை ஒழிப்பு மற்றும் ரூபெல்லா தடுப்பூசி இந்த இரண்டு நோய்களையும் தடுக்க MR தடுப்பூசி போடப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைப்படி, இந்தியாவில் 9 மாதங்கள் முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இத்தடுப்பூசி முகாம்கள் மூலம் வழங்கப்படுகிறது. 2017 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 9 மாதங்கள் முதல் 15 வயது வரையிலான 41 கோடி குழந்தைகளை இலக்காகக் கொண்டது.
நிமோகாக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி - PCV பாக்டீரியாவால் ஏற்படும் நிமோனியா, மூளைக்காய்ச்சல் மற்றும் இரத்த நச்சுத்தன்மை போன்ற தீவிர நோய்களிலிருந்து குழந்தைகளையும் பெரியவர்களையும் பாதுகாக்கும் ஒரு தடுப்பூசி ஆகும். இது முக்கியமாக 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள், மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. மே 2017 இல் தொடங்கப்பட்டது.
டெட்டனஸ் மற்றும் டிப்தீரியா - Td தடுப்பூசி,பெரியவர்களுக்கு டெட்டனஸ் மற்றும் டிப்தீரியா நோய்களிலிருந்து பாதுகாக்க. 10 மற்றும் 16 வயதுடைய இளம் பருவத்தினர் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு Td தடுப்பூசி வழங்கப்படும்.
சமீபத்தில் நம்மை பெரிதும் அச்சுறுத்திய கொரோன நோயின் தடுப்பூசி பற்றி நாம் அறிவோம். கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகியவை இந்தியாவின் புதிய கோவிட் தடுப்பூசிகள் ஆகும், இவை இந்தியாவின் தடுப்பூசி பட்டியலில் சமீபத்தில் இணைந்தவை. இன்று வரை சுமார் 170 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன, இது நாடு தழுவிய கோவிட் தடுப்பூசி இயக்கத்தில் முன்னணி சுகாதாரப் பணியாளர்களின் சாதனைகளை எடுத்துக் காட்டுகிறது.
சமீபத்தில் இந்தியாவில் அறிமுக படுத்தப்பட்ட கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் HPV தடுப்பூசி, இந்த புற்றுநோய் ஒரு பெண்ணின் கருப்பை வாயில் (Cervix) ஆரம்பிக்கும் புற்றுநோயாகும். அனைத்து வயது பெண்களுக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வரலாம். இது பெரும்பாலும் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஏற்படுகிறது. ஆனால் HPV தடுப்பூசி குறிப்பாக 9-14 வயது பெண்களுக்கு மிகவும் சிறந்தது என குறிப்பிடுகிறார்கள்
தடுப்பூசி போடும் முன் மற்றும் பின் என்ன செய்ய வேண்டும்? தடுப்பூசி சார்ந்த விவரங்களை பற்றி மருத்துவர்களின் அறிவுரைகள். தடுப்பூசி எடுபதற்கு முன், முதலில் நீங்கள் ஏதேனும் நோய்கள் மற்றும் அலர்ஜிக்கு மருந்துகள் எடுத்துகொண்டிருந்தால் அதனை மருத்துவரிடம் தெரிய படுத்த வேண்டும். இது தடுப்பூசி மற்றும் டோஸ் அளவை தீர்மானிக்க உதவுகிறது. காய்ச்சல் அல்லது கடுமையான உடல்நிலை பாதிப்பு இருந்தால் மருத்துவர்கள் அறிவுரையின் படி தடுப்பூசி எடுப்பதை தவிர்க்கவும். உடல்நிலை பற்றி மருத்துவரிடம் கட்டாயம் தெரிவிக்கவும். சாப்பிடாமல் தடுப்பூசி எடுப்பது சிலருக்கு மயக்கம் அல்லது தலைச்சுற்றல் ஏற்படலாம். எனவே, சிறிதளவு உணவு மற்றும் தண்ணீர் உட்கொள்வது சிறந்தது. முன்பு செலுத்திய தடுப்பூசி மற்றும் மருத்துவ பதிவுகளை தவறாமல் எடுத்து செல்ல வேண்டும். இவை மருத்துவருக்கு தடுப்பூசி அட்டவணையை திட்டமிட உதவும். தடுப்பூசி செலுத்தும்போது பதட்டத்தை கட்டுப்படுத்துவது அவசியமாகும். ஏனெனில், பதட்டம் மயக்கம் மற்றும் வேகமாக சுவாசித்தல் போன்ற சில பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.