பேய்- பிசாசு- தீய செய்வினைகளால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் உள்ள தீய சக்திகளை விரட்டி, புது வாழ்வு தரும் மதுரை பாண்டி முனீஸ்வரர் கோவிலின் தல வரலாறு புராணங்களால் சொல்லப்பட்டவை அல்ல….. வரலாறுகளால் பதிவு செய்யப்பட்ட ஒன்றாகும்.
மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்பதைப் போல, நீதிக்காக உயிர் துறந்த மதுரை மாமன்னன் பாண்டிய நெடுஞ்செழியன், முனீஸ்வர தெய்வமாக அவதாரம் எடுத்து, மதுரை நகரின் மேலமடையில் தொன்மையான கோயிலில் சக்திவாய்ந்த தெய்வமாக விளங்குங்கிறார்.
விதியின் சூழ்ச்சியால் மதுரைக்கு வந்த கோவலன், சதியின் வீழ்ச்சியால் தலை வெட்டப்பட்டதால், மதுரையை எரித்த கண்ணகியின் கதை அனைவருக்கும் அறிந்ததே….
சிதறிய கண்ணகியின் கால் சிலம்பு முத்துக்களால் பதறிப் போன பாண்டிய நெடுஞ்செழியன், நீதி தவறி கோவலனை கொன்ற பாவத்திற்காக செங்கோலை எறிந்து உயிர்துறந்த நிகழ்வும் அனைவருக்கும் தெரிந்ததே…
ஆனால்…அதற்குப் பின்…
உடலைத் துறந்த பாண்டியன் நெடுஞ்செழியனின் ஆன்மா, ஆண்டவனிடம் மன்னிப்பு கேட்டு மன்றாடியது. மன்னரின் கண்ணீருக்கு மனமிறங்கிய இறைவன், நீதிக்காக உயிரை நீத்த நீ.. பூமியில் மீண்டும் பிறந்து என்னை நோக்கி தவமிருந்து நாடிவரும் பக்தர்களின் தீய வினைகளை தீர்த்தருள்வாய் என்று வரம் அளித்தார்
சிவனிடம் பெற்ற வரத்தினால் மீண்டும் மனிதனாய் பிறந்து மகா முனீஸ்வரனாய் உருவாகி, பின்னர் கல் சிலையாகி மண்ணுக்குள் புதையுண்டு கிடந்துள்ளார் பாண்டிய நெடுஞ்செழிய மன்னன்.
காலங்கள் கடந்த நிலையில், மதுரை மாட்டுத்தாவணி அருகே மானகிரி எனும் இடத்தில் வள்ளியம்மை என்பவரின் கனவில் தோன்றிய முனீஸ்வரர், இந்த இடத்தில் மண்ணில் புதையுண்டு இருக்கும் என் சிலையை எடுத்து வழிபடுங்கள்.. வாழ்வில் நல்வழி காட்டுவேன் என்று கூறி மறைந்தார். திடுக்கிட்டுப் போன வள்ளியம்மை பொதுமக்களிடம் நடந்ததை கூறி, அதே இடத்தில் மண்ணை தோண்டி மகாமுனிவரின் சிலையை கண்டெடுத்தனர்.
மண்ணுக்குள் மிரட்டும் விழிகள், முறுக்கிய மீசை, அடர்ந்து நீண்ட ஜடாமுடியோடு காணப்பட்ட சுவாமியின் சிலையை பொதுமக்கள் கோவில் அமைத்து வழிபட தொடங்கினர்
பேய், பிசாசு, காத்துகருப்பு மற்றும் செய்வினைகளால் பாதிக்கப்பட்டு தன்னிலை மறந்த நோயாளிகள், இந்த முனீஸ்வரன் கோவிலில் காலடி எடுத்து வைத்ததுமே கதறும் ஓசைகள் கேட்போரை குலை நடுங்க வைக்கிறது.....
மன்னனாக ஆட்சி செய்தபோது எதிரிகளை வீழ்த்திய பாண்டிய நெடுஞ்செழியன் இங்கு தெய்வமாக வீற்றிருந்து மனிதர்களுக்கு பிடித்த தீய சக்திகளை அகற்றி நல்வாழ்வு தருகிறார்.
கிழக்கு நோக்கி தியான நிலையில் அமர்ந்திருக்கும் தர்ம பாண்டி முனீஸ்வரருக்கு பக்தர்கள் வெண்ணிற ஆடை சாத்தி, பால், மணமிகு தைலம், சந்தனம், ஜவ்வாது, போன்றவைகளால் அபிஷேகங்கள் நடத்தி ஆராதனை செய்கின்றனர்.
இந்த சக்தி மிக்க முனீஸ்வரன் கோவிலில் விநாயகப் பெருமான் முருகனோடும், சமய கருப்பசாமி, ஆண்டிச்சாமி, பரிவார தெய்வங்களும் சக்தி மிக்கதாக காணப்படுகின்றனர்.
இங்குள்ள பாண்டி முனீஸ்வரரால் தங்களைப் பிடித்த தீவினைகள் நீங்கியதையடுத்து நன்றிக்கடனாக ஆடு, மாடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன் தீர்க்கின்றனர்.
மதுரை மக்களின் குல சாமியாக விளங்கும் பாண்டி முனீஸ்வரரை வணங்கி வாகனங்களில் செல்வோரை காத்து வழியெங்கும் துணை நிற்கிறார் பாண்டி முனீஸ்வரர் என்றும் பொதுமக்கள் போற்றி வணங்குகின்றனர்.
ஆண்டுதோறும் சுதந்திர தினத்தில் ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து சமபந்தி விருந்து நடைபெறுவதோடு கிடாய் வெட்டி பொங்கல் வைத்து வழிபாடு செய்வது இக்கோயிலுக்கான சிறப்பில் ஒன்றாகும் .
தினந்தோறும் திருவிழா போல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் வீட்டு சுப காரியங்கள் நல்ல முறையில் நடந்தேறவும், திருமணம் மற்றும் குழந்தை வரம் கேட்டும் இக்கோவிலில் முனீஸ்வரரை வணங்கி வழிபட்டுச் செல்கின்றனர்..
சிறிய கோபுரத்துடன் அமைந்துள்ள இந்த கோவிலில் கீர்த்தி பெரிதாக வீற்றிருக்கும் பாண்டி முனீஸ்வரரை பல லட்சம் குடும்பங்கள் தங்கள் குலதெய்வமாக நினைத்து வழிபாடு செய்கின்றனர்
மன்னனாக இருந்து நீதிக்காக உயிர் துறந்த பாண்டிய நெடுஞ்செழியன் முனீஸ்வராக வீற்றிருக்கும் கோவிலுக்கு செல்வோம், அவரருளால் அனைத்து வலங்களையும் பெற்று வாழ்வோம் ..
மாலைமுரசு செய்திகள் தொலைக்காட்சிக்காக மதுரை செய்தியாளர் மதிவாணன் உடன் கலைமாமணி நந்தகுமார்…
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்