kunnakudi murugan temple 
ஆன்மீகம்

தோல் நோய் நீங்கும் இடும்பன் சன்னதி - குன்றக்குடி முருகன் கோவில் தள வரலாறு

ஒரே கருவறையில் மூன்று மயில்களில் தமிழ் கடவுளாம் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையோடு காட்சி தரும் குன்றக்குடி கோயிலை பற்றியும், அதன் பெருமைகள் பற்றி காணலாம்...

Anbarasan

தமிழ்நாட்டில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ள இந்த முருகன் கோயில் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்திருப்பதால் குன்றக்குடி என்று அழைக்கப்படுகிறது

முருகப்பெருமானின் சாபத்தால் மயிலே, மலையாகிப்போனதாகவும், அந்த மலை மீதுதான் முருகப்பெருமான் வீற்றிருப்பதாகவும் தலபுராணம் கூறுகிறது.

மேலும் சில ஆன்மீக தகவல்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்

இந்த மலை மயிலின் வடிவத்தை ஒத்திருப்பதால், மயூரகிரி, மயில்மலை, அரசவரம், கிருஷ்ணநகரம் போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.

வண்ணமயில் மென்மையற்ற மலைக்குன்றானது எப்படி என்பது குறித்த தெய்வீக சம்பவங்கள் நம்மை பிரமிக்கவைக்கின்றன.

ஒருசமயம், அசுரர்கள் தேவர்களைப் பழிவாங்கும் நோக்கில் முருகனின் வாகனமான மயிலிடம் சென்று, பிரம்மதேவரின் அன்னம், திருமாலின் கருடன் ஆகியவை மயிலைவிட வேகமாகப் பறக்கக் கூடியவர்கள் என்று சொன்னதாக உண்மைக்குப் புறம்பான செய்தியைக் கூறினர்.

மேலும் படிக்க: குழந்தை வரம் அருளும் குளத்துப்புழை ஐயப்பன் இத்தனை மகத்துவம் மிக்க தலமா?

அசுரர்களின் சூழ்ச்சி அறியாத மயில் கோபம் அடைந்து,

பிரம்மாண்ட உருவம் எடுத்து அன்னத்தையும், கருடனையும் விழுங்கி விட்டதையடுத்து இந்திரனும் திருமாலும் முருகனிடம் முறையிட்டனர். முருகன் மயிலின் சதியை உணர்ந்து பூலோகத்திற்கு போய் மலையாக கிட என்று சபித்தார்.

இதனால் மனமுடைந்த மயில், அறியாமல் செய்துவிட்டேன்... என் பாவத்திற்கு பிராயச்சித்தம் வழங்குங்கள் என்று மன்றாடி கேட்க, ஒரு நன்னாளில் முருகன் குன்றக்குடிக்கு வந்து மலையாக இருந்த மயிலை உயிர்பித்ததோடு அந்த மலையின் உச்சியில் கோயில் கொண்டு அருளாட்சி செய்து வருகிறார் என்கிறது தல புராணம்.

மேலும் படிக்க: சிவனும் விஷ்ணுவும் ஒன்றாய் அவதரித்த சங்கரநாராயணன் ஆலயம்

மலையைக் கீழ் இருந்து மேல் நோக்கிப் பார்க்கும்போது மயில் தோகை விரித்து இருப்பது போல தோன்றுவதால் அதன் கீழே கோவில் கொண்டிருக்கும் இருக்கும் விநாயகப் பெருமானுக்கு தோகையடி விநாயகர் என்று பெயர் பெற்று, அவரை வணங்கிய பின்பு தான் பக்தர்கள் மலையேறிச் சென்று ஆறுமுகனை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம்.

சுமார் 1200 ஆண்டுகளுக்கு முந்தைய இக்கோயில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டு, பின்னர் மருது சகோதரர்களால் பல திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளது.

மருதுபாண்டியருள் மூத்தவரான பெரிய மருதுவுக்கு முதுகில் ஏற்பட்டிருந்த ராஜ பிளவை என்னும் கட்டியை, குன்றக்குடி முருகப்பெருமானின் அருட்பிரசாதமான திருநீறு குணப்படுத்தியதை அடுத்து நெகிழ்ச்சியில் மலையின் மீது ராஜ கோபுரத்தை எழுப்பியதோடு, மூலவரின் பீடத்தின் கீழ் மாறியிருந்த எந்திரத் தகட்டை செப்பனிட்டு மயில் மண்டபம், உற்சவர் சன்னிதியில் அலங்கார மண்டபங்களை அமைத்தார்.

உற்சவத்துக்குத் தேர் செய்து கொடுத்த மருது பாண்டியர் தைப்பூச நன்னாளன்று தேர்த் திருவிழாவினையும் தொடங்கிவைத்தார்.

குன்றக்குடி முருகன் கோவிலுக்கு மேலே ஏறி செல்ல 149 படிகள் உள்ள நிலையில் அவைகளை கடந்து திருக்கோயிலை அடையும் போது அங்கே கருவறையில், ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் கொண்டு, அழகிய மயில் மீது கம்பீரமாக அமர்ந்து, கிழக்கு நோக்கி அருளாசி தருகிறான் முருகப்பெருமான்.

ஆறுமுகப் பெருமானின் வலமும் இடமுமாக முறையே தனித்தனி மயில் வாகனங்களில் வள்ளியும் தெய்வானையும் வீற்றிருக்கும் காட்சி வேறு எங்கும் காணமுடியாத தரிசனமாகும்.

மலையின் அடிவாரத்தில் தனிக் குடவரை கோவிலில் சிவபெருமான் தேனாற்று நாதராக காட்சியளிப்பதோடு, அம்பாள் அருட்சக்தி என்ற திரு நாமத்துடன் அழகே வடிவாக எழுந்தருளியுள்ளார்.

மேலும் படிக்க: நிலப்பிரச்னைகள் தீர்க்கும் திருச்சுழி பூமிநாதர் கோவில்

குன்றக்குடி மலையில் சண்முகநாதப் பெருமான் வள்ளி தெய்வானையோடு இணைந்து காட்சி அளிப்பதால் இத்தலத்தில் திருமணம் செய்யும் மணமக்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் எனபதால் இந்த இம்மலைக் கோயில் திருமணத் திருத்தலமாக விளங்குகிறது.

குன்றக்குடி முருகனின் அருளாசியால் மருது பாண்டியரின் நோய் குணமானதோடு, கலிங்க நாட்டு இடும்பன் காவடி எடுத்து வந்து இத்தல முருகனை வழிபட்டு வயிற்று வலி நீங்கியதால் இது நோய்கள் தீர்க்கும் மருத்துவ தலமாகவும் விளங்குகிறது

விவசாயிகள் இக்கோவிலில் வீற்றிருக்கும் முருகனின் அருளால் தங்கள் முதல் விளைச்சலை. வைக்கோல் விரித்து அதில் நெல்லைக் கொட்டி பொதிந்து பின்னர் அதனை திரித்துக் கட்டிக் கொண்டு வந்து கோட்டை காவடி என்ற பெயரோடு தலையில் சுமந்து வந்து கோவிலுக்குக் காணிக்கை செலுத்தி வருகின்றனர்

ஆயுள் தோஷம் மற்றும் பெற்றோருக்கு தோஷம் உள்ள தங்கள் குழந்தைகளை இக்கோவிலில் குழந்தையை முருகனுக்குத் தத்தாகக் கொடுத்து விடும் வழக்கம் இன்று வரை நீடித்து வருகிறது.

தோல் நோய் நீங்க கோயில் தீர்த்தத்திலும் இடும்பன் சன்னதியிலும் பக்தர்கள் உப்பும் மிளகும் வாங்கிக் காணிக்கையாக செலுத்தும்போது உப்பு கரைவது போல பக்தர்களின் தோல் நோய் காணாமல் போய்விடுதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த குன்றக்குடி முருகன் கோவிலில் சில வித்தியாசமான நேர்த்திக்கடன்கள் செய்து வரும் பக்தர்கள் கும்பிடு தண்டம் எனும் கோயிலைச் சுற்றிதொடர்ந்து கும்பிட்டு விழுந்து கொண்டே வரும் பிரார்த்தனை செய்து பலனடைந்து வருகின்றனர்

சித்திரை மாதம் பால் பெருக்கு விழாவும், ஆனியில் மகாபிஷேகமும் ஆடியில் திருப்பணி பூஜையும் ஆவணி மாதம் புட்டுத் திருவிழாவும் புரட்டாசி மாதம் அம்பு போடும் திருவிழாவும், ஐப்பசியில் சூரனை வதம் செய்த சூரசம்ஹாரமும் கார்த்திகையில் திருக்கார்த்திகையும் விமரிசையாக இக்கோவிலில் நடைபெறும் போதெல்லாம், பக்தர்கள் பால்காவடி, பன்னீர் காவடி, பறவை காவடி போன்ற காவடிகள் எடுத்து முருகனுக்கு பாலாபிஷேகம் செய்து வணங்கி வருகின்றனர்.

சண்முகார்ச்சனை மற்றும் சண்முக வேள்வியும் நடக்கும் இந்த மயில் வாகனனின் திருக்கோவிலுக்கு ஒரு முறையேனும் சென்று முருகனை தரிசனம் செய்து அருள் பெறுவோம் ஆனந்தம் அடைவோம்

மாலை முரசு செய்திகளுக்காக திருப்பத்தூர் செய்தியாளர் கலைவாணனுடன் கலைமாமணி நந்தகுமார்...

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்