siruvapuri murugan temple history Admin
ஆன்மீகம்

"ஆறு செவ்வாய் கோவிலுக்கு சென்றால் சொந்த வீடு" - சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமியின் அற்புதம்

வீடு இல்லாதவர்களுக்கு புதிய வீடு அமையவும், பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் பிள்ளைப்பேறு பெறவும், கடன் தொல்லைகள் தீரவும், சிறுவாபுரி சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது.

Anbarasan

எந்த செல்வமும் இல்லை, கையிலோ, சேமிப்பிலோ பணம் இல்லை ஆனால் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற லட்சியம் மட்டுமே உள்ளது என ஏங்கி தவிப்பவர்கள் இக்கோவிலில் திருப்புகழ் பதிகத்தை பாடி முருகனை வழிபட்டால் பொருளாதாரம் உயர்வடைந்து சொந்த வீட்டில் குடியேறும் யோகம் நிறைவேறும் என்பது ஐதீகம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்னம்பேடு பகுதியில் வாழைத்தோப்பும் நெல்வயல்களுக்கு நடுவில் ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்ட இந்த கோயிலில் மூலவர் பாலசுப்பிரமணியர் வலது கரத்தில் ஜெபமாலையுடனும் இடது கரத்தில் கமண்டலமும் ஏந்தி பிரம்ம சாஸ்தாவாக அருள் பாலிக்கிறார்.

வாஸ்து அதிபதியான பிரம்மாவை தண்டித்து படைப்பு தொழிலை ஏற்ற கோலத்தில் காட்சி அளிப்பதால் இவரை வழிபடுவோருக்கு வாஸ்து தோஷம் நீங்கி வீடு கட்டுவதில் தடைகள் விலகி நிற்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

பத்மாசூரனை வதம் செய்து வெற்றிபெற்ற முருகப்பெருமான், அங்கிருந்து புறப்பட்டு இந்த சிறுவாபுரியில் இளைப்பாறிய போது .இந்திரன் உள்ளிட்ட தேவர்களுக்கு அமுது அளித்துள்ளார். அப்போது தேவர்கள், முருகனை இங்கு கோவில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் பசும் சோலைகள் நிறைந்த இந்த இடத்தில் பாலசுப்பிரமணியராக கோவில் கொண்டு காட்சி தருவதாக தல புராணங்கள் போற்றி புகழ்பாடுகின்றன.

அசுவமேத யாகம் செய்ய விருப்பம் கொண்ட ராமபிரான் யாகப்பசுவாக குதிரையை ஏவிவிட, அது வால்மீகி முனிவரின் ஆஸ்ரமத்தின் அருகில் வந்தது.அப்போது ஆஸிரமத்தில் வளர்ந்து வந்த ராமனின் பிள்ளைகளான லவனும் குசனும் குதிரையை கட்டிப்போட்டு விட்டனர். இதனை அறிந்து நேரில் வந்த ராமர் தனது பிள்ளைகள் என்று அறியாமல் அவர்களுடன் போரிட்டார்.

தந்தை ராமனை நோக்கி அறியாத சிறுவர்களான லவனும் குசனும் அம்பு விட்ட இடமே சிறுவாபுரி என்று அழைக்கப்படுவதாக தல புராணங்கள் கூறுகிறது.

இன்னும் இந்த சிறுவாபுரியின் சிறப்பாக ராமாயண காலத்தில் குசேலபுரியாக இருந்த இந்த இடமே தற்போது சிறுவாபுரியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இக்கோவிலில் மூர்த்தியான முருகனின் சிற்ப அழகு உள்ளத்தை கொள்ளை கொள்வதோடு அவரின் கரம் பிடித்து, திருமணக் கோலத்தில் நாணி நிற்கும் வள்ளியின் பஞ்சலோக விக்ரகத்தின் அழகுக்கு இணையான ஒரு படிமத்தை உலகில் எங்கும் காண முடியாது.

தன்னை நாடிவரும் பக்தருக்கெல்லாம் வரங்களை வாரிக் கொடுப்பவன். என்று அருணகிரிநாதர் தன் திருப்புகழில்“அருளாலே, மகிழ்வாக, எதிர்காண, வரவேணும், உயர்தோழா, வடிவேலா, முருகேசா, பெருமாளே!” என ஒரு வாக்கியமாக பாடி அமைந்தது போல வேறு எந்த ஒரு திருப்புகழிலும் பாடவில்லை.

அவ்வளவு சக்தி வாய்ந்த ஆறுமுகன், தனது அடியாரான அம்மையாருக்கு வரம் தந்த வரலாறு உண்டு

காரைக்கால் அம்மையார் போலவே முருகம்மை என்ற பெண்ணும் சதா சர்வ காலமும் சக்திவேல் கொண்ட முருகனின் நாமத்தையே உச்சரித்து வந்துள்ளார். தன் மனைவியின் நிலை கண்டு சினம் கொண்ட அவரது கணவர், முருகனை நினைத்து தியானத்தில் இருந்த அந்த அம்மையாரின் கைகளை வெட்டினார்

துண்டாகி போன கைகளையும் மறந்து முருகனையே துதித்ததால் பக்தியை மெட்சிய முருகப்பெருமான் அவர் முன்னே தோன்றி காட்சியளித்ததோடு கைகளையும் மீண்டும் அளித்து அருள் வழங்கியதாக வரலாறுகள் கூறுகின்றன.

கோயிலில் உள்ள விக்கிரகங்களில் முருகனைத்தவிர, அனைத்து விக்ரகங்களும் விலை மதிக்கமுடியாத மரகதம் எனும் பச்சைக்கல்லால் உருவாக்கப்பட்டுள்ளன.

இன்னும் சிறப்பாய் கோயிலின் முன்பகுதியில் உயரமான கொடிமரம் அருகே முருகனின் வாகனமான பச்சை மரகத மயிலின் அழகினை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

இக்கோவிலின் தென்மேற்கு மூலையில் மரகதக் கல்லில் சூரியன் சந்நிதியும் கிழக்கே இராஜ கணபதியும் காட்சி அளிக்கும் நிலையில் மூலவருக்கு தெற்குப்பகுதியில் அண்ணாமலையும், உண்ணாமலையும் எழுந்தருளி காட்சித்தருகின்றனர்

வள்ளியும் முருகப் பெருமானும் கைகோர்த்து நின்ற நிலையில் காட்சி தரும் திருக்கோலத்தினை காண்பது அரிது என்பதால் . நீண்ட காலம் திருமணம் நடக்காதவர்கள் இந்தச் சந்நிதியில் வந்து பூஜைகளும் வழிபாடுகளும் பரிகாரங்களும் செய்தால் விரைவில் திருமணம் கைகூடி வரும் என்பது திண்ணம்.

இத்திருகோவிலில் கண்களை மூடி சிறுவாபுரி முருகனை பார்த்தால் திருமலையில் ஸ்ரீனிவாசன் எப்படி நிற்கிறாரோ அதே போல காட்சி கிடைப்பதால் இந்த தமிழ் கடவுளை பார்த்தாலே ஐஸ்வர்யம் என்றும் நினைத்தாலே துக்கங்கள் அகலும் என கூறியுள்ளனர் சித்தர்கள்..

பூமி சம்பந்தமான அனைத்து கோரிக்கைகள் நிறைவேறவும், வீடு இல்லாதவர்களுக்கு புதிய வீடு அமையவும், பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் பிள்ளைப்பேறு பெறவும், கடன் தொல்லைகள் தீரவும், சிறுவாபுரி சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது.

இத்தலத்தில் நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்தவர்களின் வேண்டுதல்கள் நிறைவேறி வருவது நிதர்சன உண்மையாக விளங்குகிறது

மாலைமுரசு தொலைக்காட்சிக்காக செய்தியாளர் சந்திர சேகருடன் கலைமாமணி நந்தகுமார்

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்