குழந்தை, தெய்வத்திற்கு சமம் என்பார்கள். குழந்தை என்றாலேயே தன்னை பாசத்துடன் நெருங்குபவர்களை கட்டித் தழுவி அன்பை வாரி வழங்கத்தானே செய்யும். இப்படியிருக்க தெய்வமே குழந்தை ரூபத்தில் வீற்றிருந்தால், அந்த குழந்தையை கைகூப்பி வணங்குபவர்களுக்கு எந்தளவுக்கு அன்பும், அருளும் கிடைத்திருக்கும்? இதோ அந்த பேரதிசயத்தை நிகழ்த்திக் காட்டுகிறான் குளத்துப்புழை பாலகன்..
சபரிமலையில் பிரமச்சரிய விரதம் இருக்கும் ஐயப்பன், ஆரியங்காவில் பூரண - புஷ்கலையுடன் மணக் கோலத்தில் காட்சியளிக்கிறார். திருமண மாலை விரும்புவோருக்கு ஆரியங்காவு எத்தகைய மகத்துவம் வாய்ந்ததாக இருக்குமோ, அதேபோல குழந்தை வரம் வேண்டி வருவோருக்கு அருள் பாலிக்கிறார் குளத்துப்புழை ஐயப்பன்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள குளத்துப்புழா என்ற சிற்றூரில் அமைந்துள்ளது இந்த பிரசித்தி பெற்ற தலம். விநாயகர், பூதத்தார், யட்சியம்மன், நாகராஜர் உள்ளிட்ட பரிவாரங்களுக்கு இங்கு தனித்தனியே சன்னதிகள் உள்ளன.
இதில் கலியுக தெய்வம் ஐயப்பன் குழந்தை ரூபத்தில் அமர்ந்து தன்னை காண வரும் பக்தர்களுக்கு அருள் பாலித்து வாழ்க்கையை மேம்படுத்துகிறான்..
கேரள மாநிலம் கொட்டாக்கரை என்ற பகுதியை ஆட்சி செய்த அரசன் அவரது காவலர்களுடன் வனப்பகுதிக்கு சென்றிருந்தார். பொழுதடைந்து விட்டதால் கல்லடை ஆற்றின் கரையில் தங்கும் சூழல் ஏற்பட்டது.
உணவு சமைப்பதற்காக அங்கிருந்தவர்கள் அடுப்புக்காக கற்களைத் தேடி பார்த்தபோது மூன்று கற்களும் ஒரே வடிவில் கிடைத்திருக்கவில்லை. பெரிய கல் ஒன்றை உடைத்தபோது அது எட்டு துண்டுகளாகி அந்த கல்லில் இருந்து ரத்தம் கசிந்தது.
இதை ஆராய்ந்து பார்த்த மன்னர் அதிர்ச்சியடைந்தார். காரணம், பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைதான் அது என தெரியவந்தது. அறியாமல் செய்த தவறுக்கு பரிகாரம் செய்யும் பொருட்டு, அதே இடத்தில் குழந்தை வடிவான ஐயப்பனுக்கு கோயில் கட்டி வழிபாடு நடத்தினார் அந்த அரசன்.
இந்த கோயிலின் கருவறைக்குள், இன்னும் அந்த சிதறிய எட்டு துண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு பூஜைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து வருபவர்கள், குறிப்பாக முதல் முறை விரதம் மேற்கொள்ளும் கன்னிசாமிகள் இந்த குளத்துப்புழா கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து, அருகில் உள்ள கல்லடை ஆற்றில் பொரி போடுவது வழக்கம்.
கம்பீரமாய் காட்சியளிக்கும் ஐயப்பன் மீது மச்சக்கன்னி என்ற இளம்பெண் காதல் கொண்டதாகவும், திருமண ஆசையை தெரிவித்ததாகவும் ஒரு கதை உண்டு. மச்சக்கன்னியின் விருப்பத்திற்கு ஐயப்பன் மறுப்பு தெரிவிக்கவே, இதே பகுதியில் உம்மை பார்த்துக் கொண்டே வாழும் வரத்தையாவது கொடு என மச்சக்கன்னி கேட்க, அதற்கு ஐயப்பன், கல்லடை ஆற்றில் மீனாக வாழும்படி அருளினார்.
இதன் காரணமாகவே ஐயப்ப பக்தர்கள் கல்லடை ஆற்றில் மச்ச அவதாரத்தில் வந்த கன்னியான மீன்களுக்கு பொரி போட்டு வருகின்றனர்.
இந்த கோயிலில் உள்ள பிரகார வாசலானது குழந்தைகள் நுழையும் அளவுக்கே சிறியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் விஜயதசமி உள்ளிட்ட நாட்களில் குழந்தைகளுக்கு கல்வி போதிக்கும் வித்யாரம்பம் இங்கு நடப்பதுண்டு. ஏப்ரல் மாதத்தில் விஷு, மே மாதத்தில் மகோத்சவ திருவிழா இங்கு விமரிசையாக நடைபெறும்.
குளத்துப்புழா ஐயப்பன் கோயிலின் மகத்துவம் ஊரெங்கும் பரவும் நிலையில் பல்வேறு ஊர்களில் கோயில்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இதற்காக இங்கிருந்து பிடிமண் எடுத்துச் செல்லப்பட்டு வெவ்வேறு ஊர்களில் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள அரியப்புரம், ஆலங்குளம் அருகே உள்ள குறிப்பன்குளம் ஆகிய பகுதிகளில் கோயில்கள் எழுப்பப்பட்டு, திருவிழாவின்போது கல்லடையாற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வருவது இன்னும் வழக்கத்தில் உள்ளது.
மாலையணிந்து வரும் ஐயப்ப பக்தர்கள் தங்களுக்கு குழந்தை வரம் வேண்டி இங்குள்ள யட்சியம்மன் சன்னதியில் தொட்டில் கட்டி பட்டுத்துணி வைத்து வழிபாடு செய்கின்றனர். அவ்வாறு வேண்டுதல்களை வைத்த பக்தர்கள் பலரும், அடுத்த சில வருடங்களில் தங்கள் பிள்ளைகளுக்கும் மாலை அணிவித்து ஐயப்பனின் தரிசனத்திற்காக வருகின்றனர் என்றால் எவ்வளவு மகத்துவம் வாய்ந்தவர் இந்த குளத்துப்புழை பால சாஸ்தா?
ஓம் சாமியே சரணம் ஐயப்பா..
மாலைமுரசு செய்திகளுக்காக தென்காசி மாவட்ட செய்தியாளர் கணேசனுடன் சக்தி.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்