AI Generated Image
ஆன்மீகம்

1000 அடி மலை மூன்றாகப் பிளந்து தோன்றிய அம்மன்… வேலூரில் இருக்கும் அதிசயக் கோவில்!

1008 மூலிகைக் காட்டில் சாமி ஆடும் ஆதி பச்சையம்மன், 1000 அடி மலை மூன்றாய் பிளந்து தோன்றிய பச்சையம்மன் அவதார ரகசியம்

Nanda Kumar (நந்த குமார்)

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு... வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே பாலாத்துவண்ணான் கிராமத்தில் இயற்கையின் கோரத் தாண்டவம் உச்சத்தில் இருந்தது

அங்கிருந்த மலை அடிவாரத்தில், பேய்மழையும் சுழன்றடித்த அந்த மாலை வேளையில், பயங்கர சத்ததுடன் அங்கிருந்த ஒரு பாறை மூன்றாகப் பிளந்து பிரம்மாண்ட சத்தத்துடன் வெடித்தது. அந்தப் பிளவிலிருந்து அக்னிப் பிழம்பாய், பச்சை ஒளியாய், பூமிக்குக் கீழே இருந்து சுயம்புவாய் வெளிப்பட்டாள் ஆதி பச்சையம்மன். அச்சமயம் மழைக்காக ஒதுங்கி நின்ற ஆடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுவர்கள் அக்காட்சியை கண்டு ஊர்மக்களிடம் ஓடிப்போய் தெரிவித்தனர்

விஷயமறிந்து 'சிவன் மலை' என்று அழைக்கப்படும் அந்தப் பாறைமலையை நோக்கி வந்த ஊர்மக்கள், மூன்றாகப் பிளந்து நடுவே ஒளிவீசும் அம்மன் அவதரித்ததை கண்டு மெய்சிலிர்த்துப் போயினர்

பின்னர் அந்தப் பாறை இடுக்கிலேயே சிறிய பந்தலிட்டு அம்மனைப் பூஜித்த கிராம மக்கள், அவளது அருளால் நோய் நொடியின்றி நிம்மதியான வாழ்வைப் பெற்றனர். காலம் கடக்கக் கடக்க, பக்தர்களின் பக்தி பெருகி, இன்று பிரம்மாண்ட கோபுரங்களுடன் கூடிய கம்பீரமான கோவிலாக விஸ்வரூபம் எடுத்துள்ளது இந்த ஆதி பச்சையம்மன் ஆலயம்

இந்தத் தலத்தின் உச்சக்கட்ட சிறப்பு என்னவென்றால், கோவிலைச் சுற்றியுள்ள அடர்ந்த பகுதிகளில் செழித்து வளரும் 1008 மூலிகைச் செடிகள் மீது பட்டு வீசும் காற்று பக்தர்கள் மீது படும் போது அந்த ஒரு நிமிடம் . நெஞ்சில் பாரமாய் இருக்கும் சகல மனக் கஷ்டங்களும், துயரங்களும் தூசு தட்டப்பட்டது போலக் பறந்து போய்விடுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்

பிரம்மாண்டமான கோபுர வாசலில் உள்ள தெய்வச் சிலைகள் பக்தர்களைக் கைகூப்பி வரவேற்க வாழ் முனி,செம் முனி,மகாமுனி, வீரபத்திரர்ஆகிய காவல் தெய்வங்கள் உக்கிரமாகவும் அதே சமயம் அருள்தரும் பார்வையோடும் வீற்றிருக்கின்றனர்.

மூலவராக பச்சை காளியம்மன் சாந்த சொரூபமாகவும் அதே சமயம் நான்கு திருக்கரங்களுடனும் காட்சியளிக்கிறார். அம்மனின் திருமேனி பச்சை வண்ணச் சுதையால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக சுயம்புவாக வெளிப்பட்ட பாறைத் துகள்களும், கல் விக்கிரத்திற்கு இன்று வரை வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அம்மன் அருகில் சிவபெருமான், மற்றும் சப்த கன்னியரின் சிலைகள் பக்தர்களை ஆசிர்வாதிக்கின்றன

சகல மன சங்கடங்களையும் தீர்க்கும் சுற்றியுள்ள 15 கிராம மக்கள் தங்களின் குலதெய்வமாக இந்த ஆதி பச்சையம்மனைக் கொண்டாடி வருகின்றனர்

ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத் திங்கட்கிழமைகளில் இங்கு நடக்கும் விசேஷ பூஜைகள் மிகவும் சக்தி வாய்ந்தவையாக கருதப்படுகிறது. அச்சமயம் சப்த கன்னிகளும் முனிவர்களும் நேரில் வந்து பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுவதாகச் கிராம மக்கள் சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர் .

இயற்கையின் மடியில் அமைதியான சூழலில் வீற்றிருக்கும் இந்த அன்னை பச்சையம்மனின் சன்னதிக்குச் சென்று ஒரு முறை மனதாரத் தரிசனம் செய்தால் எப்பேர் பட்ட மன கஷ்டங்களும் விலகிவிடுவதோடு புதிய மகிழ்ச்சியும் வசந்தமும் வாழ்வில் துளிர்க்கத் தொடங்கும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்