

இந்தியாவில் 2024-25ஆம் நிதியாண்டில் ரூ.20,000-க்கும் அதிகமான நன்கொடைகளை அதிக அளவில் பெற்ற மாநில அரசியல் கட்சிகளில் திமுக முதலிடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் தாக்கல் செய்துள்ள நிதி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு (ADR) மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, 2024-25ஆம் நிதியாண்டில் மாநில அரசியல் கட்சிகள் அறிவித்துள்ள ரூ.20,000-க்கும் அதிகமான நன்கொடைகளின் மொத்த மதிப்பு ரூ.1,051.556 கோடியாக உள்ளது. இது முந்தைய 2023-24ஆம் நிதியாண்டில் இருந்த ரூ.347.693 கோடியுடன் ஒப்பிடும்போது சுமார் மூன்று மடங்கு அதிகமாகும். மேலும், நன்கொடைகளின் எண்ணிக்கையிலும் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்பட்டுள்ளது. 2023-24ஆம் நிதியாண்டில் மாநிலக் கட்சிகள் 2,861 நன்கொடைகளை அறிவித்திருந்த நிலையில், 2024-25ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 5,297 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஒரே ஆண்டில் நன்கொடைகளின் எண்ணிக்கை சுமார் 85 சதவீதம் உயர்ந்துள்ளது. மேலும், 2024-25ஆம் ஆண்டில் அதிக அளவில் நன்கொடை வழங்கிய 10 முக்கிய நன்கொடையாளர்கள் மட்டும் மாநில அரசியல் கட்சிகளுக்கு சுமார் ரூ.594 கோடி வழங்கியுள்ளனர். இதே பிரிவில் 2023-24ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட தொகை ரூ.238.50 கோடியாக இருந்தது.
திமுக முதலிடம்: 2024-25ம் நிதியாண்டில் ரூ.20,000-க்கும் அதிகமான நன்கொடைகளைப் பெற்ற மாநிலக் கட்சிகளின் பட்டியலில் திமுக முதலிடத்தில் உள்ளது. அக்கட்சி 467 நன்கொடைகள் மூலம் ரூ.365.784 கோடி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய 2023-24ஆம் நிதியாண்டில் இந்தப் பட்டியலில் தெலுங்கு தேசம் கட்சி முதலிடத்தில் இருந்தது. அந்த ஆண்டில் 172 நன்கொடைகள் மூலம் அக்கட்சி ரூ.100.1889 கோடி பெற்றிருந்தது.
அதிமுகவுக்கும் நன்கொடை அதிகரிப்பு: தமிழகத்தின் மற்றொரு முக்கிய கட்சியான அதிமுகவின் நன்கொடை வருவாயிலும் கணிசமான உயர்வு ஏற்பட்டுள்ளது. 2023-24ம் நிதியாண்டில் ரூ.3.67 கோடி நன்கொடை பெற்றதாக தெரிவித்திருந்த அதிமுக, 2024-25ம் ஆண்டில் ரூ.66.307 கோடி நன்கொடை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் 92 சதவீதத்துக்கும் அதிகமான தொகை வங்கி பரிமாற்றங்கள் மூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிறுவனங்களிடமிருந்து ரூ.65.75 கோடியும், தனிநபர்களிடமிருந்து சுமார் ரூ.1.32 லட்சமும் பெறப்பட்டதாகவும், பெயர் வெளியிடப்படாத நன்கொடையாளர்களிடமிருந்து ரூ.20 லட்சம் கிடைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
திமுகவின் பெயர் வெளியிடப்படாத நன்கொடைகள்: 2024-25ம் ஆண்டில் பெயர் வெளியிடப்படாத நன்கொடையாளர்களிடமிருந்து அதிக தொகையைப் பெற்ற கட்சியாகவும் திமுக இருப்பதாக ADR ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், திமுக பெற்ற ரூ.365.784 கோடி நன்கொடைகளில் சுமார் ரூ.300 கோடிக்கும் அதிகமான தொகை ரொக்கமாக பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கட்சியின் மொத்த நன்கொடை தொகையில் சுமார் 82.2 சதவீதமாகும். இதற்கு அடுத்தபடியாக ரூ.50.16 கோடி வங்கி பரிமாற்றங்கள் மூலம் பெறப்பட்டுள்ளது. இந்த ரொக்க நன்கொடைகள் அனைத்தும் தனித்தனியாக ரூ.20,000-க்கும் குறைவான நன்கொடைகளாகக் காட்டப்பட்டுள்ளதால், நன்கொடையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை என ADR தெரிவித்துள்ளது.
ரூ.299 கோடி எப்படி வந்தது?: திமுகவின் கணக்கில், ரூ.2,000-க்கும் குறைவான நன்கொடை டிக்கெட்டுகள் மாவட்ட நிர்வாகிகள் மூலம் விநியோகிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.299 கோடியே 86 லட்சத்து 2 ஆயிரத்து 166 வசூலிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும், கலைஞர் நூற்றாண்டு கொண்டாட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மற்றும் பிற கூட்டங்களின் போது ரூ.74 லட்சத்து 16 ஆயிரத்து 822 வசூலிக்கப்பட்டதாகவும் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய தொகைகள் பல சிறிய நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்பட்டதா? அல்லது ஒரே நபர் பல்வேறு சந்தர்ப்பங்களில் ரூ.20,000-க்கும் குறைவான தொகைகளை வழங்கியுள்ளாரா? என்பதை வெளிப்படையான நன்கொடையாளர் விவரங்கள் இல்லாததால் உறுதி செய்ய முடியாது என ADR தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
திமுகவின் விளக்கம் என்ன?: இதுகுறித்து திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் கூறுகையில், கட்சி அதிக நன்கொடைகளைப் பெறுவது புதிதல்ல என்றும், ஒவ்வொரு ஆண்டும் அதிக நன்கொடை பெறும் கட்சிகளில் திமுகவும் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். திமுக பொதுமக்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களிடமிருந்தும் நன்கொடைகளைப் பெறுவதாகவும், அவை தொடர்பான விவரங்கள் வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், நன்கொடையாளர்கள் தங்களது பெயர்களை வெளியிட விரும்பாததற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு நிதியுதவி செய்தது தெரியவந்தால், பிற கட்சிகளின் எதிர்ப்புக்கு அல்லது காழ்ப்புணர்ச்சிக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சத்தால் சிலர் பெயரை வெளியிடத் தயங்கலாம் என்றும் சரவணன் விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் கேள்வி: மறுபுறம், அரசியல் கட்சிகள் தாங்கள் பெறும் நன்கொடைகள் குறித்த முழுமையான கணக்கை வெளிப்படையாக அளிக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார். நன்கொடை வழங்கியவர்கள் யார்? என்பது வெளிப்படையாகத் தெரிய வேண்டும் என்றும், பெயர் குறிப்பிடப்படாத நபர்களிடமிருந்து பெறப்படும் நன்கொடைகள் தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நாம் தமிழர் கட்சிக்கு ரூ.2.87 கோடி: நாம் தமிழர் கட்சி 2023-24ஆம் நிதியாண்டில் ரூ.2.17 கோடி நன்கொடை பெற்றதாக தெரிவித்திருந்த நிலையில், 2024-25ஆம் ஆண்டில் ரூ.2.87 கோடி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளது. இதில் பெயர் வெளியிடப்படாத நன்கொடையாளர்களிடமிருந்து ரூ.1.54 கோடியும், தனிநபர்களிடமிருந்து ரூ.1.32 கோடியும் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேமுதிக 2023-24ம் நிதியாண்டில் எந்த நன்கொடையும் பெறவில்லை என தெரிவித்துள்ளது. ஆனால் 2024-25ஆம் ஆண்டில் ஒரே ஒரு நன்கொடை மூலம் ரூ.50 லட்சம் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிதி தொடர்பான தரவுகள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ADR ஆய்வின்படி, அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம், அதிமுக மற்றும் பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் பெருமளவில் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் நன்கொடைகளைச் சார்ந்திருந்தன. மற்ற வகை நன்கொடையாளர்களிடமிருந்து கிடைத்த பங்களிப்பு ஒப்பீட்டளவில் குறைவாக இருந்ததாக ஆய்வு தெரிவிக்கிறது.
ஒட்டுமொத்தமாக, 2024-25ஆம் நிதியாண்டில் மாநில அரசியல் கட்சிகளுக்கான நன்கொடை தொகை மற்றும் நன்கொடைகளின் எண்ணிக்கை இரண்டுமே கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், குறிப்பாக பெயர் வெளியிடப்படாத சிறிய தொகை நன்கொடைகள் தொடர்பான வெளிப்படைத்தன்மை குறித்து ADR கேள்விகளை எழுப்பியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.