கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் யாருக்கு வரலாம்? மத்திய அரசின் HPV தடுப்பூசி திட்டம்!

இந்த தடுப்பூசி திட்டம் "Swastha Nari” எனும் நாடு தழுவிய திட்டத்தின் கீழ் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது...
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் யாருக்கு வரலாம்? மத்திய அரசின் HPV தடுப்பூசி திட்டம்!
Published on
Updated on
2 min read

இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 1.2 லட்சம் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறியப்பட்டு வருகிறது. உலகளவில் பெண்களை பாதிக்கும் புற்றுநோய்களில் மார்பக புற்றுநோய்க்கு அடுத்தபடியாக கருப்பை வாய் புற்றுநோய் அதிக அளவில் இருப்பதாக கண்டறியப்பட்டு வருகிறது. பேராபத்து விளைவிக்கும் செச்.பி.வி (HPV - Human Papilloma Virus) தொற்றின் காரணமாக ஏற்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் HPV தடுப்பூசி செலுத்துவதன் மூலம் தடுக்க இயலும். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை தடுக்க பல்வேறு வழிகள் இருந்தாலும், தடுப்பூசி மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் HPV தடுப்பூசிகள் மிக முக்கியமானது.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் என்பது ஒரு பெண்ணின் கருப்பை வாயில் (Cervix) ஆரம்பிக்கும் புற்றுநோயாகும். கர்ப்பப்பை வாய் என்பது யோனியை (பிறப்புக் கால்வாய்) கருப்பையுடன் இணையும் கருப்பையின் கீழ் பகுதியில் உள்ள மெல்லிய திறப்பாகும். இந்தப் புற்றுநோய் மெதுவாக வளர்கிறது. ஆரம்பத்தில், கருப்பை வாயில் உள்ள செல்களில் அசாதாரண மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதை “டிஸ்பிளேசியா” (Dysplasia) என்று அழைக்கப்படுகிறது. இந்த மாற்றங்கள் சரியான சிகிச்சையின்றி காலம் கடந்து இருந்தால், புற்றுநோயாக மாற கூடும் அபாயம் உள்ளது. இந்த புற்றுநோய் அறிகுறிகள், மாதவிடாய் அல்லாத நேரங்களில் உதிரப்போக்கு, அதிகப்படியான மாதவிடாய் இரத்தப்போக்கு, உடலுறவின் போது வலி அல்லது இரத்தப்போக்கு, மற்றும் இடுப்பு பகுதியில் அசாதாரண வலி போன்றவையாகும்.

அனைத்து வயது பெண்களுக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வரலாம். இது பெரும்பாலும் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஏற்படுகிறது. ஆனால் HPV தடுப்பூசி குறிப்பாக 9-14 வயது பெண்களுக்கு மிகவும் சிறந்தது என குறிப்பிடுகிறார்கள். காரணம் இந்த வயதில் வைரசுக்கு ஆளாகும் முன் தடுப்பூசி போடுவது எதிர்காலத்தில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் அபாயத்தைக் கணிசமாகக் குறைகிறது. தற்போது இந்தியாவில் இதற்கான தடுப்பூசி இலவசமாக வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், இந்தத் திட்டம் 14 வயது நிரம்பிய சிறுமிகளை இலக்காகக் கொண்டு, கிட்டத்தட்ட 1.2 கோடி சிறுமிகள் பாதுகாப்பை உள்ளடக்கியது. ஒவ்வொரு ஆண்டும், நாடு முழுவதும் கிட்டத்தட்ட 80,000 புதிய வழக்குகள் மற்றும் 42,000 க்கும் மேற்பட்ட இறப்புகளுக்கு இது காரணமாகிறது. எனவே, பொது சுகாதார நிபுணர்கள் தடுப்பூசியை ஒரு முக்கியமான உத்தியாகக் கருதுகின்றனர். இந்த தடுப்பூசி திட்டம் "Swastha Nari” எனும் நாடு தழுவிய திட்டத்தின் கீழ் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை முதலாவதாக தமிழக அரசு தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி, முதற்கட்டமாக கருப்பை வாய் புற்றுநோய் அதிகம் உள்ள தருமபுரி பெரம்பலூர் திருவண்ணாமலை மற்றும் அரியலூர் அகீகா 4 மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் 30,209 மாணவிகளுக்கு HPV தடுப்பூசி வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கடந்த மாதம் தொடங்கி வைத்தார். இந்நிலையில் வரும் 28 ஆம் தேதி பிரதமர் மோடி நாடு முழுவதும் HPV தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைக்கவுள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ் 14 வயதுக்குட்பட்ட லட்சக்கணக்கான இளம் பெண்களுக்கு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையைச் சேர்ந்த டாக்டர் அபிஷேக் சங்கர், இந்த வெளியீடு ஒரு வரலாற்று மைல்கல் என்று விவரித்தார். இந்த முயற்சி கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை அழிப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது, லட்சக்கணக்கான சிறுமிகளை இந்த நோயிலிருந்து பாதுகாக்கிறது மற்றும் நீண்ட கால சிகிச்சை சுமையைக் குறைக்கிறது, இது உலக சுகாதார அமைப்பின் இலக்குகளுக்கு ஏற்ப உள்ளது என்று அவர் கூறினார். HPV தடுப்பூசி குறித்து பெற்றோர்கள் மற்றும் பெண்கள் முழு தகவலறிந்த முடிவுகளை எடுத்தால், எதிர்காலத்தில் ஏற்படும் பெரிய ஆபத்திலிருந்து தங்களையும் தங்கள் குழந்தைகளையும் பாதுகாக்க முடியும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com