தன்னை ஏமாற்றி கொலை செய்தவனைத் மறுபிறவியில் தேடிழித்து அழித்து கொன்ற பெண் ஒருத்தி, பார்வதி தேவியின் அசுரத்தனமான வீரசக்தியை பெற்று காளியாக உருமாறி விற்றிருக்கும் வரலாற்றுப் பின்னணியைக் கொண்டதுதான் முப்பந்தல் இசக்கியம்மன் திருத்தலம்.
உலகத்தை காத்து ரட்சிக்கும் தெய்வமான இசக்கி அம்மன், நம்மை பெற்ற தாய் போல் பாதுகாக்கிறாள். பக்தர்கள் முழு மனதோடு அவளை சரணாகதி அடைந்து அவளிடம் நம்முடைய துயரங்களை மன்றாடி முறையிட்டால் அவள் தாயாக இருந்து அந்த கஷ்டங்களை தீர்த்து வைப்பாள் என்பது பக்தா்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
அப்படி அன்னையாக இருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் சிறப்பு மிக்க ஆலயம் கன்னியாகுமரி- நெல்லை தேசிய நெடுஞ்சாலையில், நாகர்கோவிலில் இருந்து சுமார் 16 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள ஆரல்வாய்மொழியில் முப்பந்தல் இசக்கியம்மன் என்ற பெயரில் புகழ்பெற்று விளங்குகிறது.
முற்காலத்தில் சேர, சோழ, பண்டியர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொண்ட போது, அவர்களை ஒற்றுமையாக்க எண்ணிய தமிழ் மூதாட்டியான அவ்வையார், மூவேந்தர்களையும் அழைத்து ஒரே இடத்தில் பந்தல் அமைத்து ஒரு சேர விருந்துண்ண வைத்து அளவளாவி, அவர்களுக்குள் இருந்த வேற்றுமையை அகற்றிய சிறப்பு தலமே முப்பந்தல் என அழைக்கப்படுகிறது
முப்பந்தல் அருகே உள்ள பழவூர் கிராமத்தில் இசக்கி என்ற பெண்மணியை ஒருவன் ஏமாற்றி கொலை செய்து விட்டு ஒடிவிடுகிறான். இதனால் உயிரிழந்த இசக்கி மீண்டும் பிறவி எடுத்து அவனை அழித்து விட்டு ஆவேசமாய் முப்பந்தல் நோக்கி வருகிறாள். அப்போது அவளை சாந்தப்படுத்திய அவ்வையார் முப்பந்தலில் அமர வைத்து கோவில் எழுப்பியதாகவும், இதனை கயிலையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த சிவபெருமான் பார்வதியை நோக்க, உடனே பார்வதி தேவி தன் வீரசக்தியை இசக்கிக்கு அளித்தாள் எனவும் தல வரலாறு கூறுகிறது.
பராசக்தியின் மறு உருவமான இசக்கியம்மன் அவ்வையின் வேண்டுகோளை ஏற்று இங்கு கோவில் கொண்டு இருப்பதால் சக்தி மிகுந்த ஆலயமாக இது விளங்குகிறது.
குடும்பத்தையும், குழந்தைகளையும் காத்தருளும் தெய்வமாக அவதரித்த இசக்கி அம்மன் இருக்கும் ஆலயத்தினை சுற்றி, பால்கள்ளு என்ற பெயரில் உள்ள சில செடிகள் காணப்படுமாம், அதனை கிள்ளினால் வெள்ளை நிறத்தில் பால் போன்ற திரவம் வடியும். அதுவே அந்த இடங்களில் இசக்கி அம்மன் உள்ளாள் என்பதின் அடையாளம் என பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
கருவறையில் இசக்கியம்மன் சிவப்பு உடை உடுத்தி, கையில் ஒரு குழந்தையை ஏந்தியபடியே காட்சி தரும் நிலையில் அருகில் கல்யாணியம்மன் காட்சி கொடுக்கிறாள்.
அவ்வைக்கும் இங்கு தனி சன்னிதி உள்ளதோடு வலதுபுறம் பிராமணத்தி அமர்ந்த நிலையில், கருவறை சுற்றுச்சுவரில் வைஷ்ணவி, துர்க்கை, பிரத்தியங்கரா தேவி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.
கோவில் சுற்றுப்பிரகாரத்தில் வலம்புரி விநாயகரும், பாலமுருகனும் காவல் தெய்வங்களான சுடலைமாடனும், அவருக்கு எதிரில் பட்டவராயரும் தனி சன்னதிகளில் காட்சித்தருகின்றனர்
இக்கோயிலில் அவ்வையார் அம்மனுக்கு பூஜை நடந்த பிறகு இசக்கியம்மனுக்கு வழிபாடு செய்யும் வழக்கம் இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகிறது.
ஆலயத்தின் வெளியே மிகப் பெரிய அளவில் இசக்கி அம்மன் இடது காலை மடித்து, வலது காலை தொங்க விட்ட நிலையில் அமர்ந்துள்ள நிலையில் இக்கோயிலில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக ஆடிக்கொடைவிழா விமரிசையாக நடத்தப்படுகிறது. விழாவின் போது நெத்திபட்டம் சூட்டிய யானைகள் பவனி வருவதும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆரதனைகளும் நடத்தப்படுவதோடு பக்தர்கள் பூக்குழியில் இறங்கி நேர்த்தி கடன் செலுத்துகின்றனா்.
நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இசக்கியம்மனுக்கு தங்கம், வெள்ளி, பித்தளை, வெண்கலம் என தங்களால் முடிந்த உலோகங்களால் உடல் உருவம் செய்து செலுத்துவதாக வேண்டிக்கொண்டால் பிரச்சனைகள் தீர்ந்து நலம் பெறுவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
வெகுகாலமாக குழந்தை பாக்கியம், திருமண தடை உள்ளவர்கள், உடல்நல பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்கள் ஆகியோர் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டால் அனைத்து பிரச்னைகளும் தீரும் என்பதால் கன்னியாகுமாரி, திருவனந்தபுரம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆடி மாதத்தில் வைபவ நாடகளில் வருகை தந்து அம்மனை தரிசித்து அருள் பெருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்