தமிழக சட்டமன்றக் கூட்டத்தில் நேற்று, காவிரியில் மேகதாது அணை கட்டக் கூடாது என்ற தீர்மானம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி வெட்டு ஒன்னு துண்டு இரண்டு என்பதுபோல், தெளிவாக ஆணித்தரமாக பேசினார்.
அதில் பேசிய அவர், "ஆண்டுக்கு 750 டிஎம்சி தண்ணீர் காவிரியில் வருகிறது என்பது ஒரு கணக்கு. இதில் தமிழ்நாட்டுக்கு 404 டிஎம்சிக்கு மேல் உரிமை இருக்கிறது. ஆனால், இது பல்வேறு பேச்சுவார்த்தைகளில் குறைக்கப்பட்டு, இன்றைக்கு 175.25 டிஎம்சி ஆக இருக்கிறது. புதுச்சேரிக்கு 7 டிஎம்சி, கேரளாவுக்கு 30 டிஎம்சி கொடுக்கப்படுகிறது. ஆனால், இந்த 175.25 டிஎம்சி தண்ணீரை ஒவ்வொரு மாதமும் 'டைம் டேபிள்' போடு திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை அப்படி தந்ததாக வரலாற்றில் பதிவு கிடையாது" என்று அவர் ஆவேசமாக பேசினார். காவிரியில் இன்றுவரை உபரி நீர் மட்டும்தான் தமிழ்நாட்டில் நீர் என்று திறக்கப்படுவதை தெளிவாக கூறினார்.
மேலும் பேசிய அவர், "நமக்கு ஜூன் மாதம் 9.18 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு நமக்கு தண்ணீரை திறந்து விட்டிருக்கவேண்டும். ஆனால், இந்த மாதம் அவர்கள் திறந்து விட்டிருக்கக்கூடிய தண்ணீரின் அளவு 2 டிஎம்சிதான். ஜூலை மாதம் 31.24 டிஎம்சி வழங்க வேண்டிய நிலையில், 1 டிஎம்சிக்கும் குறைவாகவே வழங்கப்பட்டது. அப்படியானால், அந்த சட்டத்தையே, தார்மீக நடவடிக்கையையோ, காவிரி ஆணையத்தின் தீர்ப்பினையோ, உச்சநீதிமன்ற தீர்ப்பினையோ எதையுமே கர்நாடக அரசு மதிப்பதில்லை" என்று கட்டமாக விமர்சித்தார். "அதனால்தான் குருவை சாகுபடிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், ஆடிப்பெருக்கிற்கு தண்ணீர்வந்தது. அது எப்படி? என்றால், காவிரி தண்ணீரை கர்நாடக அரசு நமக்காக கொடுத்தது இல்லை. கேரளா, வயநாட்டில் அதிகப்படியான மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. அதைதான் கபினி அணையில் சேமித்து வைக்கிறார்கள். அந்த அணை நிரம்பியதால், வேறு வழியில்லாமல்தான் திறந்து விட்டிருக்கிறார்கள். அது உபரி நீர் அதைத்தான் திறந்துவிட்டிருக்கிறார்கள். ஹாரங்கி அணையில் இருக்கிற தண்ணீரையோ, ஹேமாவதி அணையில் இருக்கிற தண்ணீரையோ, கிருஷ்ணராஜசாகர் அணையில் இருக்கிற தண்ணீரையோ அவர்கள் திறந்து விடவில்லை" என்று விஷயத்தின் தீவிரதைக்குறித்தும் அவர் சட்டமன்றத்தில் குரல் எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், "அதிகப்படியான நீரினால் வெள்ளப்பெருக்கு அவர்கள் ஊருக்கு வந்துவிடக்கூடாது என்றுதான் திறந்துவிட்டிருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் காவிரி விவகாரம் குறித்து அன்புமணி அவர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறார். கடைமடை மாநிலமான தமிழ்நாட்டிடம் அனுமதி கேட்காமல் கர்நாடகா அணை கட்ட முடியுமா? என்ற கேள்விக்கு, முதல்மடை மாநிலங்கள் அனுமதி பெறத் தேவையில்லை என அமைச்சர் பதிலளித்துள்ளார்" என்று நாடாளுமன்றம் வரை ஒலித்த காவிரி விவகாரம் குறித்த விவாதத்தை சட்டமன்றத்தில் எடுத்துவைத்தார்.
மேலும், "மேகதாது அணையின் விரிவான திட்ட அறிக்கைக்கு (DPR) மத்திய அரசோ அல்லது நாடாளுமன்றமோ இதுவரை எந்த அனுமதியும் வழங்கவில்லை என்பதை நீர்வளத் துறை அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தக் கேள்விகளைக் கேட்டு, அதற்கான பதில்களைப் பெற்றதே மருத்துவர் அன்புமணி அவர்கள்தான். அப்படி இருக்கும்போது, ஆலோசனையைக் கேட்க அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்பதே அவரது ஆலோசனை" என்று அவர் பேசினார். மேலும், "மேகதாது அணையை எங்கு கட்டப்போகிறார்கள் தெரியுமா? நம்ம தமிழ்நாட்டிலிருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில்தான் கட்டப்போகிறார்கள். மற்ற அணைகள் எல்லாம் எங்கோ தள்ளி, தள்ளி 200 கிலோமீட்டர், 300 கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்றன. கிருஷ்ணகிரி, தர்மபுரி எல்லையிலேயே 4 கிலோமீட்டர் தொலைவில் எதற்காகக் கட்டப்போகிறார்கள்? ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழ்நாட்டுக்கு வரக்கூடாது என்பதற்காகத்தான்" என்று விஷயத்தை புரியும்படியாகவும், தமிழ்நாடு, நமது சுற்றுசூழல் இவையெல்லாம் எவ்வாறு பாதிக்கப்படும் என்றும் அவர் சட்டமன்றத்தில் விளக்கினார்.
"இந்த அணை கட்டப்படுவதால் மூன்று வனவிலங்கு சரணாலயங்கள் பாதிக்கப்படும். 12,500 ஏக்கர் காடுகள் அழிந்துவிடும். பிலிகிரி ரங்கநாதசுவாமி கோயில் புலிகள் காப்பகம் இருக்கிறது. காவிரி வனவிலங்கு சரணாலயம் இருக்கிறது. அத்துடன், மாதேஸ்வரன் மலை சரணாலயமும் இருக்கிறது. அங்கு இருக்கக்கூடிய நீர்வேம்பு உள்ளிட்ட மருத்துவ குணம் கொண்ட மரங்கள், 700 ஆண்டுகள் பழமையான மரங்கள் என அனைத்தும் தண்ணீரில் மூழ்கிவிடும்." "சாம்பல் நிற நீர்நாய்கள், மகாசீர், மயில் கெண்டை மீன்கள், நான்கு கொம்பு மான்கள் என அனைத்துமே அழிந்துவிடும். இதையெல்லாம் அழித்துவிட்டுத்தான் மேகதாது அணையைக் கட்டப்போகிறார்கள். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும். இதற்காக நிறைய சுற்றுச்சூழல் வழக்குகளைத் தொடர்ந்து, இந்த அணையைக் கட்டவிடாமல் நாம் தடுக்க வேண்டும்" என்று விலங்குகளின் நிலை குறித்தும் விரிவாக பேசினார்.
இறுதியாக பேசிய அவர், "ரெண்டே ரெண்டு ஆப்ஷன்தான். ஒன்று, மேகதாது அணையைக் கட்ட வேண்டும்; இல்லையென்றால், மேகதாது அணையைக் கட்டக்கூடாது. இதற்கு நடுவில் எந்த முயற்சியும் தேவையில்லை. அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, கண்டிப்பாக ஓர் ஒத்த முடிவோடு நாம் டெல்லிக்குச் செல்ல வேண்டும் என்பதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கை" என்று சௌமியா அன்புமணி தெளிவாக விஷத்தை அனைவருக்கும் புரியும் வகையில், ஆணித்தரமாக பேசினார்.
மேலும், மற்றவர்கள் பேசியதை விட சௌமியா அன்புமணி தெளிவாகவும், விஷயத்தின் தீவிரத்தையும் எடுத்துக்கூறும் வகையில் இருந்தது. மேலும், குறைவான நேரம் எடுத்துக்கொண்டு மொத்தத்தையும் புரியவைத்து நேற்றைய தினம் 'ஷோ ஸ்டிலராகவே' மாறினார் என்றுதான் கூறவேண்டும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்